.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, March 10, 2009

அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரம்தான்

அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இஸ்லாமியக் கலாசாரம்தான்

இந்தக் கட்டுரை உலக ''மனிதனே இசுலாத்தின் சாரம்" என்ற தலைப்பில் 10/03/2009 அன்று திணமனியில் சிறப்புக்கட்டுரை பகுதியில் வெளிவந்தவை.
அப்படியே தந்துள்ளோம்.
_____________________________________________________

மேற்கு ஆசியாவில் மெக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான். ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த **ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று.** உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி இஸ்லாமியர்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கபாஅவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு நோக்கித் தொழுகிறார்கள்! (காபா வரலாறும் அதன் சிறப்புக்களும் காண)

வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றாகும்.

உலகின் எந்தப் பகுதியிலுள்ள எந்த மண்ணும் ஒரு தன்மையானதுதான்! அதற்கென்று தனிப்பெருமையோ சிறுமையோ கிடையாது. அந்த மண்ணில் பிறக்கின்ற மனிதர்களைப் பொருத்து அது பெருமையோ சிறுமையோ அடைகிறது. நபிகள் நாயகத்தின் ஏற்றமிகு பிறப்பு மெக்கா மேன்மைப்படக் காரணமாயிற்று. அதேபோல் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகளை, தன்னுடைய இழிசெயலை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, அவன் வீசி எறிந்த நிலம் "ரத்த நிலம்' ஆகிச் சிறுமைப்பட்டுவிட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் பிந்தைய 23 ஆண்டுகள் இறைவாக்குகள் அவர் வழியாக இறங்கின.

இறைவாக்கினராக நபிகள் நாயகம் (ஸல்) இருப்பினும், அவர் தன்னைத் தெய்வநிலைக்குத் தூக்கிக்கொள்ள விழையவில்லை! தன்னை எளிய மனிதனாகவே பிறர் கருத வேண்டும் என்பதைத் தன்னைப் பின்பற்றுவோரிடம் சட்டமாக்கினார். இசுலாம் என்பதற்கு "ஒப்படைப்பு' என்பது பொருள். அது முழுச் சரணாகதி நிலை.

பொழுது புலர்வதற்கு முன்னால் தொடங்கி ஒவ்வொரு நாளும் இடைவெளிவிட்டு ஐந்துமுறை தொழுகைக்கு அழைக்கப்படுகிறது. பொதக்குடியிலும், கூத்தாநல்லூரிலும், வாலாஜாபேட்டையிலும், வங்கதேசத்திலும், இரானிலும், ஈராக்கிலும் ஒரேமாதிரியாக ஐந்துமுறை தொழுகை விளிகுரல் ஓரிடத்தில் கூடித் தொழுது இறையிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறது.

இசுலாத்திற்கு ஐந்து கடமைகள் உண்டு என்று திருக்குரான் விதிக்கிறது.

முதற்கடமை - இறை நம்பிக்கை; இரண்டாவது கடமை - தொழுகை; மூன்றாவது கடமை - ஜக்காத்; நான்காவது கடமை - ரம்ஜான் நோன்பு; ஐந்தாவது கடமை - ஹஜ் யாத்திரை.

திருக்குரானில் அல்பாத்தியா என்று கூறப்படும் தோற்றுவாய்ப் பகுதியான விளக்கங்களை எவ்வளவு விரித்துச் சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு ஏதோ எஞ்சி நிற்பதுபோன்ற உணர்வே ஏற்படும்! இறைவன் அல்லா என்றழைக்கப்படுகிறான். "அல்லாகூ அக்பர்' என்னும் சொற்றொடர் இறைவனை மிகப்பெரியவன் என்று பறையறைந்து சொல்கிறது!

இசுலாத்தில் "இறை ஒருமை' இன்றியமையாதது. இறைவனை ஏகன் என்றும் அனேகன் என்றும் இருவேறு வகையாகத் திருவாசகம் கூறும். அதனுடைய பொருள் அவன் வரையறைக்குட்பட்டவனில்லை என்பதாகும். இது மாணிக்கவாசகர் என்னும் மனிதரின் கூற்று. இந்தக் கூற்றோடு உடன்படலாம்; மாறுபடலாம். எதுவும் குற்றமில்லை. மனிதன் கூறியதை மற்றொரு மனிதன் மறுப்பது இயல்பே! இந்து சமயம் நெகிழ்ச்சிப் போக்குடையது.

ஆனால் திருக்குரான் என்பது இறைவாக்கு! ஆகவே ஐயத்திற்கிடமான விவாதிக்கத்தக்க நிலை என்று குரானில் எதுவுமே இருக்க முடியாது. எல்லாமே தீர்மானமாகச் சொல்லப்பட்டவை! மாற்றம் செய்ய எந்த மாந்தனுக்கும் உரிமையில்லை. இசுலாம் கட்டிறுக்கமானது.

இன்றைய உலகமயமாக்கல் எல்லா நாகரிகங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிலரைக் கொழுக்க வைத்துப் பலரை அன்னக்காவடிகளாக்கும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையே அகிலத்தின் கொள்கையாகிவிட்டது. ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு பண்பாடு என்னும் நிலையை நோக்கி எல்லா நாடுகளும் தங்களின் தனித்தன்மையை இழக்குமாறு செய்யப்பட்டுத் தலைகீழாக இழுத்துச் செல்லப்படுகின்றன. முன்பு சோசலிசக் கோட்பாடு தடுத்து நிறுத்தி வைத்திருந்த அமெரிக்க சீரழிவுக் கலாசாரம் இன்று தடுப்பாரின்றித் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இசுலாமியக் கலாசாரம்தான். அதற்குக் காரணம் அதனுடைய கட்டிறுக்கமான அமைப்புத்தான்.

நபிகள் பெருமகனார் எல்லாத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்குவதற்கும் எதிர்கொள்வதற்கும் தோதாக "உம்மா' என்கிற இசுலாமி சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறார்!

அரபுத் தேசியத்தைக் கட்டியமைக்கப் புறப்பட்ட நபிகள் பெருமானார் கபாஅவிலிருந்து விக்கிரகங்களை விலக்கினாரே ஒழிய, கபாஅவை விலக்கவில்லை. கபாஅ என்னும் பழைய அரபு வேரிலிருந்து புதுமை படைத்தவர் நபிகள் பெருமானார்.

ஒருவன் இசுலாமியனாகத் திகழ்வதற்கு இறைநம்பிக்கை எப்படி இன்றியமையாததோ, அப்படியே இன்றியமையாதது கூடித் தொழுதல்.

தொழுகை விளிகுரல் தொழுகைக்கான நேரத்தை வரையறுத்து அழைப்பதன் நோக்கமே கூடித் தொழுதலின் இன்றியமையாமை காரணமாகவே! ஆகவே இசுலாத்தில் தொழுகை தனிமனித விவகாரமில்லை. அது சமூக உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

தொழுதால் போதாதா? கூடித்தான் தொழ வேண்டுமா என்று கேட்டால், இசுலாம் "ஆம்' என்று உறுதிபடக் கூறுகிறது.

தொழுதல் "உம்மாவோடு' தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. உம்மா என்பது சமூகம். அது ஒரு கொள்கை வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கிறது. இது நபிகள் பெருமானாரின் தனிப் பெருஞ்சிந்தனை! இஸ்தான்புல்லில் உள்ள இப்ராகிமோடு நம்முடைய இளையான்குடி புதூரில் உள்ள அப்துல்லாவும் இணைய முடிவதற்கு நபிகர் பெருமானார் உருவாக்கிய உம்மாதான் காரணம்! இசுலாத்தில் உம்மா முக்கியத்துவம் உடையது என்பதால் கூடித் தொழுதல் முக்கியத்துவமுடையதாகி விடுகிறது.

கடைசிக் கடமையான ஹஜ் யாத்திரையின் நோக்கமே இந்தச் சமூகக் கட்டமைப்பைக் கெட்டிப்படுத்துவதுதான்!

மெக்கா கபாஅவின் முன்னால் ஆப்பிரிக்கரும் சீனரும் இளையான்குடி புதூர் திராவிடரும் வளைகுடா நாட்டு அரேபியரும் டாக்காவைச் சேர்ந்த வங்காளியும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபியும் அருகருகே குனிந்தும், நிமிர்ந்தும், கைகளைச் சேர்த்தும், விரித்தும், துணியால் மூடப்பட்ட தலையோடு ஒரே மாதிரியாகத் தொழும்போது ராணுவ அணிவகுப்புத் தோற்றுவிடும் என்பது அழகியல் பார்வை! விரிந்து, பரந்த, சமூக உருவாக்கம் நபிகள் பெருமானாரின் சிந்தனையாக இருந்தது என்பது கருத்தியல் பார்வை!

அரபு தேசியத்திலிருந்து படிப்படியாக விரிந்து உலக சமுதாயத்தை நோக்கி வளர்கிறது நபிகள் பெருமானாரின் கூடித் தொழுதல் என்னும் கோட்பாடும், உம்மா உருவாக்கமும்!

இசுலாத்தின் மூன்றாவது கடமை ஜக்காத். ஒருவன் தன் வருவாயில் நாற்பதில் ஒரு பங்கை, அஃதாவது இரண்டரை விழுக்காட்டை ஏழைபாழைகளுக்கு வழங்குவது! இந்தத் தொகை ஒன்றும் அதிகமானதில்லை. யாருக்கும் இயலக்கூடியதுதான்!

ஒரு சமூகத்தில் சிலர் வசதியானவர்களாகவும், பலர் வறியவர்களாகவும் இருக்கும்போது, வறியவர்கள் இயல்பாக வாழ வழி செய்யப்படவில்லை என்றால் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதும் வழிப்பறியாளர்களாகக் கையோங்குவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில் எந்த அரசும் வறியவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது!

ஆகவே உலகிலுள்ள எல்லா நெறியாளர்களும் கொடையைப் போற்றியிருக்கிறார்கள். "ஈத்துவக்கும் இன்பம்' என்று ஈகை பாராட்டி அதை ஊக்குவிப்பான் வள்ளுவன். வறியவர்கள் பெருவாரியாக இருக்கும் உலகில் ஈகை வறுமைக்குத் தீர்வாகாது எனினும், அது பேருந்துகளிலுள்ள அதிர்ச்சிதாங்கிபோல் செயல்படுவதால், வறியவர்கள் பொங்கி எழுந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதில்லை.

இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ரூ. 38க்கு விற்கும் நிலையில் வறியவர்களுக்கு ஓர் அரசு ரேஷன் கடையில் கிலோ 1 ரூபாய்க்கு அரிசி போடுவது, வறியவர்களின்மீது கொண்ட பற்றினால் அல்ல; ஆட்சியிலிருக்கும் வசதிமிக்க கோமான்கள் தங்களையும் தங்களையொத்த வசதியானவர்களையும் கிளர்ச்சிகளிலிருந்து காத்துக்கொள்வதற்காகத்தான்!

எல்லாரும் கொடுப்பதைப் பாராட்டுகிறார்கள் எனினும் "ஈவார் மேல் நிற்கும் புகழ்' என்று வள்ளுவன் புகழாசை காட்டி கொடுக்கச் சொல்கிறான் என்றாலும், நபிகள் பெருமானார் ஜக்காத் என்று சொல்லப்படும் கொடையை இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக்கி அதைக் கட்டாயமாக்கிவிடுகிறார்.

ஜக்காத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ தொழுகையையோ அல்லா ஏற்றுக்கொள்வதில்லை என்று நபிகள் பெருமானார் அடித்துக் கூறும்போது, ஏழைபாழைகளின்மீது அவர் கொண்டுள்ள பரிவு அல்லாவின்மீது கொண்டுள்ள அன்பையும் விஞ்சி நிற்கிறது!

நான் முதற்கடமையான கடவுள் நம்பிக்கை உடையவன்; இரண்டாவது கடமையான தொழுகையையும் தவறாது நிறைவேற்றுபவன் என்று ஒருவன் நபிகளிடம் சொன்னால், மூன்றாம் கடமையான ஈயும் குணம் உன்னிடம் இல்லை. ஆகவே அல்லா உன்னை ஏற்க மாட்டார் என்று தள்ளிவிடுகிறார்.

மூன்றாம் கடமைக்குள் முதலிரண்டு கடமைகளையும் அடக்கிய நபிகள் பெருமானாரின் சிந்தனை ஈடுஇணையற்ற அழகுடையது; ஒப்பற்றது; சமூக உய்வை நோக்கமாகக் கொண்டது!

தீர்ப்பு நாளன்று நீங்கள் செய்த நல்ல தீய செயல்களுக்குத் தக வெகுமதி அல்லது தண்டனை உண்டு என்று திருக்குரான் சொல்வது நாம் ஏற்கெனவே கேட்டறிந்த கோட்பாடுதான்!

ஆனால் செய்யத்தவறிய செயலுக்குக்கூடத் தீர்ப்புநாளில் தண்டனை உண்டு என்று நபிகள் சொல்வதும் "உங்களுக்கு இவ்வளவு வசதி இருந்தும், உங்கள் பக்கத்திலேயே ஆதரவற்றவர்கள் இருந்தும் அவர்களுக்கு ஏன் உதவவில்லை?' என்ற கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்' என்று சொல்வதும் நாம் கேட்டறியாத ஒப்பற்ற கோட்பாடு!

நான்காம் கடமை ரம்ஜான் நோன்பு. அந்த நோன்பு மாதம் முழுவதும் உண்ணாமலும், எதையும் அருந்தாமலும், இணைவிழைச்சு முதலியவற்றில் ஈடுபடாமலும் பகற்பொழுது முழுவதையும் கழிப்பது; தொழுவது!

பொதுவாகப் பண்டிகைகள் ஆட்டபாட்டம், விருந்து என்ற வகையில் கொண்டாடப்படும். ஆனால் பட்டினி கிடந்து பண்டிகை கொண்டாடு என்ற சிந்தனை இன்னொரு அழகிய சிந்தனை.

பட்டினி கிட; பசியை உணர்; பசித்தவனுக்குச் சோறுபோடு! இதுதான் நான்காம் கடமையின் உட்பொருள்.

ஒரு திருவிழாவைப் பட்டினித் திருவிழாவாக்கி, பட்டினிக்கு எதிராக இயக்கம் நடத்திய நபிகள் பெருமானாரின் உன்னதமான சிந்தனை உலகை உயர்த்தவல்லது.

ஐந்தாம் கடமையான ஹஜ் யாத்திரை உம்மாவோடு இணைத்து ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது!

இசுலாத்திற்கு ஏக இறைத்துவம் எனப்படும் இறை ஒருமை முக்கியம்! இறையச்சம் முக்கியம். இறைவனுக்கு இணை சொல்லக்கூடாது என்பது முக்கியம். தீர்ப்பு நாளில் நம்பிக்கை முக்கியம். ஐந்துவேளை தொழுகை முக்கியம். ஜக்காத் முக்கியம். உம்மா முக்கியம்

இன்னும் எத்தனையோ முக்கியங்கள் உண்டு. விரித்தால் விரிகடலெனப் பெருகும். ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு இஸ்லாமியர் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை. தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே. அவற்றை இறைவனா போட்டான்?

1947-க்கு முன்பு நம்முடைய தேசபக்தி முழுப் பஞ்சாபையும், முழு வங்காளத்தையும் உள்ளடக்கியது. 1947-க்குப் பின் கிழக்கு வங்கத்தின்மீதும், பலுசிஸ்தான்மீதும் பற்றுக் காட்டுவது தேசபக்தி ஆகாது. நம்முடைய தேசபக்தி ஒச்சமுடையதுபோலும். ஒருகாலத்தில் விரிகிறது; பிறிதொரு காலத்தில் சுருங்குகிறது.

"யாதும் ஊரே; யாவருங் கேளிர்' என்னும் தமிழ்ச் சிந்தனை உலகு தழுவியது. நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே.

உலக மனிதனை உருவாக்குவது இன்னும் கற்பனாவாதமாகவே இருந்தாலும், இசுலாத்தின் முயற்சி அதுதான்.

உலக மனிதனே இசுலாத்தின் சாரம்.

**
இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள **ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று.** என்ற தவறான தகவலுக்கான விளக்கம்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறக்கும் முன்பே அந்த நகரமும் அங்குள்ள காபா ஆலயமும் புனிதமானவைகளாகவே அப்போதுள்ள மக்கள் பயன்படுத்தி வந்தார்கள். மக்காவிலுள்ள காபா ஆலயம் முதல் மனிதனின் கரங்களால் கட்டப்பட்டவை அதன் பின் இபுறாஹீம் நபி (அலை) ஆப்ரகாம் என்று சொல்லக்கூடிய இறைத்தூதரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டவை என்று முஸ்லீம்கள் நம்புகிறோம். நபி ஸல் அவர்கள் அங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள் இஸ்லாத்தை அதன் உண்மை வடிவில் சீரமைப்புச் ‍செய்தார்கள் இறைச் செய்தியை பெற்று மக்களுக்கு எடுத்துச் ‍சொல்லி நேர்வழிப்படுத்தினார்கள்.
அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இபுறாஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.
''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

No comments: