.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, May 27, 2010

விழாக்கள்! விருதுகள்! பொழுதுபோக்குகள்! பொறுப்பற்ற தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம்


சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டிருக்கிறது.


சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் 2007&08 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் சிவில் அறிக்கைகள் குறித்து மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை பல்வேறு அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்களை அதன் தலைவர் நாகல்சாமி, துறை அதிகாரி ரஜினி ஆகியோர் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

• 2007-08 ஆம் ஆண்டில், 4,545 கோடியாக இருந்த வருவாய் இருப்பு 2008&09&ல் 1452 கோடியாக குறைந்துவிட்டது. அதா வது தமிழக அரசின் ஊதாரித் தனங்களால் 3093 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது.

• முதலீடுக்காக பெற்ற வட்டி விகிதம் 0.50 சதவீதம் வாங்கிய இடத்துக்கு அரசு சார்பில் தண்ட வட்டி செலுத்திய தொகை மட்டும் கூடுதலாக 8.4 சதவீதமாகும்.

• பலதுறைகளில் & பல்வேறு திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதியில் 7,31,145 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. அதாவது கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே செய்த தமிழக அரசு, அதை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை.

34 மானிய திட்டங்களை அமல் படுத்துவதாகக் கூறி எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியில் கூட, வேலை நடக்கவில்லை. அதற்குரிய தொகையான 1,75,856 கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. அந்தப் பணம் என்ன ஆனது? யார், யாருக்கு பிரிக்கப்பட்டது? அல்லது மீண்டும் ஒப்படைக்கப்படுமா? என் பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

• அரசு நடத்தும் சர்க்கரை ஆலைகளின் மூலம் மொத்தம் 1475 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பாம்! இயந்திர பழுது, இயந்திரங்களை கையாள்வதில் அலட்சியம், கரும்பு களை வேறு ஆலைகளுக்கு மாற்று தல், நவீன முறைகளைப் பின்பற் றாதது ஆகியவைதான் இதற்கு காரணம். 1475 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலை, உயர்வு, சர்க்கரை உற்பத்தி, நல்ல விற்பனை ஆகியவை சீராக்கப்பட்டிருக்கும். சர்க்கரை இறக்குமதிக்கும் அவசியம் ஏற் பட்டிருக்காது.

• நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தில் 9.94 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. இதில் சாஃப்ட்வேர் வசதிகள் செய்யப்படாததால், 8.21 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கம்ப்யூட் டர்கள் பயன்படுத்தப்படவேயில்லையாம்.

2004-07-க்குள் மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டித் தருவதாக வாக்களிக்கப்பட்ட 10 ஆயிரம் வீடுகளில் ஆயிரம் வீடுகள் கூட இதுவரை கட்டிக் கொடுக்கப்படவில்லை.

• சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது தொடர்பான தவ றான நில மதிப்பீடு மூலம் 158.63 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆளுங்கட்சியினரின் ‘ரியல் எஸ் டேட்’ தொழிலுக்கு ‘உரம்‘ சேர்க்கும் நடவடிக்கைகளே முக்கியக்காரணம் என கூறப்படுகிறது.

• 11 மாவட்டங்களில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்தில் 1585 ஏக்கர் அரசு நிலம் பயிரிடப்படாத மலைப்பாங்கான பகுதியில் வழங் கப்பட்டதால், அது பயனில் லாமல் போயிருக்கிறது.

• 7 மாவட்டங்களில் சிறப்பு மருத்துவர்களின் சேவையைப் பெறவும், சுகாதார நிலையங்கள், சுகாதார துணை நிலையங்கள் ஆகியவற்றை தரம் உயர்த்தவும், இழந்த சேமிப்பு வசதி, விபத்து சிகிச்சைக்கான அறைகள், அறுவை சிகிச்சை அறைகள் போன்ற வசதிகளை வட்டார ஆரம்ப சுகா தார நிலையங்களில் அமைத் திட வழங்கப்பட்ட 62 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. 2005&2009&ஆம் ஆண்டு களில் பார்வை குறை பாடுகளை சீராக்க 1 லட்சத்து, 89 ஆயிரத்து, 695 குழந்தைகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படவில்லை.

சுருக்கமாக சொல்வதெனில் மக்களின் சுகாதார நலன் சுத்தமாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை தமிழக அரசு மறுக்கவில்லை. மாறாக, சப்பைக்கட்டுக் கட்டுகிறது. எதற் கெடுத்தாலும் தமிழ கத்தை நம்பர் 1 மாநிலம் என தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு முதல் அமைச்சர் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்?

வாரத்திற்கு 2 நாட்கள் பாராட்டு விழா, இரண்டு நாட்கள் விருது வழங்கும் விழா, 2 நாட்கள் சினிமா, கலை தொடர்பான நிகழ்ச்சிகள் என ‘ஜாலியாக’ இருப்பவர்கள் மக்கள் நலனைப் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்?

இதனைக் கண்காணிக்க வேண் டிய அமைச்சர்கள் முதல்வரின் நிகழ்ச்சிகளில் முன் வரிசையில் அமர்வதற்கு காட்டும் ஆர்வத் தையும், ‘கமிஷன்’ குறித்து பேசுவ தற்கு ஒதுக்கும் நேரத்தையும் இதில் ஏனோ காட்டுவதில்லை என்றும் இதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் மேலிடத்தை குளிர் விக்கும் வித்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்களும் அலட்சி யமாக இருக்கிறார்கள் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலவசங்களில் மயங்கும் தமி ழக மக்கள்... கவர்ச்சி அரசிய லில் மதிமயங்கி, மக்களின் பணம் வீணடிக்கப்படும் அரசு நிர்வா கத்தின் அலட்சியத்திற்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.

நாட்டுக்குத் தேவை உறுதியான நிர்வாகத் திறன் கொண்டவர்கள் தானே தவிர கவர்ச்சி அரசியலை செய்யக்கூடியவர்கள் அல்ல.

-கதிரவன்

Saturday, October 31, 2009

கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.


தனியார் ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல. இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.

இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன். இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது... இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி. அட ங்கோ... குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே... அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது. தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள்? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார். தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா... ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும், இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி. தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும், பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’ என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி... ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக கடத்தி கொல்ல வேண்டிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது. ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல...’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கேத் தாங்கலை... இதுல யுகங்கள் தோறுமா?
நன்றி: நடைவண்டி

Tuesday, October 6, 2009

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!


சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து.

பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின் இலக்கு. அதாவது அதுதான் சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம்.

தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம் இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.

அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை என்று சொல்லலாம். அல்லது சொல்ல விழையும் செய்தியை உரத்துக் கூறாமல் ஒளித்துச் சொல்வதுதான் கலைக்கு அழகு என்ற காரணத்தினாலும், இந்த கலை ஞானித்தனத்தை (அல்லது களவாணித்தனத்தை) கமல் கைக்கொண்டிருக்கலாம்.

காரணம் எதுவாக இருப்பினும் படத்தின் வில்லன் ‘ஜனநாயகம்’. ஜனநாயகம் என்ற இந்தக் கருதுகோள் திரைப்படத்தில் என்ன கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறது?

பப்பட் ஷோவில் முசாரப்பின் பயங்கரவாதத்தை கையாளத் தெரியாத கோழிமாக்கான் புஷ், குண்டு வெடிப்பு பயங்கரவாதம் ஆகியவற்றால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படும் முதலமைச்சர் (கருணாநிதி), ஜனநாயகத்தின் அதிகாரத்திற்க்கு கீழ்ப்படியுமாறு மோகன்லாலிடம் கூறும் முதுகெலும்பில்லாத தலைமைச் செயலாளர், எதிர்கால முதல்வராக விரும்பும் விஜயகாந்தைப் போன்ற மட்டமான ஒரு நடிகன்ஸ இவர்கள்தான் ஜனநாயகத்தின் பௌதிக வடிவங்களாக படத்தில் சித்தரிக்கப்படுபவர்கள்.

இவர்கள் மட்டுமல்ல. லஞ்சம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள், தூங்கி வழியும் எஸ்.ஐ முதலான கீழ் வர்க்கத்தினரும் (சாதியும்தான்) எள்ளி நகையாடப்படும் ஜனநாயகத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.

இவர்கள் எள்ளி நகையாடத் தக்கவர்களா இல்லையா என்பதல்ல கேள்வி. இவர்களை எள்ளி நகையாடும் கதாநாயகன் யார் என்பதுதான் விசயம்.

அதிகாரத்தின் இந்தக் கீழ்த்தரமான ஜனநாயகத்தின் கீழ் பணியாற்றுமாறு சபிக்கப்பட்டிருக்கும் மோகன்லால், மனைவியை மறந்து மரணத்தை தழுவத் தயாராக இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி, நடமாடும் உருட்டுக் கட்டையான முஸ்லீம் அதிகாரி.அப்புறம் நம்முடைய காமன்மேன் ஆன கிருஷ்ண பரமாத்மா. இவர்கள்தான் கதாநாயகர்கள்.

இவர்களுடைய கோரிக்கை? அதை மோகன்லால் சொல்கிறார், “எந்தவித குறுக்கீடுகளும் இல்லாத அதிகாரம்”. அந்த அதிகாரத்தை தங்களுக்கு வழங்கும் பட்சத்தில் பயங்கரவாதத்திலிருந்து மக்களை அவர்கள் பாதுகாப்பார்களாம்.

அரசியல் குறுக்கீடுகள் அற்ற அதிகாரம்! இந்த சொற்றொடரை அநேகமாக எல்லா துக்ளக் இதழ்களிலும் நீங்கள் படித்திருக்க்கலாம். இத்தகைய அதிகாரத்தை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வழங்காததனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் முதல் போக்குவரத்து வரை அனைத்துமே புழுத்து நாறுகிறது என்பதுதான் ‘சோ’ வர்க்கத்தின் கருத்து. இவர்களை இன்னும் கொஞ்சம் சுரண்டினால் ‘தகுதியான’ ஐ.ஏ.எஸ் ஆக இருக்க வேண்டும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காண்பிப்பார்கள்.

அர்சத் மேத்தா முதல் அமெரிக்காவின் சப்-பிரைம் மோசடிக்கான சூத்திரத்தை உருவாக்கிய எம்.ஐ.டி கோல்டு மெடலிஸ்டுகள் வரையிலான எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் இவர்கள் தங்கள் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த மாட்டார்கள். ஆகவே இவர்களைப் பொருத்தவரை சில்லறை அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள்தான் பயங்கரவாதம் தலையெடுக்கவும், தலைவிரித்தாடவும் காரணம். ஆகவே அதிகார வர்க்கத்திற்க்கு முழு அதிகாரம் வழங்கினால் அடுத்த கணமே பயங்கரவாதத்தை அவர்கள் ஒழித்து விடுவார்கள்.

அத்வானி முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வரையிலான பலராலும் பல்லாயிரம் முறை கூறப்பட்டு மக்களுடைய பொதுப்புத்தியில் இந்தப் பொய் உறைய வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அசாதாரமான ரவுத்திரம் கொண்டு நான்கு பேரை குண்டு வைத்து கொலை செய்யும் இந்தப் படத்தில் குற்றவாளிகளின் ‘கொடுரமான’ குற்றங்களையோ, அல்லது அதனால் பாதிக்கப்பட்ட காமன்மேனின் துயரத்தையோ கோடம்பாக்கத்திற்கே உரிய சென்டிமெண்ட் காட்சிகளின் மூலம் நியாயப்படுத்த இந்தத் திரைப்படம் முயற்சிக்கவில்லை. ‘நியாயம்’ மக்களுடைய மூளைகளில் ஏற்கனவே உறைந்திருப்பதால் தீர்ப்பு மட்டுமே தேவையாய் இருக்கிறது.

சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாத போதிலும் இப்படம் ரசிகர்களை ஈர்ப்பதற்குக் காரணம் மோகன்லாலுக்கும் கமலஹாசனுக்கும் இடையில் நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டம் ஒரு திரில்லரைப் போல விறுவிறுப்பாக கொண்டு செல்லப்படுகிறது. ப்ரூஸ் வில்லீஸ் நடித்த “டை ஹார்டு” வரிசைப்படங்களில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆட்டம் இங்கே ஹீரோக்களுக்கிடையே நடக்கிறது. ஆட்டத்தின் காய் நகர்த்தல்களில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் வெட்டப்படும் காய்கள் மனிதர்கள் என்பதையும் கூட மறந்து விடுகிறார்கள். ஒரு குத்தாட்டப் பாடலின் அருவெறுப்பான பாடல் வரிகளை கவனிக்காமல் தாளக்கட்டு வழியாக தன்னைப் பறிகொடுக்கும் இரசிகன் போல படத்தின் வடிவம், இரசிகனை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது. விறுவிறுப்பான கதை, நேர்த்தியான எடிட்டிங், என்று இந்தப் படத்தை விதந்து எழுதுபவர்கள் வழுக்கி விழுந்த இடம் இதுதான்.

பயங்கரவாதிகளை கொடிய மிருகங்களுக்கு ஒப்பிட்டு கமலஹாசன் சாடவில்லை. அவர்களை கரப்பான் பூச்சிகளுக்கு ஒப்பிடுகிறார். இந்தக் கொலை கரப்பான் பூச்சிகளை நசுக்குவதைப் போல முக்கியத்துவம் அற்றது. அந்த உயிர்கள் வெறும் பூச்சிகள். இந்தப் பூச்சிகளைக் கொலை செய்த கையோடு தக்காளி பையுடன் வீட்டிற்குப் போய் மணக்க மணக்க சாப்பிட முடியும் – லாக்கப்பில் ரத்தம் சொட்டச் சொட்ட கைதியை அடித்துக் கூழாக்கிவிட்டு இரவில் மனைவியைத் தழுவும் அதிகாரியைப் போல. கரப்பான் பூச்சிகள்! சாதரண மனிதர்களையும் சிறு குற்றவாளிகளையும் ஏன் மொத்தக் குடிமக்களைப் பற்றியும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கொண்டிருக்கும் கருத்து இதுதான்.
அதை கமலஹாசன் சொல்கிறார். ” இந்த பயங்கரவாதிகள் என் அளவுக்கு புத்திசாலிகள் அல்ல” என்கிறார். புத்திசாலித்தனம் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்படுவது எவ்வளவு விகாரமாக இருக்கிறது? பிக்பாக்கட் – ஒரு கரப்பான் பூச்சி, முட்டாள். ஹர்ஷத் மேத்தா – புத்திசாலி. பயங்கரவாதிகளை படுபயங்கரமாக சித்தரிப்பதற்காக அல்கைதா சர்வதேசத் தொடர்பு என்றெல்லாம் அடுக்கி பீதியூட்டும் அதே வர்க்கம் அவர்களை நசுக்கப்பட வேண்டிய அற்ப ஜந்துக்களாகவே கருதுகிறது. இந்தக் கருத்தில் மோகன் லாலுக்கும் மற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் காமன்மேனுக்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. காமன்மேன் என்பவன் போலீஸ் மேன் மோகன்லாலின் ஆல்டர் ஈகோ. அதனால்தான் இறுதிக் காட்சியில் கிட்டத்தட்ட கமலின் காலில் விழுகிறார் மோகன்லால்.

கதையின் முதன்மையான கரு பாசிசம். வெளிப்படையாகவும் அருவெறுக்கத்தக்க முறையில் துருத்திக் கொண்டும் இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் படத்தில் திணிக்கப்பட்டிருந்த போதும், அவை இல்லாமலேயே கூட இத்திரைப்படம் இந்துத்வ பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறது.

ஹேராம் படத்தில் முசுலீம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதனால்தான் இந்து தீவிரவாதியாக தான் மாற நேர்ந்ததாக மிகவும் விலாவாரியாக சித்தரிக்கும் கமல் அந்த நியாயத்தை முசுலீம் தீவிரவாதத்திற்கு வழங்கவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி சம்பவம் என்று காலத்தால் பிந்தைய ஒன்றை கூறுகிறார். கமல் சினிமாவிற்காகவே வாழ்பவர். பெர்ஃபெக்ஷனிஸ்ட். நாற்பதுகளின் கொல்கத்தாவை கண் முன்னால் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து செட் போட்டவர். அப்பேற்பட்ட கமலின் படத்தில் இவ்வளவு அலட்சியமான பிழை எப்படி நேர்ந்தது, ஏன் நேர்ந்தது?

போலீசு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளில் ஏன் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன? ஏனென்றால் குற்றவாளிகளை லாக்கப்பில் அவர்கள் ஏற்கனவே தண்டித்து விடுகிறார்கள். அப்புறம் இரண்டு மாதம் ரிமாண்டு. போலீசைப் பொறுத்தவரை தீர்ப்பு தண்டனை எல்லாம் முடிந்து விட்டது. நீதிமன்றம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத அசவுகரியம். அதனால்தான் அலட்சியம்.

ஒரு முசுலீமை தீவிரவாதி என்று காட்டுவதற்கு “அவன் தாடி வைத்திருந்தால் போதாதா, அதற்கு மேல் என்ன சாட்சியங்கள், பின்புலங்கள், நியாயங்கள் வேண்டும்” என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் பார்வை.

1947க்கு முந்தைய இந்து முசுலீம் கலவரங்களில் இருதரப்பிலும் பல அட்டூழியங்கள் நடந்தன. அதன்பின் இந்தியாவில் சிறுபான்மையாகிவிட்டதால் திருப்பியடிக்கும் சமூக வலிமையை இசுலாமிய சமூகம் இழந்திருந்தது. 90 களுக்குப்பிறகு இந்து மதவெறியர்களுக்கு பதிலடி என்ற பெயரில் குண்டு வெடிப்புக்கள் நடக்க ஆரம்பித்தன். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற போதிலும் இந்து மதவெறியர்களைப் போல கற்பழிப்பு, உயிரோடு எரிப்பு முதலான சமூகமே நடத்தும் கலவரங்களில் இசுலாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.

கடைசிக் காட்சியில் காமன்மேன் கமல் மிக உருக்கமாக வருணிக்கும் கருவறுத்த கதையே ஒரு முசுலீம் பெண்ணுக்கு இந்து வெறியர்கள் இழைத்த கொடுமைதான். 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன. கவுசர்பானுவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருக்குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணை கொல்லுமளவு இந்து மதவெறி தலைவிரித்தாடியது. இதை செய்தவர்கள் இந்து மதவெறியர்கள் என்ற உண்மையை மறைப்பதோடு “இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல். இதுதான் பார்ப்பன நரித்தந்திரம். இசுலாமியர்களுக்கு நடந்த அநீதியையே இசுலாமிய தீவிரவாதிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் இந்த மோசடிக்கு பார்வையாளர்களை சுலபமாக வென்றெடுக்கலாம் என்பது கமலின் துணிபு. அதை இந்தப் படத்தை பார்ப்பவர்கள், பாராட்டியவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலவளவு சம்பவத்தில் தேவர் சாதி பஞ்சாயத்து தலைவரை தலித் மக்கள் கொலை செய்து விட்டதாக காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் உன்னைப் போல ஒருவனும் இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறது. ஆனால் பார்வையாளர்கள், பதிவுலகில் விமரிசனம் எழுதிய பலரும் இது குறித்தெல்லாம் அக்கறைப்படவில்லை என்பது இந்த படம் தோற்றுவித்திருக்கும் அபாயகரமான பிரச்சினையாகும். இவர்களின் அக்கறையின்மை என்பது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த ஊடகங்களின் பொய்யான புனைவுகளில் நிலைகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கவுசர்பானுபோல கீதாபென் என்ற இந்துப்பெண் தனது முசுலீம் கணவனை காப்பாற்றப்போய் இந்து மதவெறியர்களால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதுவும் குஜராத் இனப்படுகொலையில் நடந்த உண்மைதான். ஒரு முசலீமின் விந்து கரு ஒரு இந்துப்பெண்ணின் கருப்பையில் நுழைவதா என்ற அளவுக்கு இந்து மதவெறி குஜராத்தில் தலைவிரித்தாடியது. இன்றைக்கும் முசுலீம் ஆண்களை திருமணம் செய்யும் இந்துப்பெண்களுக்கு எதிராக இந்துப்பெண்களின் ‘கவுரவத்தை’ காப்பாற்றுவதற்காக ஒரு இயக்கத்தையே இந்துமதவெறியர்கள் வட இந்தியாவில் நடத்துகிறார்கள். இந்த சமீபத்திய வரலாற்றின் துயரங்களை தெரிந்து கொண்டால்தான் கமலின் ‘இந்துவுக்கு நடந்தால் என்ன, முசுலீமுக்கு நடந்தால் என்ன’ என்று பேசும் ‘தத்துவ அயோக்கியத்தனத்தை’ புரிந்து கொள்ளமுடியும்.

கவுசர்பானுவின் கதையை கேட்டு உருகி பழிவாங்க நினைத்தால் குஜராத்தின் மோடியையோ, அதற்கு உதவியாக இருந்த போலீசு, அதிகார வர்கக்த்தையோ பழிவாங்கியிருக்க வேண்டும். மாறாக இந்த அநீதிகளை இந்த நாட்டின் சட்ட அரசியல் அமைப்பு தண்டிக்கவில்லை என்று பொறுமி இசுலாமிய தீவிரவாதம் குண்டுவெடிப்பின் மூலம் எதிர்வினையாற்றுகிறது. கமலோ, கவுசர்பானுவின் துயரத்தையே திருடி இசுலாமிய தீவிரவாதிகளுக்கு குண்டு வைக்கிறார். அதற்காக மொட்டை மாடியிலிருந்து ஆவேசப்படுகிறார். தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

ஆனால் உண்மையான குஜராத்தின் யதார்த்தம் வேறுமாதிரி. 2000த்திற்கும் குறைவில்லாத முசுலீம்களை படுகொலை செய்த கும்பலுக்கு தலைமை வகித்த மோடி மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுகிறார். இந்நிலைமையில் ஒரு சராசரி முசுலீமின் மனநிலை எப்படியிருக்கும்?
ராகேஷ் ஷர்மாவால் எடுக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலையை விவரிக்கும் பைனல் சொலியூஷன் (FINAL SOLUTION) என்ற ஆவணப்படத்தின் இறுதியில் ஒரு ஐந்து வயது முசுலீம் சிறுவன் பேசுகிறான். தனது உறவினர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவனிடம் எதிர்காலத்தில் நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று சர்மா கேட்கிறார். அதற்கு அவன் தான் ஒரு போலீசாக வர விரும்புவதாக கூறுகிறான். ஏன் என்று கேட்கிறார் சர்மா. இந்துக்களை கொல்ல வேண்டும் என்று மழலை மொழியில் கூறுகிறது அந்தக் குழந்தை.

கலவரங்களை கண்ணால் கண்டு மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒரு குழந்தையே இப்படி பேசுகிறது என்றால் இசுலாமிய பயங்கரவாதம் ஏன் குண்டு வைக்காது? இந்த யதார்த்தத்தை கமல் கேலிசெய்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.

முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம். ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது. கமலோ இந்தக் கோபம் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்கிறார். காமன்மேன் ஆர்.எஸ்.எஸ்-ஐ விஞ்சுகிறார்.

இரா.முருகனின் அசட்டுத்தனம் காரணமாகவும் கமலின் திமிர்த்தனம் காரணமாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிற இத்தகைய சில வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒருவேளை இவை இல்லை என்றாலும் இது ஒரு இந்துத்வ பாசிஸ்ட் திரைப்படம்தான். இந்திய அரசும் அதிகார வர்க்கமும் தன்னியல்பாக இந்துத்வத்தை வரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அதிகார வர்க்கத்திற்கு அதிகாரம் கொடு என்ற கோரிக்கையே நடைமுறையில் ஒரு இந்துத்வ கோரிக்கைதான். தங்களுடைய சொத்து சுகங்களை பாதுகாக்க வேண்டும் என்று பச்சையாக முதலாளிகள் எந்தக் காலத்தில் கோரியிருக்கிறார்கள்? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கோருவார்கள், கூறுவார்கள். அதுதான் இது, இதுதான் அது. காஷ்மீர் முதல் கோவை வரை முசுலீமாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் கதை வெறும் கதையல்ல. நீதிமன்றங்களில் நீருபிக்கப்பட்ட உண்மை.

காஷ்மீர், குஜராத், கோவை, புலிகள் அனைத்திலும் அதன் அரசியல் காரணங்கள் கழுவி நீக்கப்பட்டு வெறும் பயங்கரவாதம் என்று பேசப்படும் வக்கிரத்தை கமலும் செய்கிறார். இந்த பயங்கரவாத விளக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் போராடும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இசுலாம் பெயர் கொண்ட அனைத்து இயக்கங்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த வகையில் இந்தப்படம் ஒடுக்கப்படும் மக்களுக்கெதிராகவும் தன்னை காட்டிக் கொள்கிறது.

மீனம்பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜிவ் காந்தியின் கொலை எல்லாம் மறக்கப்பட்டதாக கமல் கவலைப்படுகிறார். மாறாக இதைச் சொல்வதன்மூலம் ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தையும் மறக்கச் சொல்கிறார். அதன்மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒரே வரியில் பயங்கரவாதமாக மாற்றப்படுகிறது. குண்டு வெடிப்புகள் குறித்து மக்கள் மறக்கிறார்கள் என்று கவலைப்படும் கமல் கோவை காவலர் செல்வராசு கொலைக்குப்பின் நடந்த முசுலீம் எதிர்ப்பு கலவரத்தையோ, குஜராத் இனப்படுகொலையையோ மக்கள் மறந்து விட்டதாக கவலைப்படவில்லை. ஏனெனில் இந்துமதவெறியர்கள் எதைக் கவலைப்படவேண்டுமென நினைக்கிறார்களோ அவைதான் கமலின் கவலையும் கூட.

எல்லாவற்றிலும் அரசியல் காரணங்களை கழுவிவிட்டு பயங்கரவாதமாக சித்தரிப்புது ஒன்று. இரண்டாவதாக இந்த பயங்கரவாதங்களை ஜனநாயக முறையில் எதிர்கொள்ளமுடியாது, எதிர்பயங்கரவாதத்தினால்தான் முறியடிக்க முடியும் என்பது. மூன்றாவது இந்த பாசிச முறையை பெருமைப்படுத்துவது. இது ஏதோ முசுலீம், ஈழம் பற்றி மட்டுமல்ல, நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதம், இந்தியாவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதம், இப்படி எல்லாவற்றையும் பயங்கரவாதமுத்திரை குத்துவது யாருக்கு சேவையளிக்கிறது?

உலகமெங்கும் பிரச்சினையாக கருதப்படும் இசுலாமிய பயங்கரவாதம் படத்தின் தீவிரவாதி சொல்வது போல காஃபீர்களை அழிக்க வேண்டும் என்ற இசுலாமிய மதவெறியிலிருந்து உருவாகவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும், பகுதிக்கும் தனித்தனியான வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை அகற்றுவதற்காக தாலிபான்களையும், பின்லாடனையும் வளர்த்து விட்டது அமெரிக்கா. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, ஆரம்பத்தில் மதச்சார்பற்றதாக இருந்த இயக்கங்களை மதவாதத்தில் மூழ்கவைத்து சிதைக்கும் வேலையை இந்திய அரசு செய்தது. பின்னர் பாக்கிஸ்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்துமதவெறியர்களின் கலவரங்கள் காரணமாக இருக்கின்றன. கோவை குண்டுவெடிப்பெல்லாம் பாக்கின் மேற்பார்வையில் நடக்கவில்லை. நியாயம் கிடைக்காத முசுலீம் இளைஞனின் கோபமே அதை சாத்தியமாக்குவதற்கு போதுமானதெனும்போது ஐ.எஸ்.ஐக்கு என்ன தேவை இருக்கிறது?

பாலஸ்தீனின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராளிகள் எல்லாரும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக போராடுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் முசுலீம் பயங்கரவாதம் என சித்தரிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

அமெரிக்காவையும், இந்துமதவெறியர்களையும் எதிர்ப்பதற்கு இசுலாமியத் தீவிரவாதத்தின் செயல்கள், வழிமுறைகள் தவறு என்பது வேறு. அதன் வரலாற்றுக்காரணத்தை புரிந்து கொள்ளாமல் மொத்தமாக பயங்கரவாதிகள் என்று காட்டுவது நாட்டில் எந்த அமைதியையும் கொண்டுவந்து விடாது. கமல் முன்வைக்கும் பாசிச அரசு வந்தாலும் இந்த எதிர்வினைகளை அடக்கிவிடமுடியாது. மாறாக இந்தப் பிரச்சினைகள் மட்டுமல்ல எல்லாப் பிரச்சினைகளுக்கும் போராடும் ஜனநாயக, புரட்சிகர சக்திகளை ஒடுக்குவதற்கே அந்த பாசிசம் பயன்படும்.

90களின் ஆரம்பத்தில் நடந்த பம்பாய் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்களை கொலை செய்த சிவசேனாவின் பங்கை மறுக்கும் விதமாக இந்து, முஸ்லீம் இருதரப்பினரும் கலவரம் செய்ததாக மணிரத்தினத்தின் பம்பாய் படம் சித்தரித்திருந்தது. இதைக்கண்டித்து ம.க.இ.கவும் சில இசுலாமிய அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. அதன் பிறகு இந்தப் பணியை தொடர முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் முசுலீம் தீவிரவாதத்தை வைத்து வெளிவந்துவிட்டன. இந்தப் படங்களின் நாயகர்கள் காஷ்மீருக்கும், பாக்கிற்கும் சென்று முசுலீம் பயங்கரவாதிகளை அழித்து வந்தார்கள். அப்படித்தான் பொதுப்புத்தியிலும் “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முசுலீம்கள்தான்” என்று அழுத்தமாக பதிய வைக்கப்பட்டது.

இது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காலத்தில் வாழ்க்கைப்பிரச்சினைகள் , தற்கொலைகள், வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில் எல்லா அரசுகளும் அதற்கு மாற்றாக பயங்கரவாதங்களை எதிரிகளாக வைத்து மக்களைக் காப்பாற்றுவதாக சித்தரிக்கின்றன. அமெரிக்காவில் வீடுகளை ஜப்தியில் இழப்பதை விட ஆப்கானில் பின்லேடனைத் தேடுவது முக்கியமானது; விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்வதை விட காஷ்மீரில் இராணுவத்தை குவித்து மக்களை ஒடுக்குவது முக்கியமானது; இலங்கையில் பொருளாதாரம் போரினால் ஆட்டம் கண்டாலும் புலி ஆதரவாளர்களை முற்றிலும் ஒழிப்பது என்பதற்காக இராணுவத்தை இரண்டுமடங்காக பெரிதுபடுத்துவது முக்கியமானது, தொழிலாளிகள் இழந்து வரும் தொழிற்சங்க உரிமைகளைவிட தடா, பொடா போன்ற சட்டங்களைக் கொண்டு வருவது முக்கியமானது!

இப்படித்தான் உலகெங்கும் அரசுகள் மெல்ல மெல்ல பாசிசமயமாகி வருவதை நியாயப்படுத்திக் கொள்கின்றன. முதலாளித்துவத்தால் ஊழல்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போன தங்களது வளர்ப்பு பிள்ளைகளான அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவது என்ற பெயரில் பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஆளும் வர்க்கங்கள் அப்புறப்படுத்திவருகின்றன. கரப்பான் பூச்சிகளான மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் காட்டிலும், புத்திசாலிகளான தொழில்முறை அதிகாரவர்க்கத்தின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதும் அதிகரித்து வருகிறது.

நம்நாட்டிற்கு ஓட்டுப்போடும் உரிமை வந்த காலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கரை பரம்பரை சொத்தாக வைத்திருக்கும் மூப்பனார்கள், வாண்டையார்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக முடியும் என்றும், அவர்களுக்கு ஏழுதலைமுறைக்கு சொத்து இருப்பதால் பொதுப்பணத்தில் கைவைக்க மாட்டார்கள் என்றும் ஒரு பிரச்சாரம் அடிமை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. சலூன் கடைக்காரனும், டீக்கடைக்காரனும் அரசியலுக்கு வந்தால் லஞ்சம் வாங்காமல் என்ன செய்வான் என்று காங்கிரசுகாரர்களும் சோ முதலானோரும் அன்றும் இன்றும் பேசிவருகிறார்கள்.

இன்று அதே பாட்டுக்கு புது மெட்டு போடப்படுகிறது. மன்மோகன் சிங்கும், மான்டெக் சிங் அலுவாலியாவும், நந்தன் நீலகேணியும் அரசியல்வாதிகள் இல்லை என்பதே அவர்களுக்குரிய விசேட தகுதியாகிவிட்டது. கமலும் கூட மோகன்லால்களிடம் அதிகாரத்தை கொடுப்பதே சரியானது என இந்தப்படத்தில் வலியுறுத்துகிறார்.

அதனால்தான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்தப்படம் முசுலீம் எதிர்ப்பு என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. அடிப்படையில் இது பாசிச மனோபாவத்தை ஆதரிக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனி முசுலீம் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கும், ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கும் நாயகர்கள் தேவையில்லை, காமன்மேனே போதும் என்கிறது உன்னைப் போல் ஒருவன். முசுலீம் தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் (இந்து) நடுத்தரவர்க்கம் கூடவே பாசிசத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கும் கொண்டுவரப்பட்டிருப்பதால் திரையரங்கில் அத்தகைய வசனங்களுக்கு இரசிகர்கள் கைதட்டுகிறார்கள். வெளியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் இந்தக் காமன்மேன்கள் இருட்டில் கைதட்டுவது குறித்து கூச்சப்படுவதில்லை. பிளாக் டிக்கெட் விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் டிக்கெட் விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!

__________________________________________________

பின்குறிப்பு:

“குஜராத் கலவரத்திற்கு நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை” என்று ஒரு ம.க.இ.க தோழர் கேட்டதற்கு அப்படியெல்லாம் கட்டளை போட்டு கவிதை வராது என்று கூறிய மனுஷ்ய புத்திரன் அது பற்றி தனி கட்டுரையே எழுதியிருக்கிறார். படத்தில் இரக்கமற்ற போலீசு அதிகாரியாய் வரும் ஆரிப் எனும் இளைஞன் தனது உருட்டுக்கட்டையால் குற்றவாளிகளை விசாரிப்பதற்கு உதவி செய்வான். இறுதிக் காட்சியில் விடுபட்ட தீவிரவாதியையும் சுட்டுக்கொல்வான். ஆரிஃப்பின் உருட்டுக்கட்டை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எவ்வளவு பயன்பட்டதோ அதே அளவு மனுஷ்யபுத்திரனது பாடலும் பயன்பட்டிருக்கிறது. அந்தப்பாடல் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் உள்ளத்திலிருந்து பீறிட்டெழுந்த்து என்று அவரே குறிப்பிட்டுள்ளதால் அது கூலிக்கு மாரடிக்கும் குண்டாந்தடி அல்ல உணர்வுப்பூர்வமான குண்டாந்தடி என்று பாகுபடுத்திப் பார்ப்பதே நியாயமானது.

கமல் என்ற படைப்பாளியையும், அவரது படைப்பையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டுமென்ற வழக்கமான குரல் போலி முற்போக்கு முகாமிலிருந்து ஒலிக்கிறது. ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.

அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே?

Monday, February 23, 2009

எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆஸ்கார் மேடையில் தமிழில் புகழ்ந்த ரஹ்மான்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ஆஸ்கார் மேடையில் தமிழில் இறைவனைப்புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்.
லாஸ் ஏன்ஜெல்ஸ் 23-02-2009: 81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.


ஸ்லம்டாக் மில்லியனர் (சேரிநாய் கோடிஸ்வரன்) படத்தில் மிகச் சிறந்த இசையமைப்பிற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்க்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இந்தியர் என்ற மகிழ்வில் நாமும் அவரை வாழ்த்துகிறோம்!

ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் திரையரங்கில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.

இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.

விருதைப் பெற்ற பின் ரஹ்மான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன. நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தனது சிந்தனை மொழியான தாய் மொழி தமிழில் பேசி தன் இறைவனுக்கு நன்றி செலுத்தியுள்ளார். உளப்பூர்வமான நன்றி அது.

2 ஆஸ்கார் விருதுகள் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்துள்ள தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் எத்தனை படங்களில் இசை அமைத்துள்ளார் என்று பார்ப்பதை விட எத்தனை விருதுகள் பெற்றுள்ளார் என்று பார்ப்போம்.

அவரைப் பற்றியும் அவரது விருதுகள் பற்றியும் ஒரு சிறிய அலசல்.

தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவரது மகனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார் ஏ.எஸ்.திலீப் குமார். இவர்தான் இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஹ்மானுக்கு 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் குடும்பம் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது. வீட்டில் இருந்த இசைப் பொருட்களையெல்லாம் விற்றும், வாடகைக்கு விட்டும் ஜீவனம் நடத்த வேண்டிய கஷ்டமான நிலை.

இந்த நிலையில், 1989ம் ஆண்டு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார் ரஹ்மான்.

இந்தக் காலகட்டத்தில், கீ போர்ட் பிளேயராக மாறினார் ரஹ்மான். தனது பால்ய நண்பரான டிரம்ஸ் சிவமணி மற்றும் ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து இசைக் குழுக்களில் பணியாற்றத் தொடங்கினார்.

கீபோர்ட், ஹார்மோனியம், கிதார் பியானோ, சிந்தசைசர் ஆகியவற்றில் திறமை மிக்கவராக விளங்கினார்.

ஆனால் சிந்தசைசரில்தான் அவருக்கு அதிக பிரியம். இசையையும், தொழில்நுட்பத்தையும் சரியான கலவையில் இணைக்கும் கருவி என்பதால் சிந்தசைசரில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயின்றார். 11 வது வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார்.

பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார்.

எல்.சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரிகளில் ரஹ்மானும் இணைந்து பங்காற்றினார்.

இதற்கிடையே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை முடித்தார். மேற்கத்திய கிளாசிகல் இசையில் டிகிரியும் முடித்தார்.

1992ம் ஆண்டு ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல் கல். தனியாக சொந்தமாக இசைப் பதிவு மற்றும் இசைக் கலப்பு ஸ்டுடியோவை தொடங்கினார் ரஹ்மான். தனது வீட்டுக்குப் பின்னால் இந்த ஸ்டுடியோவைத் தொடங்கினார். பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப் பெயர். இன்று இந்தியாவின் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஒன்றாக பஞ்சதன் விளங்குகிறது.

இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் தொடங்கிய பின்னர் விளம்பர ஜிங்கிள்ஸ், டிவி நிறுவனங்களின் முகப்பு இசை (ஏசியாநெட், ஜெஜெ டிவி ஆகியவற்றின் முகப்பு இசையை ரஹ்மான்தான் வடிவமைத்தார்) உள்ளிட்ட இசைப் பணிகளில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டார் மணிரத்தினம்.

சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்ட ரஹ்மான், தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான். கூடவே தேசிய விருதையும் பெற்று இந்திய இசைப் பிரியர்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இசையிலும் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது. 1997ல் இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ல் இசையமைத்த லகான், 2003ம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார்.

அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இன்றைய தேதிக்கு நம்ம ஏ.ஆர். ரஹ்மான் மட்டுமே.

ரோஜாவுக்குப் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரஹ்மான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக பரிணமித்தார்.

இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குல்ஸார், மெஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரஹ்மான்.

அதேபோல மணிரத்தினம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடனும் அதிக அளவில் பணியாற்றியவரும் ரஹ்மான்தான்.

குறிப்பாக மணிரத்தினம், ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறிப் போனார் ரஹ்மான்.

திரை இசை தவிர்த்து தனியான ஆல்பங்கள் பலவற்றையும் படைத்துள்ளார் ரஹ்மான்.

1999ம் ஆண்டு ஷோபனா, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மியூனிச் நகரில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து கச்சேரி செய்தார் ரஹ்மான்.

2002ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல நாடக இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பருடன் இணைந்து லண்டன் வெஸ்ட் என்ட் ஹாலில், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகத்திற்கு இசையமைத்தார் ரஹ்மான்.

இதுதான் மேற்கத்திய இசையின் பக்கம் ரஹ்மானின் முத்திரை முதலில் பதிந்த நிகழ்வு.

அதேபோல 2004ம் ஆண்டு லார்ட் ஆப் தி ரிங்ஸ் என்ற நாடகத்திற்கு இசையமைத்தார்.

கடந்த 6 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தூபாய், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 3 வெற்றிகரமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ரஹ்மான்.

2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கனெக்ஷன்ஸ் என்ற திரை இசை அல்லாத ஆல்பத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிகல், இந்துஸ்தானி மற்றும் கவ்வாலி இசையில் திறமை மிக்கவரான ரஹ்மானுக்கு புதிய வடிவில் புதிய இசையைக் கொடுப்பது அல்வா சாப்பிடுவது போல.

ஒவ்வொரு இசை வடிவிலும் உள்ள சிறப்புகளை எடுத்து, புதிய வடிவில் அவற்றை சாமானியர்களுக்கும் ரசிக்கும் வகையில் கொடுத்ததே ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இளம் வயதினருக்கான இசையை மட்டுமே ரஹ்மான் கொடுக்கிறார் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் கூட எந்த நிலையினரும் ரசிக்கக் கூடிய வகையிலேயே ரஹ்மானின் இசை உள்ளது என்பதை இசைப்பிரியர்கள் யாரும் மறுக்க முடியாது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் போலவே அவரது குடும்பப் பயணமும் ரம்மியமானது.
அவரது மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமன் என மூன்று மகள்கள்.
ரஹ்மானின் முதல் படங்கள் ...

தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது.

இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா.

மலையாளத்தில் முதல் படம் யோதா.

தெலுங்கில் முதல் படம் சூப்பர் போலீஸ்.

ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஆப் ஹெவன்.

ரஹ்மானை அலங்கரித்த விருதுகள் ...

எத்தனை படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்தாரோ அதை விட சற்று கூடுதலாகவே விருதுகளைக் குவித்து வைத்திருக்கிறார் ரஹ்மான்.

அவரது விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள்.

இவை தவிர ரஹ்மான் பெற்ற பிற விருதுகள் ..

ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995), பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கல்விக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).

தேசிய விருதுகள்


ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).

பிலிம்பேர் விருதுகள்

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலை பாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை, 2008)

ஸ்க்ரீன் விருது

காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009).

தினகரன் சினி விருதுகள்

மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000).

தமிழக அரசு விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).

கலாசாகர் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

பிலிம்பேன்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

சினி கோயர்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

ஜீ விருது

ஜீ சினி விருது (குரு, 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999), ஜீ சினி விருது (தால், 2000), ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா, 2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஆப் பகத் சிங், 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007),

சர்வதேச இந்திய திரைப்பட விருது


தால் (2000), லகான் (2002), சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007),

குளோபல் இந்தியன் திரை விருது

சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி, 2007)

இதோ இப்போது பெற்றுள்ளவைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்...

வாழ்த்துக்கள் சகோதரா!
Thanks to thatstamiloneindia.in

Thursday, February 12, 2009

Slumdog millionaire: சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்

Slumdog millionaire: Review in TAMIL (Exclusive)
சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்.

- தமிழ்ச்செல்வன்

ஸ்லம்டாக் மில்லினியர் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்க்கை முறையின் தனித்துவத்தை கொச்சைப்படுத்தி இந்தியாவின் மானத்தை ஒரு அயல்நாட்டு திரைப்பட இயக்குனரின் சாமர்த்திய திறமையால் சர்வதேச அரங்கில் அசிங்கப்படுத்தபட்டுள்ளன.

இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்குமா?


கடந்த சில தினங்களுக்கு முன் ''சினிமாத்துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவிற்கான பல விமர்சனங்கள் மின் அஞ்சலின் மூலம் வரப் பெற்றேன் அதில் ஒரு விமர்சனம் அமெரிக்காவிலிருக்கும் ஒரு சகோதரரிடமிருந்து வந்தது இவை...
***----------***
From: Navaneetha Krishnan. USA.
வணக்கம்!
மிகவும் உணர்வுப்பூர்வமான... அதே சமயம் ஒவ்வொரு தமிழனுக்கும், ஏன் ஒவ்வொரு மனிதனுக்கு எழ வேண்டிய உணர்வு! அருமை.... அற்புதம்! நீங்கள் ஏன் இதுபோன்ற வித்தியாசமான, நியாயமான ஆக்கங்களை அதிகாலை.காம் இணையம் வழியாக வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது? இன்னும் அதிகமான உள்ளங்கள் படித்துப் பயன்பெறுமே! ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டுப்போகட்டுமே! நாம் அதைச் செய்வோமே!
இதுதான் என்னை தங்களுக்கு எழுதத் தூண்டியது. இந்த உணர்வுகளை நானும் அடைந்தேன்! அமெரிக்காவின் ஒரு பிரபல திரையரங்கிற்கு, நான் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே பார்க்கச் சென்றது நூறு சதம் உண்மை. ஆனால் வெட்கித்தலைகுனிந்தேன். காரணம் மும்பைக்குடிசைகளைப்பற்றிய காட்சியமைப்புக்காக அல்ல, அந்தத் திரையரங்கில் கிட்டத்தட்ட 2-3 நபர்கள்தான் இந்தியர்கள், இதில் நானும் என் மனைவியும் உட்பட. படம் முடிந்ததும் அனைத்து அமெரிக்கர்களின் பார்வையும் எங்கள் மீது இருந்ததை இப்பொழுதும் நான் உணர்கிறேன். ஏதோ அந்தப்படத்தில் நடித்த ஒரு நடிகர் அங்கு வந்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது எப்படி மேலும் கீழுமாக பார்ப்பார்களோ அது போல் பார்த்ததற்கு காரணம் பிறகுதான் புரிந்தது. பச்சையாகச் சொல்லவேண்டுமெனில் "கேவலப்படுத்தியிருக்கிறார்கள்". இந்தியா வல்லரசாகும், அப்படியாகும், இப்படியாகும் என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த 2009-ல் இன்றும் இந்தியா இப்படித்தான் இருக்கிறதா? என்ற கேள்விக்கனைகளும், இந்தியா மீதான் அவர்களின் தவறான கோணமும் இன்னும் தொடருவதற்கு இது உந்துகோலாக இருக்கிறது. இந்தக்காட்சிகளின்படி இது உண்மையா? பொய்யா? என்ற விவாதம் வேறு. ஆனால் ஆஸ்கார் நோக்கி செல்லும் ரஹ்மான் மாத்திரமே நம் கண்ணுக்குத் தெரிவதால் நாம் இதை இப்போதைக்கு ஒரு புறம் தள்ளிவைப்போம் அவ்வளவே! நன்றி!!
புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
***---------------***
இந்த விமர்சனம் கண்டவுடன் நண்பர் வைத்தீஸ்வரன் மூலம் இத்திரைப்படத்தின் குறுந்தகடு வாங்கப் பெற்று இந்த திரைப்படம் பற்றிய விமர்சனம் எழுதினேன்.

இந்தியாவின் மிகப் பெரும் வர்தக நகரமான, மும்பை நகரை அழகான வார்த்தையில் சொல்வதென்றால் "தூங்காத நகரம்" என்று சொல்லலாம் அந்த நகரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மும்பையின் குடிசை வாழ் பகுதி மக்களின் வாழ்க்கை முறையின் மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்திய மொழிகளில் தயாரித்து வெளியிட்டு வந்த அசிங்கங்கள் ஒரு சில பகுதியாகவே இருந்திருக்கும். ஆனால் சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மறைத்தோ அல்லது தெரியாமலோ வந்த பல சம்பவங்கள் இந்த படத்தின் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தொழில்துறையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்துவரும் ஒரு நாடு. உலகின் அடுத்த வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் வாழ்ந்து வரும் அஹமது சல்மான் ருஸ்டி கடந்த 1988 ம் ஆன்டு தனது 4வது நூலான "சாத்தானின் வேதங்கள்" மூலம் இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதற்காக ருஸ்டியை ஈரான் முன்னாள் அதிபர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி கொலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் மேற்கத்திய நாடுகள் அவனது நரகல் நடை எழுத்திற்கு விருதுகள் வழங்கி கவுரவித்தது. கர்ப்பப்பை சுதந்திரம் (?) கேட்டு எழுதிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமாவுக்கு அமோக வரவேற்புகள் வாழ்த்துக்கள். இது போல் ஒரு சமூகத்தை இழிவு படுத்தி எழுதினால் அதற்கு ஆஸ்கார் விருது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேற்கத்திய நாட்டின் கேடு கெட்ட கலாச்சாரப் புத்தி இது.

மிக திறமைவாய்ந்த இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்கிறதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவனின் அதீத திறமைக்கு ஒரு சான்று. இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதியின்மை , குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில் , சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், மத ரீதியான சண்டைகள், வெட்டுக்குத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை , தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம், அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டி இந்தியாவின் மானத்தை சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்துள்ளான் அந்த இயக்குனன்.

இதன் காரணமாகவோ என்னவோ இந்தியரான அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குலோப் மற்றும் பாஃப்டா விருதுகளும் படத்தொகுப்பாளர், ரெசூல் பூக்குட்டி என்பவருக்கு பாஃப்டா விருதும் வழங்கி அவர்களை ஆஸ்காருக்கும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இந்தியாவை கவுரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அரிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் இந்தப்படத்திற்கு விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.

முதல் சந்தேகம் , ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?

படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்படவில்லை?

நாயகனாக வரும் 2 சகோதரர்களை அதாவது திருடர்களை முஸ்லிம்களாக காட்டியுள்ள இயக்குனன் அதில் ஒரு தொழு‍கைக் காட்சியும் வைத்து 'நான் பாவம் செய்பவன், என்னை மன்னித்துவிடு இறைவா' என்று இறையும் காட்சிகள் தேவையில்லாமல் புகுத்தப்பட்டு முஸ்லிம்களின் கண்ணியத்தை கொச்சைப்படுத்தியிருக்கின்றான்.

கதாநாயகனை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன ...?

அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அனில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும்.

சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொடூரம்?

இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனன் , உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திரங்களை மட்டும் மனிதாபிமானம் உள்ளவர்களாக காட்டுகிறான். அந்த காட்சியிலும் கூட இந்திய போலீஸ்காரர் கொடூரமானவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்படியான காட்சி அமைப்பு கதையின் கருவிற்கு கட்டாயம் தேவை தானா?

அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள். மற்ற நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள்? இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின் எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும்.

கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி ஸ்பூனால் கண்களை தோண்டி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார்படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்?

வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்ற இந்திய நகரங்கள் பற்றி இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழும். ஆனாலும் இயக்குனன் பொய்யான ஒன்றை காட்டவில்லை, நிஜமான ஒரு சில சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறான்.

நாம் அமெரிக்கா போன்ற நாடுகளின் மக்களையும், அந்த நாட்டு வாழ்க்கை முறையையும் கேவலமாக சித்தரித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா?

இந்தியத் திரைப்படத்துறைக்கு அந்த தைரியம் இருக்கிறதா? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?


இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction )விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய ஏகாதிபத்தியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்காக விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலப்படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெறுகிறது.

அந்நிய நாட்டு திரை துறையினரின் இந்த போக்கை இந்திய அரசு தொடர்ந்து அனுமதிக்குமேயானால் வரும் காலங்களில் இந்தியாவின் நீதித்துறை, நிர்வாகத்துறை, பாதுகாப்புத் துறைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் தவறுகள் காட்சிகளாக பதியப்பட்டு சர்வதேச அரங்கில் துகிலுரிக்கப்படும் ஆட்சியாளர்கள் இப்போ‍தே விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டின் பாதுகாப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கிறோம்.

Monday, February 9, 2009

சினிமாத் துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை நாட்டு நலனுக்கு உகந்ததல்ல!

சினிமாத் துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை
நாட்டு நலனுக்கு உகந்ததல்ல!

-தமிழ்ச் செல்வன்

நான் சினிமா பார்பதும் இல்லை அதற்கான விமர்சனங்கள் எழுதுவதும் இல்லை சில நேரங்களில் விமர்சனத்திற்குறிய திரைகாட்சிகளை மட்டும் பார்பதுண்டு ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகத் திரைத்துறையின் மிக உயரிய விருதான 2 விருதுகளைப் பெற்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமை‍யை அடைந்துள்ளார். (ஸ்லம்டாக் மில்லியனர் திரைக்கதையில் நமக்கு உடன்பாடு இல்லை அந்தக் கதை இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்கை முறையை அசிங்கப்படுதியுள்ளதாக அறிந்தேன்) ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரையிலும் ஏ.ஆர். ரஹ்மான் இருக்கிறார். இவரது விசயத்தில் தமிழ்திரை உலகினர் நடந்து கொண்ட விதம் இந்த கட்டுரை எழுதத் தூண்டியது.

ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான். தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர்.

இந்திய மொழிப்படங்கள் தவிர உலக மொழிகளிலும் தனது இசைத் திறமையால் பல விருதுகளைப் ‍வென்றுள்ள ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில மொழி திரைப்படத்திற்கு சிறந்த இசைக்கான விருதுகளை பெற்றுள்ளார். கோல்டன் குலோப் விருதுக்குப் பிறகு பிரிட்டனின் மிக உயர்ந்த விருதான பாஃப்டா விருதும் பெற்றுள்ளார் இந்த பாஃப்டா விருது இவருடன் இன்‍னொரு இந்தியருக்கும் கிடைத்துள்ளது.

இரண்டு மிக உயர்ந்த விருதுகளைப் பெரும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 43 வயதே ஆகும் ஏ.ஆர்.ரஹ்மான் சாதித்தது ஏராளம் இவரது ஆடியோ சீடிக்கள் 200 மில்லியனுக்கு மேல் விற்று சாதனை படைத்துள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இவரது விருதுகளையும் சாதனைகளையும் விவரிக்க இந்த ஆக்கமல்ல ஆனால் உலக அளவில் இவ்வளவு பெரிய சாதனைகள் புரிந்துள்ள ஒரு இந்தியன் குறிப்பாக தமிழனை நமது தமிழ் திரை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பது தான் நமது விமர்சனம்.

காதல் கோட்டை படத்திற்காக முதன் முதலாக தேசிய விருதை பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய இயக்குனர் அகத்தியனுக்கு தங்கத்தில் அடையாள அட்டை கொடுத்து கௌரவித்தது இயக்குனர்கள் சங்கம். அதுமட்டுமல்ல... பாலசந்தர், பாரதிராஜா போன்ற இரு ஜாம்பவான்களும் இருபுறமும் நின்று அவரை மலர் தூவி வரவேற்றார்கள்.

1944 ல் நிறுவப்பட்ட கோல்டன் குளோப் 66 ஆண்டுகளாக உலகில் உள்ள பல்வேறு சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது பற்றி சொல்பவர்கள் 'ஆஸ்கர் விருதுக்கு முந்தைய அடையாளம் இது' என்றே பெருமையாக பேசுவார்கள். இந்த முறை பிரிட்டிஷ் இயக்குனர் டேனி போயல் இயக்கிய 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் இசையமைத்தற்காக விருது பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவ்வளவு பெரிய விருது பெற்ற ஒரு தமிழனின் சாதனை, இடைத்தேர்தல் வேட்டு சத்தத்தில் சப்தமில்லாமல் போனதது தான் வேதனை. அந்த நேரத்தில் தமிழ் தொலைக்காட்சிகள் இடைத்தேர்தல் முடிவும், அது குறித்த அலசல்களிலும் தன் முகத்தை திருப்பிக் கொண்டன சரி, இதுவாவது போகட்டும் இது அவாள்களின் வாடிக்கை. விருதை வாங்கிக் கொண்டு சென்னை வந்திறங்கிய ரஹ்மானை வரவேற்க தமிழ் திரையுலகத்தை சேர்ந்த வி.ஐ.பிகள் ஒருவருமே போகவில்லை என்பது தான் தமிழ்த் திரை உலகினரின் இன்னோரு முகத்தை காட்டியது.

ரஹ்மானின் ரசிகர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தார்கள். நாதஸ்வரம், மேளதாளத்தோடு அவரது வீடு வரைக்கும் கொண்டு போய் சேர்த்தார்கள். அன்று நள்ளிரவு மட்டும் அந்த தெரு திருவிழா கோலம் பூண்டிருந்தது. திரை உலகத்தப் பொருத்தவரை ஒரு தெருவோடு முடிந்து போகிற கொண்டாட்டமா இது? அங்கும் மதவாதம் காவி சிந்தனை தலைக்கேறிப் போயுள்ளது.

ஆச்சரியத்தில் மூழ்கி அதிர்ச்சியில் இருந்தவர்கள் அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்த உயரிய விருதுகளைப் பெற்ற முதல் இந்தியன் என்ற முறையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ தலைவர் அத்வானி, அபிஷேக் பச்சன், ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்தினார்கள். கை நிறைய மலர் கொத்துகளோடு நேரில் வந்து வாழ்த்தினார்கள் நடிகர் பார்த்திபனும், இயக்குனர் கதிரும். தமிழக முதல்வர் கலைஞரும், அதிமுக தலைவி ஜெயலலிதாவும் தங்கள் வாழ்த்துகளை அறிக்கையாகவே வெளியிட்டார்கள்.

தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், ரஹ்மானுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்கள்.

சிம்பொனி இசையமைத்து வந்த ஒரு தமிழனுக்கு தமிழ்த்திரை உலகமும் தமிழ் ஊடகங்களும் ஆண்டுக்கு மேல் புகழ்பாடி வந்தன இது போன்ற சாதனையை யாரும் இதுவரைசெய்திடவில்லை என்ற ஒரு மாயைதோற்றம் அப்போது உண்டாக்கப்பட்டது.

உலகின் மிக உயரிய விருதுகளைப் பெற்று வந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் ஒரு முஸ்லீம் எனபதால் பாராட்டுவிழா அடுத்த கட்டம் பாராட்டுவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள் திரை உலகிலும் ஊறிப்போயுள்ள செங்பரிவார சிந்தனை கொண்ட கூத்தாடிக்கூட்டம்.

இவர்கள் தான் இந்திய சுதந்திர வரலாற்றை சரியாக படம் பிடித்து மக்களுக்கு சொல்பவர்களா? இந்தியாவின் சுதந்திரத்தில் தனது விகிதாச்சாரத்திற்கும் அதிகமான தியாகங்களைக் கொண்ட சமுதாயம் இந்த முஸ்லிம் சமுதாயம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு உடலாலும், உயிராலும், பொருளாளும் அதிகமதிகம் தியாகங்கள் செய்த சமுதாயம் இந்த முஸ்லிம் சமுதாயம்.

ஆனால் இந்த காவி சிந்தனை கொண்ட கூத்தாடிக்கூட்டம் முஸ்லிம்களை தேச விரோதிகளாகவும், திருடர்களாகவும், தமிழை இன்று வரை அதன் உயிரோட்டத்தோடு அதன் கருத்துக்களை சிதைக்காமல் பேசும் முஸ்லிம்களை தமிழை கடன் வாங்கி கொத்திக் கொதறி பேசுபவர்கள் போல் சித்தரித்து வெகுஜன மக்களிடமிருந்து தனிமை படுத்தும் பணியை நீண்ட காலம் செய்து வந்தார்கள்.

சுதந்திர தியாகச் செம்மல் மைசூர் சிங்கம் திப்புவின் தியாகம் எத்தனை திரைப்படங்களில் சொல்லப்பட்டுள்ளது? மாவீரன் மருதநாயகம் என்ற கான்சாகிப்பின் வரலாறு எங்காவது சொல்லப்பட்டுள்ளதா? நமது பகுதியைச் (தென்தமிழ்நாடு)சேர்ந்த சுதந்திர போராட்ட மாவீரனா? யார் அவன்? என்று அந்த வரலாற்றை தேடிச் சென்ற நடிகர் கமல்ஹாசனுக்கு அந்த சுதந்திர போராட்ட வீரன் கான்சாகிப் என்று அடையாளம் கண்டவுடன் அவன் ஒரு முஸ்லிம் என்பதால் அந்த வரலாற்று உண்மையை அங்கேயே போட்டு மூடிவிட்டார் நன்றாக நடிக்கத் தெரிந்த அந்த நடிகர்.

விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் ஒரு முஸ்லிம் என்பதால் பாராட்டக்கூட மனமில்லாத காவி சிந்தனை கொண்ட கூத்தாடிக் கூட்டத்தின் முகம் இதோ கிழிந்து தொங்குகிறது.

கமல், மணிரத்தினம், போன்றவர்கள் என்றால்... இல்லாத ஒன்று உறுவாக்கப்படுகிறது இந்த ஊடகங்களால்.

திரைப்படம் மற்றும் அதன் துறையில் நமக்கு உடன்பாடில்லை அது சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் கேடு கெட்ட துறை. ஆனால் ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி மிகப் பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் மிகப் பெரிய ஊடகம் என்பது உண்மை.

இப்போது நடந்து கொண்ட இந்த நிகழ்வு இந்தத் துறையில் ஊரிப்போயியுள்ள சாதிய வெறி காவி சிந்தனை எந்த அளவுக்கு தலைக்கேறிப்போயுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சிந்தனை மாற்றத்தை உண்டுபன்னும் இந்தத்துறையில் காவி சிந்தனை ஊறிப்போயுள்ளது நாட்டு நலனுக்கு உகந்தததல்ல.