.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, March 22, 2010

காலாவதியான மருந்துகளை சந்தைகளில் விற்று கோ‍டிகளை சுருட்டும் சமூக விரோத கும்பல்!

பொது மக்களே விழித்திருங்கள்!போலி மருந்துகள் காலாவதியான மருந்துகளை சந்தைகளில் விற்று கோ‍டிகளை சுருட்டும் சமூக விரோத கும்பலை காவல் துறை கைது செய்துள்ளது!

போலி மருந்துகளை தயாரிப்பவர்கள் மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பவர்கள் அதற்கு மூளையாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு.


போலி மருந்து தயாரிப்பாளர்கள் காலாவதியான மருந்துகள் விற்பனையாளர்கள் குறித்து தகவல் தெரிந்தாலோ, அல்லது மருந்து பற்றி சந்தேகம் வந்தால் 044 - 24338421 என்ற எண்ணில் தகவல் கூறலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னை நூறடி ரோட்டில் உள்ள ஒரு பெரிய மருந்து வினியோகிக்கும் நிறுவனத்தினர், காலாவதியான மருந்துகளை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் போட்டு விடுவார்கள். அந்த மருந்துகளை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி சுதாராணி இருவரும் ஆட்கள் வைத்து சேகரித்து “தில்லுமுல்லு” செய்து வந்துள்ளனர்.
குப்பை கிடங்கில் போடப்படும் காலாவதியான மருந்துகளை சேகரிக்கும் ரவி, பிறகு அவற்றை புரசைவாக்கத்தில் உள்ள சஞ்சய்குமார் என்பவரது வீட்டுக்கு எடுத்துச் செல்வார். அங்கு மருந்துகளின் தேதிகள், விலைகள் மாற்றப்படும்.

காலாவதியான மருந்து அட்டைகள், பார்ப்பதற்கு புத்தம் புதுசு போல மாற்றப்பட்டு விடும். இந்த மோசடி முடிந்த பிறகு அந்த காலாவதியான மருந்துகளை மருத்துவ நிறுவனங்களில் விற்று விடுவார்கள்.

காலாவதியான மருந்து, மாத்திரைகளில் இப்படி மோசடி செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மனித விரோத கொடூர செயலில் பல்வேறு கும்பல் ரகசியமாக இயங்கி வருகிறது.

கடந்த சில மாதங்களாக காலாவதியான மருந்துகள் நடமாட்டம் அதிகரித்தது. இதை மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கண்டு பிடித்தது. அந்த நிறுவனம் போலிகளை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவமைப்புடன் மருந்துகளை தயாரித்து வெளியிடும்.

உதாரணத்துக்கு கடந்த ஆண்டு ஒரு அட்டையில் 10 மாத்திரைகள் கொண்டதாக வெளியிட்டால், இந்த ஆண்டு 12 அல்லது 15 மாத்திரைகள் இருக்கும் வகையில் தயாரிக்கும்.
சமீபத்தில் இந்த நிறுவனம் ஒரு மருந்துக்கு ரூ. 35 விலை நிர்ணயம் செய்திருந்தது. இது தெரியாமல் காலாவதி மருந்து தயாரிப்பாளர்கள் ரூ. 30 என்று திருத்தி இருந்தனர்.

தங்கள் மருந்து பெயரில் போலி மருந்துகள் விற்பனையாவதாக மருந்துக் கட்டுப் பாட்டுத்துறையிடம் அந்த நிறுவனம் புகார் செய்தது. அதன் பேரில் சென்னையில் கடந்த சனிக்கிழமை தொடங்கி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும் காலாவதியான மருந்துகளை சேகரித்து விற்கும் சுதாராணி, கிடங்கில் பணிபுரிந்த கிருபாகரன், ராமகிருஷ்ணன், விஜயகுமார், கோவிந்தன், தர்மராஜன், ஜெகதாம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் காலாவதியான மருந்து புழக்கத்தில் விடப்பட்டிருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலி மருந்துகளை எப்படி கண்டு பிடிப்பது என்று மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆனால் மக்கள் பயப்பட தேவை இல்லை என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. போலி மருந்து தயாரிப்பாளர்கள் குறித்து தகவல் தெரிந்தாலோ, அல்லது மருந்து பற்றி சந்தேகம் வந்தால் 044 - 24338421 என்ற எண்ணில் தகவல் கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்து விற்பனை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று தமிழகத்தில் போலி மருந்துகளை தயாரிப்பவர்கள் மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, காவல்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். போலி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்வதோடு, காலாவதியான மருந்துகளையும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் மருந்துக்கடைகளில், காவல்துறை மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டு ஆய்வு செய்து இப்பிரச்சினையை அடியோடு களைய உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று துறை அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

மேலும் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறையை வலுவுள்ள துறையாகத் தரம் உயர்த்த வேண்டும் எனவும், பொது மக்களுக்கு மருந்துகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வண்ணம், மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அவ்வப்போது பொது மக்களுக்கு தேவையான எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

இது போன்ற குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபடுபவர்கள் தவிர, மூளையாகச் செயல் படுபவர்களையும் மற்ற மாநிலங்களில் இருந்து இக்குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் சுப்புராஜ், காவல் துறை தலைமை இயக்குனர் லத்திகாசரண், கூடுதல் காவல்துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன், மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: