.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, May 30, 2010

வருவாய்க்காக மக்களைக் கொல்லும் தமிழக அரசு

- தமிழ்மாணிக்கம்
நன்றி: தினமணி

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் டாஸ்மாக் மதுபானக் கடை அவசியமா என்பது குறித்து பொது விவாதம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசுக்கு அதிக வருவாய் தரும் பட்டியலில், டாஸ்மாக் மதுபான நிறுவனமே முன்னிலையில் உள்ளது.

நிதிநிலை அறிக்கையில், மொத்த வருவாய் ரூ. 63 ஆயிரம் கோடி, மொத்தச் செலவு ரூ. 66 ஆயிரம் கோடி, அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ. 3 ஆயிரம் கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 16 ஆயிரம் கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதை எப்படிச் சமாளிக்க முடியும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அரசுக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் அதிக வருமானம் வருகிறது. அதை வைத்து பற்றாக்குறையைச் சமாளிப்போம் என்றார் அப்போதைய நிதித் துறைச் செயலர். அந்த அளவுக்கு டாஸ்மாக் நிறுவனம் வளர்ந்துள்ளது.

மேலும், அரசு செய்தி ஊடகங்களின் வழியாக பண்டிகைக் காலங்களில் மதுபான விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் என்றும், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடப் பல மடங்கு விற்பனை அதிகரித்துள்ளது என்றெல்லாம் செய்தி வெளியிட்டு மது குடிப்பவர்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

பல்வேறு கவர்ச்சித் திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் அறிவித்து வரும் மாநில அரசுக்கு கைகொடுப்பது மதுபான விற்பனைதான்.

தமிழகத்தில் சுமார் 12 ஆயிரம் ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 6 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் ஒவ்வொரு வார்டிலும் இரண்டு அல்லது மூன்று மதுபானக் கடைகள் இருக்கின்றன.

நகராட்சி அளவிலான ஊர்களில் 7 அல்லது 8 என்ற ஒற்றை இலக்கத்திலும், கிராம ஊராட்சிகளை இணைக்கும் முக்கியச் சாலைகளில் ஒரு மதுபானக் கடை வீதம் தெருவெங்கும் கடைகள் உள்ளன.

அதிலும், நகரப் பகுதிகளின் மையத்தில் இந்தக் கடைகள் உள்ளன. கிராமங்களில் மிக முக்கியமான இடங்களிலேயே மதுபானக் கடை உள்ளது.

மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் தேடிச் சென்று குடிப்பார்கள். அதனால், பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களில் இந்தக் கடைகள் இருக்கக் கூடாது.

போக்குவரத்து இடையூறு மற்றும் இருசக்கர வாகன விபத்துகளுக்கும் பெரும்பாலும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளே காரணமாகின்றன.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் அறிவித்து சோதனை செய்தால், இந்தக் கடையில் இப்போதுதான் குடித்துவிட்டு வருகிறேன். கடை நகரத்திற்குள் இருந்தால் எப்படி வாகனத்தில் செல்லாமல் இருக்க முடியும் என்றும் குடிப்பவர்கள் விவாதிக்கின்றனர்.

கடை மற்றும் பார் நடத்த அனுமதிப்பதால் வாடகை சற்று அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் கட்டட உரிமையாளர்களும் இதற்குச் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், பன்னாங்கொம்பில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை கட்டட உரிமையாளர் காலி செய்யச் சொன்னதால், அருகில் உள்ள காவல்காரன்பட்டிக்கு மதுபானக் கடையை மாற்றினர்.

கடையைத் திறக்க முற்பட்ட போது ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அங்கு வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பெண்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்காமல், மறு நாளே மீண்டும் மதுபானக் கடையை அதே ஊரில் திறந்தனர். அப்போதும் பெண்கள் திரண்டு சாலை மறியல் செய்து கைதானார்கள்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியரிடமும் மனு கொடுத்துவிட்டு திரும்பியுள்ளனர். ஆனாலும், அந்த ஊரிலிருந்து மதுக் கடை இன்னும் மாற்றப்படவில்லை. மது விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.

நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் மதுபானக் கடையைக் கட்டுப்படுத்த இயலாமல் போனாலும், கிராமப்புறங்களில் மதுபானக் கடை தேவையா என்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். இதுதவிர, கிராமங்களில் கடை திறப்பதற்கு முன்பு கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி மக்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் கடைகளைத் திறக்க முயற்சிக்கலாம்.

அதைவிடுத்து, மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள கிராமங்களிலும்கூட விடாப் பிடியாக அரசு மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது. 1994-95-ம் ஆண்டு ரூ. 995.69 கோடியாக இருந்த மது விற்பனை 2009-2010-ம் ஆண்டில் ரூ. 13,720 கோடியாக அதிகரித்துள்ளதாக அரசு விளம்பரப்படுத்தி மகிழ்ச்சியடைவதைத் தவிர்த்து, கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுப்பது நல்லது.

உடனடியாக மதுபானங்களுக்குத் தடைவிதிக்க முடியாமல் போனாலும், படிப்படியாக கிராமப்புறங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்குத் தடை விதிக்கலாம்.

தொழில் துறை வளர்ச்சி, கிராமப் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பிற காரணிகளின் மூலம் வருவாயைப் பெருக்க அரசு முயற்சிக்க வேண்டும்.

அரசுக்கு வருவாய் தரும் நிறுவனம் என்பதால் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்தை வளர்த்து விட முடியாது. அது கொஞ்சம், கொஞ்சமாக நமது மக்களை கொன்றுவிடும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்வது நல்லது.

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல தகவல்

தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்