கோவையில் நாளை தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து முதல்வர் கருணாநிதி தூர்தர்ஷன் மற்றும் வானொலியில் ஆற்றிய உரை:
கொங்கு சீமையிலே-கோவை மாநகரில் எங்கும் எழில் குலுங்கிட உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நாளை (புதன்கிழமை) முதல் 27-ந் தேதி வரை எழுச்சியோடு நடைபெற இருக்கிறது.
இதுவரையில் எட்டு உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்த மாநாடு- அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடைபெறுகிற மாநாடாகும்!
அதாவது, தமிழ், `செம்மொழி' என மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டபின் நடைபெறுகிற முதல் மாநாடு இது!
உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ள எனக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2 ஆயிரம் மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
அவற்றுள் கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஈப்ரு, சமஸ்கிருதம் ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே, செம்மொழி எனும் தகுதியை பெற்றுள்ளன என மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
இந்த வரிசையில் இன்று தமிழ் மொழி `செம்மொழி' எனும் சிறப்பைப் பெற்று; நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தந்துள்ளது.
தமிழ் மற்ற செம்மொழிகளை விடவும் மேலானதாகும். இதற்கு பல சான்றுகள் உள்ளன.
செம்மொழிகளில் லத்தீன், ஈப்ரு ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை.
கிரீக் மொழி இடையில் நசிந்துவிட்ட போதிலும், தற்பொழுதுதான் அது மேலும் வளமடைந்து வருகிறது.
சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கிலே இல்லை; சீனமொழி பட எழுத்து முறையில் உள்ளதால், அம்மொழியால் உள்ளத்து உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்த இயலாது என மொழியியலார் கூறுகின்றார்கள்.
அரேபிய மொழி காலத்தால் மிகவும் பிந்தியது; பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது; இந்த செம்மொழிகள் அனைத்தையும் பார்க்கும்போது, தமிழ் மொழி-மற்ற செம்மொழிகள் எல்லாவற்றையும்விட உயர் தனி சிறப்பு வாய்ந்தது என்பது தெளிவாகிறது.
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி''
தமிழ்க்குடி என- தமிழ்ச் சமுதாயத்தின்
தொன்மை- பழைமை கூறப்படுகிறது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும்,
"திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்''- என்று பாடி- தமிழும், தமிழர் சமுதாயமும் காலத்தால் மிகவும் பழமையானவை என்கிறார்.
இலக்கிய வளத்தை பொறுத்தவரை 2,500 ஆண்டு காலமாக இடையறவுபடாத- தொடர்ச்சியான இலக்கிங்களை கொண்டுள்ளது தமிழ் மொழி!
இலக்கணத்தை பொறுத்தவரை, "தொல்காப்பியம்'' மிகச்சிறந்த இலக்கண நூலாக
எழுத்ததிகாரம்,
சொல்லதிகாரம்
பொருளதிகாரம்
-என மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது. எல்லா மொழிகளிலும் எழுத்துக்களும், சொல்லுக்கும்தான் இலக்கணம் உண்டு.
ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கைக்கு அகம்-புறம் என வகுத்து இலக்கணம் கூறுவது உலக மொழிகளிலேயே தமிழ் மொழி ஒன்றுதான்!
இது நமது தமிழ் மொழிக்கு உள்ள தனிப்பெரும் சிறப்பாகும்.
தமிழ் மொழி எந்த ஒரு மொழியையும் சார்ந்திருக்கவில்லை; இது, தனித்தன்மை வாய்ந்த மொழி.
தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், துளு முதலிய பல மொழிகள் திராவிட மொழிகள் எனக் கூறப்படுகின்றன.
இந்த திராவிட மொழிகளுக்கெல்லாம்- மூலமொழியாக தமிழ் விளங்குகிறது.
இதனை நமக்கும், உலகத்திற்கும் எடுத்துச் சொன்னவர் டாக்டர் கால்டுவெல். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ள, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' என்னும் நூல் இந்த உண்மையை நமக்கு உரைக்கிறது.
தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை தரும் சங்க இலக்கியங்கள் உலகில் வாழும் மாந்தர் அனைவருக்கும் பொதுவான நீதியையும், ஒழுக்கத்தையும் பிற அற மாண்புகளையும் உரைக்கின்றன.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்''
"யாதும் ஊரே! யாவரும் கேளீர்''
"தீதும் நன்றும் பிறர்தர வாரா''
"வினையே ஆடவர்க்கு உயிரே''
"எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே''
"செல்வத்துப் பயனே ஈதல்''
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை''
"ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று''
போன்ற அரிய மணிவாசகங்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான அறநெறிகளை வலியுறுத்துகின்றன.
அப்படி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே- செம்மொழி என்ற சிறப்பை சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்பொழுதுதான், 2004-ம் ஆண்டில்தான்- அதுவும், மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பின்னர்தான் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த பெருமையை கொண்டாடிடும் வகையில்தான் கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது!
இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தருகிறார்கள்!
குறிப்பாக, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்துறை தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் வருகிறார்.
அவர், எல்லா தகுதிகளையும் கொண்டுள்ள தமிழ் இதுவரை, "செம்மொழி'' என அங்கீகரிக்கப்படவில்லையா? எனக் கேட்டு வருந்தி கொண்டிருந்தவர்.
அதேபோல, பின்லாந்து நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா என்னும் பேரறிஞர் வருகிறார். அவர், தனது ஆராய்ச்சி மூலம், சிந்து சமவெளி நாகரீகத்தையும், அங்கு கிடைத்துள்ள எழுத்து வடிவங்களையும் ஆராய்ந்து, அவை திராவிட நாகரீகத்தை சேர்ந்தவை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினை பெறவிருக்கிறார்.
இவர்களைப்போல உலகெங்கும் 49 அயல்நாடுகளிலிருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டிலே பங்கு பெறுகிறார்கள்.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து ஏறத்தாழ 5 ஆயிரம் அறிஞர்கள் பங்கு பெறுகின்றனர்.
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நாளை காலையில் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவும், பிற சான்றோர்களும் பங்கு பெறுகிறார்கள்.
மாலையில் தமிழின் மாண்பை விளக்கும் 40 அலங்கார ஊர்திகள் அணிவகுத்திட- ஏறத்தாழ 2 ஆயிரம் கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை படைத்திட 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு- "இனியவை நாற்பது'' எனும் வண்ணமிகு அலங்கார பேரணி நடைபெறுகிறது.
பின்னர், 24-ந் தேதி காலை முதல் 27-ந் தேதி மாலை வரை ஆய்வரங்குகள் நடைபெறுகின்றன.
"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்பதை உணர்த்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கருத்தரங்கம் 25-ந் தேதி அன்று நடைபெறுகிறது.
செம்மொழித் தமிழின் மாண்பை பாடிடும் செந்தமிழ் நாட்டு கலை, பண்பாட்டு சிறப்புகளையும் புலப்படுத்திடும் அரிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் நாட்களில் வெளிநாட்டு பார்வையாளர்களும், தமிழ் மக்களும் கண்டுகளிப்பெய்திடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கு பெற வருவோர் வந்து செல்ல வசதியாக- கோவை மாநகருக்கு பல்வேறு சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மத்திய நிதி அமைசத்சர் பிரணாப்முகர்ஜி தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில், மாநாடு நிறைவு விழா உரையினை நான் ஆற்றவுள்ளேன்.
தமிழ் மொழி வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை உருவாக்கிடும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நினைவாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுகிறார்.
நமது அன்னைத்தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்திட, தமிழின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ள- வாழையடி வாழையாம் வருங்கால தமிழின மக்களுக்கு தங்கத் தமிழின் அறிவு செல்வத்தை செறிவுடன் தந்திட- கோவையில் கூடுகிறது- உலகத்தமிழ் செம்மொழி மாநாடு- உலகத்தகவல் தொழில் நுட்பவியல் மாநாடு!
அனைவரும் வருக, வருக
எனவே, அருமைத்தமிழக மக்களே!
நமது தமிழ் மொழிக்கு சிறப்புகள் சேர்க்க, தமிழ் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்னும் அய்யன் திருவள்ளுவர் தந்த மணிமொழி மண்ணில் சமதர்ம படைத்திட வழிவகை காண்போம்!
கோவை மாநகர் நோக்கி வருக வருக என அனைவரையும் அன்போடு அழைக்கிறேன் என்றார் கருணாநிதி.