.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, September 9, 2009

மோடி அரசு நடத்திய இன்னொரு போலி என்கவுண்டர்!

அகமதாபாத்: நரேந்திர மோடி அரசு நடத்திய இன்னொரு போலி என்கவுண்டர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையைச் சேர்ந்த இளம் பெண் இஷ்ரத் ஜெஹான். இவர் மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர். இவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜிஷான் ஜௌஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அதிகாலையில் அகமதாபாத் அருகே போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட நான்கு பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். குஜராத் கலவர சம்பவம் தொடர்பாக மோடியை சுட்டுக் கொல்ல ஊடுறுவியர்கள் என்று அப்போது போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் இது போலி என்கவுண்டர், திட்டமிட்ட படுகொலை என்று அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

அப்போதைய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வன்சாரா மற்றும் காவல்துறை அதிகாரிகளே இந்த கொடூரமான கொலைக்குக் காரணம் என்றும் மாஜிஸ்திரேட் தமங் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சோராபுதீன் என்பவரை போலி எண்கவுண்டர் செய்து கொலை செய்த வழக்கில் சிக்கி வன்சாரா உள்ளிட்ட போலீஸார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்த்கது.

இஷ்ரத் ஜெஹான் வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம், 3 உயர் போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை முன்பு நியமித்தது. இந்த விசாரணைக் குழு, தனது விசாரணையின்போது இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் போலியான முறையில் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டுபிடித்தது.

தங்களது சுய நலத்துக்காக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இஷ்ரத் உள்ளிட்டோரை சுட்டுக் கொன்றதாகவும், பதவி உயர்வு பெறுவதற்காகவும், இந்தக் கொலைகளை செய்து முதல்வர் நரேந்திர மோடியிடம் நற்பெயரை சம்பாதிப்பதற்காகவும் இந்த என்கவுண்டரை திட்டமிட்டு நடத்தியதாகவும் விசாரணைக் குழு தெரிவித்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் கொடூரக் கொலைகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளையும் நீதிபதி 2 பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். வன்சாரா தவிர, என்.கே.அமீன் (இவரும் சோராபுதீன் வழக்கில் கைதானவர்), அகமதாபாத் போலீஸ் கமிஷனர் கே.ஆர்.கெளசிக், பி.பி.பாண்டே, தருன் பரோட் மற்றும் சில மூத்த காவல்துறை அதிகாரிகளே இந்த போலி என்கவுண்டருக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதியின் தீர்ப்பின் விவரம்...

குற்றப் பிரிவு போலீஸார் இஷ்ரத் மற்றும் 3 பேரை மும்பையிலிருந்து 2004ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கடத்தி அகமதாபாத் கொண்டு வந்துள்ளனர். நான்கு பேரையும் ஜூன் 14ம் தேதி இரவு தங்களது கட்டுப்பாட்டு இடத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

ஆனால் ஜூன் 15ம் தேதி அதிகாலையில், அகமதபாத்துக்கு வெளியே உள்ள கோதார்பூர் பகுதியில் வைத்து என்கவுண்டரில் கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

ஆனால் பிரேதப் பரிசோதனையில் அதற்கு முதல் நாள் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள்தான் இஷ்ரத் இறந்திருக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலீஸ் தரப்பு வாதத்தை பொய்யாக்குவதாக அமைந்தது.

தங்களது சதித் திட்டத்தை உண்மையானது போல காட்டுவதற்காக இஷ்ரத்தின் இறந்த உடலை தொடர்ந்து சுட்டு ஏராளமான தோட்டாக்களை உடலில் செலுத்தியுள்ளனர் போலீஸார்.
இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்துமே போலீஸார் போட்ட செட் ஆகும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

தண்டிக்க வேண்டும் - இஷ்ரத் குடும்பம்

அப்பாவியான தங்களது மகளை திட்டமிட்டுக் கொன்று விட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஷ்ரத்தின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகமதாபாத் கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

போலி என்கவுண்டர் அல்ல-குஜராத் அரசு:

இதற்கிடையே, இஷ்ராத் ஜெஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில் கொல்ல்படவில்லை என்று குஜராத் அரசு மறுத்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையையும் அது நிராகரித்துள்ளது.

இதுகுறித்து குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜெய நாராயணன் வியாஸ் கூறுகையில், அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் தமங் வெளியிட்டுள்ள அறிக்கை செல்லாது, அவசர கதியிலானது இது.

இதை எதிர்த்து நாங்கள் அப்பீல் செய்வோம். சட்டத்தின் பார்வையில் இது மிகவும் மோசமான கருத்து.

இதே வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து அதன் விசாரணைக் காலம் இந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை உள்ள நிலையில், எப்படி நீதிபதி தமங் இப்படி ஒரு கருத்தைக் கூறலாம் என்று தெரியவில்லை என்றார் வியாஸ்.

No comments: