.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Monday, March 22, 2010

விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் தோழர் திருமா


நேற்று (21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல - தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர்.

அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது - அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் - சில ‘லெட்டர் பேட்’ (தாவுத் மியன், கமுதி பஷீர்) அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.

மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி - சிறப்பாக இருந்தது.

பேரா.அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்கா விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தோழர் திருமா அவர்கள் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது. கூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ‘மக்கா மஸ்ஜித்’ இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் - பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து - ’இஸ்லாத்தை’ விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார் என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ’நாரே தக்பீர்’ முழக்கம் ஒலித்தது..

கூட்டம் தொடங்கிய பிறகுதான் ஜனாப் எஸ்.எம்.பாக்கர் மேடைக்கு வந்தார். அவரின் வீராவேச உரை - பேரா.அப்துல்லாவிற்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு பதிலடியாக அமைந்தது. அவரது உரை கூடியிருந்தோரை பலமுறை ‘நாரே தக்பிர்’ முழங்க வைத்தது.

கூட்டத்தின் நடுவிலே மீண்டும் தோழர் திருமா விடமிருந்து மக்கா மஸ்ஜித் காஸிமிற்கு வந்த தொலைபேசி அழைப்பு மூலம் தான் மேடைக்கு வந்த பிறகு தான் பேரா.அப்துல்லாஹ் உரையாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஒருவழியாக தோழர்.திருமா வந்து சேர்ந்ததும் - மக்கா மஸ்ஜித் காஸிமி, பகிரங்கமாக அம்மேடையிலேயே அவருக்கு இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தார் - அதைக்கேட்ட கூட்டத்தினரில் பலருக்கு மகிழ்ச்சி - சிலரின் முகம் சுழித்தது.

திருமாவின் உரை - வழக்கம் போல ’கனீரென்று’ தெள்ளத் தெளிவாக அமைந்திருந்தது. இஸ்லாம் பற்றிய அவரின் அவரின் அறிதலும்-புரிதலும் கூட்டத்தில் பலரின் புருவத்தை உயரவைத்தது. மவ்லவி காஸிமின் அழைப்புக்கு பதிலளித்து உரையை தொடங்கியவர், இஸ்லாத்தை ஏற்க அவருக்கு தடைக் கற்களாக அவர் ஏற்றிருக்கும் கட்சித் தலைமை பொறுப்பை - தமிழக அரசியல் சூழ்நிலையை விவரித்தார். ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தலித்களின் முன்னேற்றத்திற்காக - விடுதலைக்காக இன்னமும் செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டார். அவசரப்பட்டு இஸ்லாத்தை தான் ஏற்பதன் மூலம் ‘தலித்களின்’ சமூக-பொருளாதார -சூழ்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றார்.
மேலும், அம்பேத்கார் புத்த மத்தை ஏற்றபோது - அவர் சார்ந்த ’மகர்’ சாதியினர் மட்டுமே பவுத்த மதத்திற்கும் நுழைந்ததாகவும் - பெரும்பான்மையான ‘தாழ்த்தப்பட்ட’ மக்கள் இன்னும் ‘வர்னாசிரம’ பிடியில் இருப்பதாகவும் குறிப்பிட்டு - தமிழகத்திலும் அவ்வாறு நடந்து விடக்கூடாது என்றார்.

உரையின் நிறைவாக இஸ்லாத்திற்குள் நுழைந்தால் ‘வெறும் ஐந்தாயிரம்-பத்தாயிரம் பேருடன்’ நுழையமாட்டேன் - தமிழகத்தில் இருக்கின்ற பறையர் -பள்ளர் - அருந்ததியர் என அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் நுழைவேன் என்று ‘பலத்த’ நாரே தக்பீர் முழக்கத்துக்கு இடையே முழங்கினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேரா.அப்துல்லாஹ், தமிழக நாத்திக-திராவிட அமைப்புகள் கிண்டலும் - கேலியும் கலந்து கண்டனம் தெரிவிக்கும் நேரத்தில், எதைபற்றியும் கவலைப்படாமல் தனக்கு வாழ்த்துரை வழங்க துணிவுடன் வந்த திருமாவுக்கு நன்றி தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்க தன்னை ’இறைவன்’ தூண்டியதாகவும் ‘முஸ்லிம்கள்’ எவரும் தூண்டவில்லை என்றார்.

தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக இருக்கும் ‘குழு மனப்பானமை பற்றி வருந்தினார்.குறிப்பாக, ரியாதிலிருந்து தாயகம் திரும்பிய அவரை வரவேற்க சென்ற முஸ்லிம்கள், அமைப்பு-இயக்க அடிப்படையில் தனித்தனி குழுக்களாக வந்திருந்ததையும் - எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த ‘இந்து முன்னனியினர்’ மட்டும் ஒற்றுமையாக ஒரே கூட்டமாக குழுமியிருந்ததையும் குறிப்பிட்டார்.

தனக்கு மிரட்டல் விடுக்கும் பெரியார் திராவிட கழகத்தினருக்கு தனக்கேயுரிய பாணியில் பதிலளித்தார். நாத்திகம் பரப்பிய போது தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் - தூய இஸ்லாத்தை ஏற்றவுடன் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரைப்பற்றியும் அஞ்சுவதில்லை என்றார். ஏகத்துவத்தை பரப்பும் பணியை மேற்கொள்ள போவதாகவும் - அப்பணிக்காக தன்னை அனைத்து அமைப்பினரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
தோழமையுடன்,
(பிறைநதிபுரத்தான்)

நன்றி:பிறைநதிபுரத்தான்.

Wednesday, March 17, 2010

பேராசிரியர் மதமாற்றம்! அடுத்தது யார் அ.மார்க்ஸா?

பேராசிரியர் மதமாற்றம்

March 17, 2010 – 12:00 am

அன்புள்ள ஜெ

கீழ்க்கண்ட சுட்டியைப் பார்க்கவும். அடுத்தது யார் அ.மார்க்ஸா?

ஜடாயு

சைவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு… (மக்கள் உரிமைக்கு பெரியார் தாசன் அளித்த பேட்டி)

பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். பெரியாhpன் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். கடந்த மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=426:periyardasan-convert-islam&catid=81:tamilnadu&Itemid=198

அன்புள்ள ஜடாயு,

தன் ஆன்மீக ஈடேற்றத்துக்காக ஒருவர் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளலம். அது வரவேற்கத்தக்கது.

நான் பேரா. பெரியார்தாசன் அவர்களை நேரில் அறிவேன். இனிய எளிய மனிதர். இம்மானுவேல் கான்ட் மீது பிடிப்பும் பற்றும் கொண்டவர். என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷுக்கும் அவருக்கும் நெருக்கம் உன்டு. என்னுடன் ஒரு கூட்டத்திலும் கலந்துகோன்டிருக்கிறார். கான்ட் குறித்து அவரிடம் விவாதித்திருக்கிறேன்.

அ.மார்க்ஸைப் பொறுத்தவரை அவரும் இப்படி ஓர் முடிவை எடுக்கும் நிலையில் தயங்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் நான் கேள்விப்படுகிறேன். அதுவும்கூட நல்லதே.

எந்த மதமும் தன்னளவில் மேம்பட்டதோ குறைவனதோ அல்ல. எனக்கு ஒரு வழி ஏற்புடையதாக இருக்கிறது. பிறிதொருவருக்கு அவரது இயல்புகளின் அடிப்படையில் இன்னொரு மதம் ஏற்புடையதாகிறது. ஒருவருக்கு கண்டிப்பான அப்பா தேவைப்படலாம். ஒருவருக்கு நல்லாசிரியனாக மட்டுமே இருக்கும் அப்பா தேவைபப்டலாம். ஒருவருக்கு பாசமே உருவான அப்பா தேவைப்படலாம்.

இஸ்லாம் உறுதியான் பதில்களைச் சொல்லி அறுதியான விசுவாசத்தை எதிர்பார்க்கும் மதம். அந்த விசுவாசமும் கட்டுப்பாடும் அப்துல்லா அவர்களுக்கு சாத்தியமாக்வேன்டுமென்றும், அது அவரை முழுமையும் நிறைவும் கொள்ளச் செய்யுமென்றும் நம்புகிறேன்.

என்னைப்பொறுத்தவரை பொதுவாக இப்படி ஒரு தெளிவான நிலைபாடுகளை இவர்கள் எடுக்கும்போது இவர்களைப் புரிந்துகொள்வது எளிதாகிறது. இவர்களுக்கு இந்து மரபின் மீது உள்ள விமரிசனம் அது இஸ்லாமாக இல்லை என்பதே என்ற புரிதல் அனைத்தையும் எளிதாக்கிவிடுகிறது.

அப்துல்லா அவர்களுக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

ஜெ

Source: http://www.jeyamohan.in/?p=6795

Sunday, March 14, 2010

பேரா. பெரியார் தாசன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்!

ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது...


நேர்காணல் தரும் பேராசிரியர்


நமது குழுவினருடன்...


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.

திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் இங்கு உள்ள இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10ஆண்டுகளாக இஸ்லாத்தை ஆய்வு செய்து வந்ததாகவும், அதன் பின்னரே இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் ‍கொண்டதாகவும் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு இஸ்லாமிய நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புனித உம்ராவை நிறைவேற்றுவதற்காக சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்றுள்ளார் அதன் பின் மதினா செல்கிறார்.

14-03-2010 அன்று ஜித்தாவில் உள்ள செனையா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் "நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

பேரா.பெரியார்தாசன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

குறிப்பு:
நமது மக்கள் உரிமை வார இதழுக்காக பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் அளித்த சிறப்பு நேர்காணலின் தொகுப்பு இன்ஷா அல்லாஹ் நமது த.மு.மு.க இணையத்திலும் நமது வலைப்பூவிலும் காணொளியுடன் காணலாம்.