.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, March 28, 2012

பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர் தம்பதியை தாக்கிய தர்மபுரி டிஎஸ்பி-பொய் வழக்கு மிரட்டல் வேறு!
நடுரோட்டில் ஆசிரியர் தம்பதியை தாக்கிய தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தானபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
நடுரோட்டில் ஆசிரியர் தம்பதியை தாக்கிய தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தானபாண்டியன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார். ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.
விண்ணப்பங்கள் வாங்குவதற்காக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண், பெண் பட்டதாரிகள் அதிகாலை முதலே வந்திருந்தனர். இதனால் அதிகளவில் கூட்டம் அலைமோதியது. அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் விண்ணப்பம் கைவசம் இல்லை, விற்று தீர்ந்து விட்டது.
எனவே நாளை (இன்று) வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். இதைக்கேள்விப்பட்ட விண்ணப்பம் வாங்க வந்தவர்கள் நேற்றே சொல்லி இருந்தால், நாங்கள் வராமல் இருப்போம், மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து வந்து இருக்கும் நாங்கள் எப்படி மீண்டும் ஊருக்கு சென்று விட்டு வருவது என்றனர். இதற்கிடையே சிலர் விண்ணப்பங்களை கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது.
இதையடுத்து பட்டதாரிகள் கல்வி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு விண்ணப்பம் தர மறுக்கிறீர்கள், ஆனால் வெளியில் தாராளமாக கூடுதல் விலைக்கு விற்கிறார்களே என்றனர். இதனால் அதிகாரிகளுக்கும், பட்டதாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பட்டதாரிகள் விண்ணப்பம் வழங்கும் மையத்தின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த தர்மபுரி நகர டி.எஸ்.பி. சந்தானபாண்டியன், மறியலை கைவிட்டு கல்வி அலுவலகத்திற்கு வரும் படி அழைத்தார். அதற்கு ஒரு ஆசிரியை வர முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது டி.எஸ்.பி. சந்தானபாண்டியனுக்கும், அந்த ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த ஆசிரியையை பிடித்து தள்ளி அப்புறப்படுத்தினர்.
சமயத்தில் அங்கு வந்த ஆசிரியையின் கணவரும் அங்கு வந்து, விண்ணப்பம் கிடைக்காவிட்டால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதால் தான் கேட்கிறோம் என்று கூறினார். அப்போது ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் அந்த ஆசிரியரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். எல்லோர் முன்பும் கை நீட்டி அடிக்கும் இந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்? என்று அந்த ஆசிரியர் மீண்டும் கேட்டார்.
அப்போதும் டி.எஸ்.பி. சந்தாபாண்டியன் அவரை தாக்கினார். டி.எஸ்.பி.யால் தாக்கப்பட்ட கணவரை மீட்க வந்த ஆசிரியையும் டி.எஸ்.பி. கழுத்தை பிடித்து கீழே தள்ளினார். ஆசிரியை தடுமாறி கீழே விழுந்தார். டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் ஆசிரியர் தம்பதி மீது தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங்கிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நேற்று நடந்த சம்பவம் ஒரு சாதாரண சம்பவம். சம்பந்தப்பட்டவர்கள் மறியலுக்கு முயன்ற போது போலீசார் 5 நிமிடத்தில் அதை சரி செய்து விட்டனர். அதில் சம்பந்தப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து வருத்தம் தெரிவித்து சென்று விட்டனர். அதனால் அது தொடர்பாக எந்த வழக்குகளும், பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இன்று அது தொடர்பாக டி.எஸ்.பி. சந்தானபாண்டியனிடம் அறிக்கை கேட்டு இருக்கிறேன். தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மபுரியில் டி.எஸ்.பி. சந்தானபாண்டியனால் தாக்கப்பட்ட ஆசிரியரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை குடிபோதையில் இருந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். எனவே அவரை போலீசார் விட்டு இருக்கிறார்கள். டி.எஸ்.பி.யால் தாக்கப்பட்ட நபர் மீது பொய் வழக்கு போட நடவடிக்கை எடுத்து தாக்கப்பட்டவரையே மன்னிப்பும் வாங்க வைத்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Video at Facebook : https://www.facebook.com/photo.php?v=416244121725015

And youtube: http://youtu.be/NGvXyk5ey1s
No comments: