.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, May 16, 2010

நாட்டின் நான்காவது தூணில் இணைய விருப்பமா?

நாட்டின் நான்காவது தூணில் இணைய விருப்பமா?
செந்தில், ஐஸ்வர்யா, வினோத்

'மீடியா!' - இந்த மந்திரச் சொல்லுக்குத் தலை வணங்காத உலகத் தலைவர்கள் கிடையாது. ஊடகங்கள்... உலக உருண்டையை உங்கள் உள்ளங்கையில் சுழலவைக்கும் சக்தி படைத்தவை. 24 மணி நேரத்துக்கு ஒரு முறை செய்தித்தாள் படித்து நிலவரம் அறிந்த காலம் கரைந்தோடி, 24 மணி நேரத்தின் ஒவ்வொரு நொடியிலும் அப்டேட் தகவல்கள் தீண்டிக்கொண்டே இருக்கும் காலம் இது. முழுக்க முழுக்க இளைஞர் சக்தியினை நம்பியிருக்கும் துறை இது. ஊடகவியலாளர் பொறுப்புக்குத் தக்க தங்களை வடிவமைத்துக்கொள்பவர்களுக்கு சர்வதேசத் தளங்களில் இயங்கும் வாய்ப்புகூடக் கைக்கெட்டும் தூரத்தில்தான். அவற்றை எட்டிப் பிடிப்பதற்கான வழிவகைகள் இதோ...

இந்தியாவில் ஊடகத் துறையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பத்திரிகை, எலெக்ட்ரானிக் மீடியா மற்றும் நியூ மீடியா (சைபர்) ஆகியன.

தினசரிகள், வார, மாத இதழ்கள் போன்றவை பத்திரிகைப் பிரிவில் அடங்கும். அறிவியல் முதல் அரசியல் வரை அனைத்து உலக இயக்கங்களையும் செய்தியாக்க நல்ல எழுத்தாற்றல் அவசியம். மகாத்மா காந்தி முதல் 'எக்ஸ்பிரஸ்' கோயங்கா வரை அனைவரும் பத்திரிகையாளர்களாக இருந்தவர்களே. கருத்துச் சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதில் இதழியலுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குல்தீப் நய்யார், தெஹல்கா தருண் தேஜ்பால் போன்றவர்கள் இத்துறையின் முக்கிய ஆளுமைகள்.

நிருபர், உதவி ஆசிரியர், தலைமை நிருபர், பொறுப்பாசிரியர், செய்தி ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், இணை ஆசிரியர், ஆசிரியர் எனத் திறமை மற்றும் அனுபவத்துக்கு ஏற்றாற்போல் இதில் பணியிடங்கள் உண்டு. தவிர, 'ஃப்ரீலான்சர்' என்னும் சுதந்திரப் பத்திரிகையாளராகவும் வர முடியும்.

எலெக்ட்ரானிக் மீடியாவில் தொலைக்காட்சி, வானொலி போன்றவை அடங்கும். டி.ஆர்.பி. ரேட்டிங் போட்டி காரணமாக, யார் முதலில் செய்தி வெளியிடுகிறார்கள் என்ற வேகத்துடன் கேமராவும் கையுமாகப் பரபரப்பாக இருக்க வேண்டும். கொஞ்சம் கலை ஆர்வமும், கேமரா பற்றிய தொழில்நுட்பங்களும் அறிந்தவர்களுக்கு இதில் சிவப்புக் கம்பள வரவேற்பு. கரன் தப்பர், ப்ரணாய் ராய், பர்கா தத் போன்றவர்கள் எலெக்ட்ரானிக் மீடியா ஐகான்கள்.

மூன்றாவது வகை, நியூ மீடியா அல்லது சைபர் மீடியா என்று சொல்லப்படும் இணையதளத்தை அடிப்படையாகக்கொண்டது. இத்துறையின் வளர்ச்சி தற்போது ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. ஆனால், சூப்பர்ஸானிக் வேகத்தில் அடுத்த ஐந்தே ஆண்டுகளில் ஒவ்வொரு வீடு, செல்போனையும் ஊடுருவும் வல்லமைகொண்ட துறை இது. இவை தவிர்த்து, ஓவியம் வரையக்கூடிய திறமை உள்ளவர்கள் பத்திரிகைகளில் இல்லஸ்ட்ரேட்டர்களாகவோ, லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்களாகவோ செயல்படலாம். அனிமேஷன், சவுண்ட் இன்ஜினீயரிங், ஆர்ட் டைரக்ஷன் என மீடியா தொடர்பான பின்னணி வேலைவாய்ப்புகள் தனிக் கடல்.

சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவரான ரவீந்திரன் கோபாலன், ஊடகத் துறையில் முத்திரை பதிக்க அத்துறை பற்றிய கல்வி அறிவு அவசியம் என்கிறார். ''கடந்த 200 ஆண்டுகளாக ஊடகத் துறை, அதன் பிரத்யேகப் படிப்புகளின் அவசியத்தை உணராமல், வெறும் எழுத்தாற்றலையே நம்பி முன்னேறி வந்துள்ளது. கொஞ்சம் எழுத்துத் திறமை இருந்தால், ஊடகத் துறையில் ஓர் அடிப்படை வேலைவாய்ப்பைப் பெறலாம் என்பதுதான் இங்கே நிலைமை. ஜர்னலிசம் என்பதைப் பொதுப்படையாக வைத்துக்கொண்டால்கூட, அதிலேயே விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று பல பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் நாம் விரும்பும் ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அந்தத் துறைபற்றிய அனைத்து விவரங்களையும் பள்ளி அல்லது கல்லூரியின் ஆரம்ப நாள் முதலே அறிந்துவைத்திருப்பது, அதில் சிறப்புக் கவனம் செலுத்தும் பத்திரிகையில் இன்டர்ன்ஷிப் செய்வது போன்ற பயிற்சிகள் உங்களுக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும். அதாவது, ஒருவர் ஊடகம் தொடர்பான துறையில் பொருளாதாரம்தான் தனது விருப்பம் என்று தீர்மானித்தால், அதிலேயே ஸ்டாக் மார்க்கெட், ஃபினான்ஷியல் ஜர்னலிசம், ஃபினான்ஷியல் பாலிசி ஜர்னலிசம், பட்ஜெட் ஜர்னலிசம் என ஏகப்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு ஃபிட் ஆகும் ஏதேனும் ஒன்றிரண்டு துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி நுணுக்கமான அறிவை வளர்த்துக்கொள்வது, தொலைநோக்குப் பார்வையில் நல்ல பலனைத் தரும். பொதுஅறிவு ஒரு செய்தியாளருக்கு அவசியம். சாதாரணமாகக் கண்முன் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தோடு அணுகத் தெரிந்திருக்க வேண்டும். சமூகம் குறித்த அக்கறையும், பொறுப்பு உணர்ச்சியும் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள். இவற்றைப் பயிற்சியால் பெற முடியாது. இயல்பிலேயே சமூகம் குறித்த அக்கறை இருக்கும் சென்சிடிவ்வான மனிதர்கள்தான் ஊடகத் துறையில் சோபிக்க முடியும். சிம்பிளாகச் சொல்வதென்றால், ஜர்னலிசம் பற்றி நான்கு சுவர்களுக்குள் ரொம்பவே சிறப்பாகப் பாடம் நடத்திச் சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால், ஒரு நல்ல ஜர்னலிஸ்ட் நிச்சயம் நான்கு சுவர்களுக்குள் உருவாவது இல்லை!'' என்கிறார் ரவீந்திரன்.

கல்வித் தகுதி அவசியம் என்றாலும், இன்று மீடியா துறையில் இருப்பவர்களில் 70 சதவிகிதம் பேர் மீடியா தொடர்பான முறையான பட்டங்கள் ஏதும் பெறாதவர்கள்தான். பல்கலைக்கழகப் பட்டம் அவசியம் என்றாலும், திறமையே இங்கு பிரதானம். அதே சமயம் திறமைசாலிகள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்புகளுடன் இருந்தால், அவர்களின் மதிப்பு இருமடங்காக எகிறும்.

''ஒரு நல்ல ஜர்னலிஸ்ட்டுக்கு அவசியம் இருக்க வேண்டிய தகுதிகள் இரண்டு. ஒன்று, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை அப்டேட் செய்துகொள்வது. இன்னொன்று, எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என்ற உந்துதலும், சமூக அக்கறையும் நிரம்பியிருப்பது!'' என்கிறார் ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியின் டீன் பிந்து பாஸ்கர். மேலும், தொடர்பவர், ''அரசியல் நிகழ்வுகளை, அரசின் பார்வையில் இருந்து மட்டும் அணுகாமல், பலரின் கண்ணோட்டங்களில் இருந்து அணுகத் தேவையான மன முதிர்ச்சியையும் ஒரு ஜர்னலிஸ்ட் வளர்த்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரம், சமூக அமைப்புகள் பற்றிய ஆழ்ந்த அறிவு இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாதது. தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி என்று எல்லா விஷயங்களைப்பற்றியும் ஓரளவு தெரிந்துவைத்திருப்பது முக்கியம். ஏனென்றால், 'எனக்கு இந்த விஷயம்பற்றி எதுவும் தெரியாது' என்ற பதிலைக் கூறக் கூடாத இருவர், ஆசிரியரும் செய்தியாளரும்தான்.

கம்யூனிகேஷன் ஸ்கில், மக்களைச் சந்திப்பதில் ஆர்வம், அவர்களுடைய பிரச்னைகள் குறித்த அக்கறை ஆகியவை ஒரு செய்தியாளருக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டிய சாஃப்ட்ஸ்கில்ஸ். இவற்றோடு எழுத்துத் திறமையும் அவசியம். ஆங்கில அறிவு, ஒன்றுக்கும் மேற்பட்ட வட்டார மொழிகளில் பேசும் திறமை ஆகியவையும் ப்ளஸ் பாயின்ட்களாக அமையும். ஆர்வமும் திறமையும் இருப்பவர்கள் மீடியாத் துறையின் 'மோஸ்ட் வான்டட்' பட்டியலில் எப்போதும் இடம் பிடிப்பார்கள்!'' என்று நம்பிக்கை தருகிறார் பிந்து பாஸ்கர்.

என்ன, உலகத்தைச் சுழலவைக்கத் தயாரா?

----------------------------------------------------------

டி.சுரேஷ்குமார்,
டைம்ஸ் ஆஃப் இந்தியா, அசிஸ்டென்ட் எடிட்டர்.

''1996-ல் பி.காம் முடிச்சுட்டு மீடியாவுக்கு வந்தேன். திரும்பிப் பார்க்க நேரம் இல்லாம ஓடிட்டே இருக்கேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பை, 'மனித உரிமைக்குக் கிடைத்த வெற்றி' என்று டெக்கான் கிரானிக்கலும், 'இந்தத் தீர்ப்பு போலீஸ் விசாரணைக்குப் பெரும் பின்னடைவு' என்று ஹிந்து பத்திரிகையும் எழுதியிருந்தன. அனைத்துப் பத்திரிகை நிருபர்களும் ஒரே இடத்தில் இருந்து சேகரித்த செய்திதான் அது. இருந்தாலும், கருத்துக்கள், கோணங்கள் மாறுபடுகின்றன. ஒரு செய்தியை எந்த அளவுக்கு விஸ்தார மான அலசல் கோணத்தோடு அணுக வேண்டும் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம். பிரமாண்ட மேம்பாலங்கள், குளிர்சாதனப் பேருந்துகள், ஷாப்பிங் மால்கள், ஐ.டி வளாகங்கள் என மொத்தத் தமிழ்நாடும் சென்னையில்தான் அடங்கி இருக்கிறது என்ற குதிரைக் கடிவாள மனோபாவத்தை மனதில் இருத்திக்கொள் ளவே கூடாது. இரட்டைக் குவளைமுறை, கள்ளிப் பால் கொடூரம், இடைத் தேர்தல் கலாட்டா என சென்னையைத் தாண்டித்தான் தமிழகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

மிக முக்கியமாக, பத்திரிகையாளர் ஆக ஆசைப்படுபவர்கள் 24 மணி நேரமும் அலர்ட் ஆக இருக்க வேண்டும். அதிலும் கிட்டத்தட்ட அனைத்து செய்தி சேனல்களும் ஏதேனும் சார்பு நிலை எடுத்திருந்தால், சம்பவ இடத்தில் இருக்கும் செய்தியாளரால்தான் உண்மையான நிலையை உலகுக்கு எடுத்துரைக்க முடியும். நீங்கள் எப்போதும் உண்மை சொல்பவராக இருங்கள்!''


மீடியாவுக்குள் நுழைய,
நுழைந்த பிறகு...

பத்திரிகையாளராகவோ அல்லது ஒரு படைப்பாளியாகவோ வர விரும்பினால், முதலில் நீங்கள் நல்ல படிப்பாளியாக வேண்டும். நல்ல வாசிப்பு, நல்ல எழுத்தைத் தரும். எழுதி எழுதிப் பழகினால், இன்னும் சிறப்பாக எழுத முடியும். ஆகவே, படிப்பு மட்டுமல்ல... பயிற்சியும் முக்கியம்!

கேள்விப்படும் எந்த விஷயம்பற்றியும், 'ஏன்... எதற்கு... எப்படி?' என்று கேள்வி கேட்டு ஆராயும் ஆர்வத்தைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

எந்த மொழி மீடியாவில் சேர ஆசைப்பட்டாலும் ஆங்கிலம் அவசியம். இன்றே ஆங்கிலம் கற்கும் வேலையை ஆரம்பியுங்கள்.

தமிழில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று என தினமும் இரண்டு செய்தித்தாள்களையேனும் முழுமையாகப் படியுங்கள். தவிர, எல்லா செய்தித்தாள்களிலும் தலைப்புச் செய்தியையாவது வாசியுங்கள்.

மீடியாவுக்கு வர ஆசைப்படுபவர்கள் முதலில் சின்னப் பத்திரிகை, சேனலில் சேர்ந்து நிறையக் கற்றுக்கொள்ளுங்கள். அங்கு உங்களுக்கு சர்வ சுதந்திரம் கிடைக்கும். பிறகு, பெரிய நிறுவனங்களை அணுகுங்கள்.

ஒரு செய்தியைப் பரபரப்புக்காக அணுகாமல், அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை ஆராயுங்கள். அரசு, போலீஸ் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதில் ஏதேனும் செய்தி கிடைக்குமா என்று தோண்டுங்கள்.

கருணாநிதி, ஜெயலலிதா, கமல், ரஜினியைப் பேட்டி எடுக்கும்போது எந்தளவுக்கு தயாரிப்புகளுடன் செல்வீர்களோ, சாமானியனின் பேட்டிக்கும் அதே முன்தயாரிப்புடன் செல்லுங்கள்.

எந்த இக்கட்டான சூழலிலும் உங்களை உழைப்பும் நேர்மையும்தான் காப்பாற்றும்!


சுசித்ரா,
ஆர்.ஜே,
ஹலோ எஃப்.எம்.

''ஆர்.ஜே. ஆவதற்கு நல்ல குரல்வளம் தேவைதான். ஆனால், அதைக் காட்டிலும் முக்கியமான தகுதி, நாம் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்று அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு டிகிரி என்பது அடிப்படைத் தேவை. ஆனால், மொழி நடை, எந்த வகை நிகழ்ச்சியின் அமைப்புக்கும் உடனடியாகத் தன்னை செட் செய்துகொள்வது, அன்றைய நிகழ்வுகள், பொது அறிவுத் தகவல்களை அப்டேட் செய்வது எனப் பட்டப் படிப்பு சொல்லிக்கொடுக்காத பல தகுதிகளை வளர்த்துக் கொள்வது அவசியம்!''


சஞ்சய் பின்டோ,
எக்ஸிகியூட்டிவ் எடிட்டர்,
என்.டி.டி.வி-ஹிந்து சேனல்.

''நான் வரலாறு, அரசியல், சட்டம் படித்துவிட்டுச் சம்பந்தமே இல்லாமல் மீடியாவுக்குள் காலடி எடுத்துவைத்தவன். ஜர்னலிஸ்ட் ஆக ஆசை உள்ளவர்கள் விஸ்காம் படிக்கலாம். அல்லது வரலாறு, தமிழ், ஆங்கிலம் என எளிமையான கலைப் படிப்புகளைப் படித்துவிட்டு, மீடியா பெர்சன் ஆவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளலாம். ஒருவரைப் பேட்டி எடுக்கச் செல்லும்போது, அவர் இதுவரை சொல்லாத விஷயத்தை அவரிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். பொதுவாக, ஆங்கில செய்திச் சேனல்களில் முறையான கல்வித் தகுதியுடன் வரும் ஃப்ரெஷ்ஷர்களுக்கு ஆரம்பத்தில் 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தருவார்கள். மிக நல்ல அனுபவம் உள்ளவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். திறமையான 'மீடியா பெர்சன்' ஆகச் செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வாருங்கள். அந்த ஆர்வம் உங்களை உயரத்துக்கு அழைத்துச் செல்லும்!''


கவிதா முரளிதரன்,
சீனியர் கரெஸ்பாண்டன்ட், தி வீக்.

''12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிகிறேன். விஸ்காம், ஜர்னலிசம்னு மீடியா சம்பந்தமான எந்தச் சிறப்புப் படிப்பும் நான் படிக்கலை. செய்தி சேகரிக்கச் செல்லும் கள அனுபவம்தான் இந்தத் துறையில் நம்மைத் தரம் உயர்த்திக்கொண்டே இருக்கும். தற்போதைய தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழி மீடியாவில் நீங்கள் இயங்கிக்கொண்டு இருந்தாலும், ஆங்கிலப் புலமை உங்களுக்கு அவசியம். தினமும் விதவிதமான குணம்கொண்ட வித்தியாசமான மனிதர்கள்தான் நமது 'ஆபீஸ்' ஆக இருப்பார்கள். அவர்களைக் கோபப்படுத்தாத தொனியில் பேசி, நமக்குத் தேவையான தகவல்களை வாங்குவதில் அடங்கி இருக்கிறது சாமர்த்தியம். இதற்கு அநேகமாக எந்தப் பல்கலைக்கழகத்திலும் பாடத்திட்டம் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அனுபவமே ஆசான்!''

நன்றி: விகடன்

No comments: