.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, March 3, 2009

மனித நேய மக்கள் கட்சி 6தொகுதிகளில் போட்டி

மனித நேய மக்கள் கட்சி 6தொகுதிகளில் போட்டி
த மு மு க மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவிப்பு



கோவை-மார்ச்-3
மனித நேய மக்கள் கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் இன்று கோவையில் நிருபர்களிடம் கூறினார்கள்.

மனித நேய மக்கள் கட்சி பிப்ரவரி 7ம் தேதி துவங்கப்பட்டது. முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக் கட்சியாக இருந்தாலும், த.மு.மு.க.வின் முழுக் கட்டுபாட்டில் இயங்கும். மனித நேய மக்கள் கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்காக தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக தஞ்சை, மதுரை, மண்டலங்களில் கலந்தாய்வு முடிந்து விட்டது. இன்று கோவையில் நடைபெற்றது. நாளை சென்னை மண்டலத்தில் கலந்தாய்வு நடைபெறும். இன்னும் ஓரிரு நாட்களில் 32 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருநெல்வேலி அல்லது தென்காசி தனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். ஏதேனும் அரசியல் கட்சிகள் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமாக வாக்குறுதி அளித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி நிலவரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் மோதல் சம்பவம் துர்பாக்கியமான செயல். அப்பாவி மக்கள், காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களே பகிங்கரமாக மோதிக் கொள்வது வேதனையானது. மருத்துவனை நோயாளிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் மறுத்தது போல் இச்செயல்கள் உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறாகக் கூறினார்கள். இந்த பேட்டியின் போது மாநிலச் செயலாளர், கோவை உம்மர், மாவட்டத் தலைவர் பஷீர், மாவட்டச் செயலாளர் அமீர், மாவட்ட பொருளாளர் கபீர் ஆகியோர் உடனிருந்தார்கள். பின்னர், த.மு.மு.க. மர்க்கஸில் இன்று பகல் 12.00 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை நியமித்தல் சம்பந்தமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்கள்.

செய்தி.புகைப்படம்: கோவை தங்கப்பா

No comments: