இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட நடவடிக்கை வேண்டும்...!
தமிழக முதல்வருக்கு தமுமுக தலைவர் வேண்டுகோள்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார். இக்கடிதத்தின் நகல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு எதிராக எடுத்துவரும் பயங்கரவாத நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் தமிழர் இனத்தை முற்றிலும் அழித்தொழிக்கும் பயங்கரவாதத்தில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது. இதனைக் கண்டித்து தமிழகமே ஓரணியில் திரள நீங்கள் எடுத்துக் கொண்ட வலிமையான நடவடிக்கைகளைப் பாராட்டுகிறேன். இதேபோல், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை மனம்போன போக்கில் சுட்டுத் தள்ளும் இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்காக ஒருமித்த நடவடிக்கை எடுக்கத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இங்கே கூட்டியுள்ள தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைப் பாராட்டுகிறோம். இதே நேரத்தில் தமிழகம் முழுவதுமே ஓர் அணியில் இந்த பிரச்சனையை அணுகுகின்றது என்பதை எடுத்துக்காட்டக் கூட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் சில கட்சிகள் பங்கு கொள்ளாதது மிகுந்த வருத்தத்தைத் தருகின்றது.
இலங்கையில் நடைபெற்று வரும் வன்செயல்களுக்கு சிங்களப் பேரினவாத அரசே முழுமுதல் காரணமாகும். சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்திவரும் வன்செயல்களுக்கு முடிவுகட்ட நமது இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் அதே நேரத்தில் இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்களின் அவல நிலையை தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், மக்களும் மறந்துவிடக் கூடாது.
இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருபவர்களில் சுமார் 17 சதவிகிதத்தினர் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆவர். தொன்மையான வரலாறு கொண்ட இவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாஷைகள் - அகிம்சை அடிப்படையிலான போராட்ட வடிவங்களாக முன் வைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழ் முஸ்லிம்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளார்கள். 1956ஆம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அது தமிழுக்கு உரிய அந்தஸ்தைத் தருவதற்குத் தவறியதைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியவர் தமிழ் முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஏ.எம்.ஏ. அஜீஸ் ஆவார்.
1960ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மாபெரும் சத்தியாகிரகத்தின் போது நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம்களும் அதில் கலந்து கொண்டு சிறையை நிரப்பினர். இதில் முன்னணி வகித்தவர்கள் தமிழரசுக் கட்சியின் பிரச்சாரப் பீரங்கிகளான மசூர் மௌலானா, எருக்கலம்பிட்டி கே.எஸ்.ஏ.கபூர் போன்றோர் ஆவர். 1977 தமிழீழத்துக்கான ஆணை கேட்ட போது கூடக் கல்முனை தொகுதியில் த.வி.கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் சம்சுதின் எனும் தமிழ் முஸ்லிமேயாவார். இதேவேளை தமிழர்களிடத்திலும் பலவகை கட்சிகள் பலவகை கொள்கை அடிப்படையிலான அமைப்புகள் இயங்கியது போல முஸ்லிம்கள் தரப்பிலும் வேறு ஒரு சில தேசியக் கட்சிகளும் அமைப்புகளும் இடம்பிடித்திருந்தன என்பதும் உண்மைதான். ஆனாலும் வடகிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தமிழீழமானது அவர்களுக்கும் உரியது என்றே நம்பி இருந்தனர். இதன்காரணமாகவே 1977 தேர்தலைத் தொடர்ந்தும் 1983 கலவரத்தினைத் தொடர்ந்தும் வடகிழக்குப் பகுதிகளில் உருவாகிய ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து கொண்டனர். கிழக்கு இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் பெருந்தொகையாக முஸ்லிம் இளைஞர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் (நுஞசுடுகு) போராளிகளாய் காணப்பட்டனர்.
இப்படியாகத் தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லிம்களும் ஒருங்கிணந்து செயல்பட்ட நிலை 1985ல் ஏற்பட்ட கலவரத்தில் இருந்து சீர்குலைந்து விட்டது. இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. ஒருபக்கம் சிங்களப் பேரினவாத அரசின் ராணுவம், இன்னொரு பக்கம் தமிழ் போராளிக் குழுக்கள் என இருதரப்பின் தாக்குதல்களுக்கு இலக்காகி துயர நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
1990களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் இருந்து ஒரு இரவுப் பொழுதிலே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்னும் அகதிகளாக தமது சொந்த நாட்டில் வாழும் அவலம் தொடங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் வாழச்சேனை, மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீது மிக மோசமான தாக்குதல் நடைபெற்று அங்கு வாழும் முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. மாவிலாறு அணைக்கட்டுத் தொடர்பான தகராறில் புலிகள் மூதூரில் வாழ்ந்த முஸ்லிம்களை பகடைக்காய்களாக ஒருபக்கம் பயன்படுத்த, இன்னொரு பக்கம் இலங்கை ராணுவம் மூதூரில் குண்டுகள் வீச, அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்வும் வளமும் பெருமளவில் இன்று சிதைந்துவிட்டது. இதனை ஒரு எடுத்துக்காட்டாகவே குறிப்பிடுகிறேன்.
மொத்தத்தில் மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பது போல் ஒருபக்கம் சிங்கள பேரினவாத அரசு, இன்னொரு பக்கம் புலிகள் என இரண்டு தரப்பிற்கும் இடையே சிக்கி இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வு சின்னாபின்னமாகி விட்டது.
இச்சூழலில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகளில் ஒருபகுதியாக அதன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1987ல் ஏற்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டில் தமிழ் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். அந்த ஒப்பந்தம் தமிழ் முஸ்லிம்களை மூன்றாம்தரக் குடிமக்கள் போன்று கருதியது. அந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாதவாறு தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமையும் காப்பாற்றப்படும் வகையில் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சிங்கள பேரினவாதத்தை முறியடிக்கத் தமிழர்களும் தமிழ் முஸ்லிம்களும் ஒருங்கிணந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். தமிழ் முஸ்லிம்களை ஒதுக்கி வைத்துவிட்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்பது அறிவுடைமையாகாது.
தற்போதய மகிந்த ராஜபக்சே அரசு இராணுவ ரீதியான தீர்வை நாடியுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு இந்திய அரசு தனது அனைத்து செல்வாக்குகளையும் பயன்படுத்தி தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் என அனைத்துத் தரப்பு தமிழர்களின் வாழ்வுரிமை காக்கப்பட இன்னும் உறுதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment