- MH.கனி
மங்களூரில் இருந்து எழுகின்ற மரண ஓலம் ஓய்ந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தொடரும் துயரம்தீர ஆண்டுகள் பலவாகும். எண்ணற்ற ஆசைகளையும், கனவுகளையும் சுமந்து கொண்டு பறந்த 158 பேர் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்த பரிதாபம் உலகையே உலுக்குகிறது. எட்டுப் பேராவது உயிர்பிழைத்தனரே என்று சமாதானப்பட்டுக் கொள்ளலாம், அவ்வளவே.விபத்து என்பது தவிர்க்க இயலாத ஒன்று என்பது தெரிந்ததுதான். விமானத்தில் பறந்ததால் மட்டுமே விபத்து ஏற்படும் என்றும், ரயிலில் பயணித்ததால் விபத்து ஏற்பட்டுவிடும் என்றும் சொல்லிவிட இயலாது. நடந்து போகும்போதுகூட விபத்து நேரிடலாம். சாலையில் செல்லும் பேருந்தோ, லாரியோ வீட்டில் மோதிய சம்பவங்கள் ஏராளம் உண்டு.
ஆனால், விபத்து என்பது மனிதனின் கவனக்குறைவாலோ அல்லது தவறான நடைமுறையாலோ ஏற்பட்டிருந்தால் அதை எப்படி மன்னிக்க முடியும்?துபாயிலிருந்து மங்களூருக்குப் பறந்து வந்த விமானம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு வானத்தில் வெடித்துச் சிதறி இருந்தால் அந்த விபத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் ஜீரணிக்க முடியும். ஆனால், தவறுதலாகத் தரையிறங்கியதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.விமான ஓட்டியான கேப்டன் குலுசிகா, சுமார் 10,200 மணிநேரம் இதுவரை விமானத்தில் பறந்த அனுபவசாலி. இதுவரை 19 முறை மங்களூர் விமான நிலையத்தில் விமானத்தை வெற்றிகரமாக இறக்கி இருப்பவர் அந்தக் கேப்டன் குலுசிகா என்றெல்லாம் சொல்கிறார்கள். கடந்தவாரம்கூட அதே விமான நிலையத்தில் தரை இறங்கியிருக்கிறார். விபத்துக்கு காரணம் அனுபவமின்மை என்றோ, அவருக்கு இடம் புதிது என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால் கண்டிப்பாக தவறு நடந்துள்ளது.
விபத்து நடந்தபோது தெளிந்த வானம் இருந்திருக்கிறது. மழை எதுவும் பெய்யாததால் விமானம் இறங்கும் பாதையில் ஈரப்பசை கொஞ்சமும் கிடையாது. விபத்துக்குள்ளான போயிங் 737 - 800 பத்திரமாக இறங்குவதற்கு மங்களூர் விமான நிலையத்தில் 8,000 அடி நீள விமான ஓடுபாதை தாராளமாகப் போதுமானது. பிறகு ஏன் இந்த விபத்து நேர்ந்தது?
நாம் தேடியவரை நமக்குக் கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கிறது. சாதாரணமாக, விமான ஓடுபாதையில் ஆரம்பத்திலிருந்து சுமார் 1,400 அடி முதல் 1,800 அடிக்குள் விமானம் தரையைத் தொட்டால் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், இந்த விமானம் 3,000 அடியில்தான் விமான தளத்தில் இறங்கித் தரையைத் தொட்டது என்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதை விமானத்திலிருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் கருப்புப் பெட்டி ஆய்வு செய்யப்பட்டால் மட்டுமே விடை கிடைக்கும்.
அது மட்டுமல்ல உயிர் தப்பியவர்கள் தொலைக்காட்சிகளுக்கு அளித்த நேர்கானலில் அவர்கள் கூறிய தகவல்கள் மேலும் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கின்றன விமானம் தரையை தொடும் முன் எதிலோ மோதியிருக்கிறது அதன் பின் தவறான ஓடு பாதையில் தரையை தொட்டதன் மூலம் பயங்கர சப்தத்துடன் டயர் வெடித்துள்ளது அந்த நேரத்தில் விமானத்தின் கதவுகள் திறந்து இருந்திருக்கிறது அதை பயன்படுத்தித்தான் உயிர் தப்பிய பயணிகள் வெளியே குதித்துள்ளார்கள் அதன் பின் சுவரில் மோதி அதைத் தாண்டி பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளது.
இந்த நிலையில் தவறு எங்கு நிகழ்ந்துள்ளது?
முன்பு நடந்த சில சம்பவங்கள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.
முன்பு நடந்த சில சம்பவங்கள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.
பணியில் இருக்கும் நிலையிலேயே இந்திய விமானிகள் கேபினிலேயே தூங்கி விடுவது சம்பந்தமாக ஏற்கனவே விமான போக்குவரத்து இயக்ககம் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
தூக்கத்தின் காரணமாக தரை இறங்க வேண்டிய இடத்தை விட்டு விட்டு மேலேயே சுற்றித்திரிந்த பல சம்பவங்களும் முன்பு நிகழ்ந்துள்ளன தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அலாரத்தை ஒளிக்கச் செய்து எழுப்பிய சம்பவங்களும் முன்பு பல நிகழ்ந்துள்ளன. இது போன்ற தூக்கம் மங்களூர் விமான விபத்திலும் நிகழ்திருந்தால்? மனித உயிர்கள் அத்தனை மலிவானதா?
மங்களூர் விமான விபத்தின் காரணகாரியங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரம் எந்த அளவுக்கு மோசமாகவுள்ளது என்பது பற்றி இந்திய விமானிகள் கூட்டமைப்பின் (Federation of Indian Pilots) நிறுவனத் தலைவர் கேப்டன் எம்.ஆர். வாடியா சமீபத்தில் கடுமையாகச் சாடியிருந்தார். இந்திய விமான நிலையங்கள் பாதுகாப்பு மற்றும் தரமானவையா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
நமது விமான ஓட்டிகள் எந்த அளவுக்கு அனுபவசாலிகள் என்பதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அரசு. கடந்த 20 ஆண்டுகளாக, சர்வதேசத் தரத்தில் இந்தியா முன்னேற வேண்டும் என்கிற முனைப்பில், வரைமுறை இல்லாத வளர்ச்சியை விமானப் போக்குவரத்தில் ஏற்பட நமது அரசு முனைந்தது எந்த அளவுக்குப் புத்திசாலித்தனம் என்பதையும் சீர்தூக்கி ஆராய வேண்டிய நேரம் இது.
எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்பதற்காகத் தரத்தைக் குறைக்க முயலும் பேதைமைத்தனம் தமிழக உயர்கல்வித் துறைக்கு மட்டுமே உரித்தானது என்று எண்ணிவிடலாகாது. விமானத் துறையையும் பீடித்திருக்கும் வியாதி இதுதான். தனியார் துறையை ஊக்கப்படுத்தக் கணக்குவழக்கு இல்லாமல் அனுமதி அள்ளி வழங்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து பெறும் பழைய விமானங்களும், குத்தகைக்கு எடுக்கப்படும் விமானங்களும்கூடத் தனியாரால் பயன்படுத்தப்படுகின்றன.
விமான நிலையங்களும் சரி, தேர்ந்த அனுபவசாலிகளால் பராமரிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகமே. சின்னச் சின்ன நகரங்களில் விமான நிலையங்கள் அமைப்பதும், விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்படுவதும் நல்லதுதான். அதேநேரத்தில், போதிய கட்டமைப்பு வசதிகளும், திறமையான தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர்களும் இருந்தால்தானே முறையாக அந்த விமான நிலையங்கள் செயல்பட முடியும்.
விமானம் ஒவ்வொரு முறை இறங்கும்போதும், சக்கரங்களில் தேய்மானத்தால் விமான ஓடுபாதையில் ரப்பர் துகள்கள் தங்கிவிடும். அதை அவ்வப்போது அகற்றிச் சுத்தப்படுத்தாவிட்டால் அடுத்த விமானம் இறங்கும்போது, சறுக்கி விபத்து ஏற்பட ஏதுவாகும். இதுபோல, விமான நிலையத்தில் இன்னும் பல நுணுக்கமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா?. அவை முறையாகக் கையாளப்படுகின்றனவா? என்பது சந்தேகமாக இருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லையே தவிர, விமானதள விபத்துகள் பல நடந்திருப்பது செய்தியாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
விமான நிலையங்களைப் புதுப்பிப்பதற்கும், புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வாரி இறைக்கும் அரசு, திறமையான விமான ஓட்டிகளையும், விமான நிலையத் தொழில்நுட்பப் பணியாளர்களையும் உருவாக்குவதில் முதலில் அக்கறை காட்ட வேண்டும். மங்களூர் விமான விபத்து என்பது ஓர் எச்சரிக்கை மணி, அவ்வளவே. இதிலிருந்து நாம் பாடம் படித்தால் புத்திசாலிகள். இல்லாவிட்டால்? அப்பாவிப் பயணிகளின் நிலை?? மனித உயிர்கள் அத்தனை மலிவானதா???
No comments:
Post a Comment