.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, May 10, 2009

பிரமிக்க வைக்கும் மக்களவை தேர்தல் செலவுகள்:இனி கோடீஸ்வரர்கள் தான் போட்டியிட முடியும்.

லகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று பெருமையாக கூறிக் கொண்டாலும், இங்கு நடக்கும் மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவு எவ்வளவு தெரியுமா? சராசரியாக 40 கோடி ரூபாய். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் போட்டியிட்டு, பதவிக்கு வர முடியும். இன்றைய நிலையில், இந்த உரிமை கேலிக்கூத்தாகி விட்டது. கோடீஸ்வரர்கள் மட்டுமே இன்றைக்கு தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.

இதற்கு, அரசியலும் வர்த்தகமாகி விட்டது தான் காரணம். ஒரு எம்.பி., வெற்றி பெற்று விட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் அவரது பொருளாதார நிலை விண் முட்டும் அளவிற்கு உயர்ந்து விடுகிறது. அவரே அமைச்சராகி விட்டால், உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற முடியும்.இந்த அளவிற்கு ஊழலும், லஞ்சம், லாவண்யமும் மலிந்து போய் விட்டன. தேர்தலில் வெற்றி பெற்று, பதவி கிடைத்து விட்டால் கோடிகளில் புரளலாம் என்பதால், தேர்தல் செலவிற்காக சில கோடி ரூபாயை செலவிட வேட்பாளர்கள் தயங்குவதில்லை.

ஒரு வேட்பாளர் இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால், இந்த கட்டுப்பாடுகள் காகிதத்தில் மட்டுமே உள்ளன. இதுவரை நடந்த தேர்தல்களில், வேட்பாளர்கள் கொடுத்த, 'போலி' செலவு கணக்கு பட்டியல்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை.இதனால், தேர்தல் கமிஷனுக்கு ஒரு செலவு கணக்கை காட்டிவிடும் வேட்பாளர்கள், தொகுதியில் பல கோடி ரூபாயை இறைக்கின்றனர். இன்றைய நிலையில், ஒரு மக்களவை தொகுதி வேட் பாளர், சராசரியாக 40 கோடி ரூபாயை செலவழிக்க வேண் டும் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

ஒரு அரசியல் கட்சி, குறிப்பிட்ட தொகுதிக்கு இன்னார் தான் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து, செலவு கணக்கு துவங்குகிறது. மனு தாக்கல், தேர்தல் பிரசாரம், வாகனங்கள், துண்டு பிரசுரங்கள், கொடிகள், விளம்பரங் கள், தொண்டர்களுக்கு உணவு, போக்குவரத்து, ஓட்டு போட வாக்காளர்களுக்கு பணம், பூத் நிர்வாகிகள் செலவு, ஓட்டு எண்ணும் இடத்தில் செலவு என ஒரு வேட்பாளர் பல்வேறு வழிகளில் செலவு செய்தால் மட்டுமே அவர் தேர்தலை எதிர்கொள்ள முடியும்.மனு தாக்கலின் போது, குறிப்பிட்ட அளவிலேயே வாகனங்கள் வர வேண்டும் என்று கட்டுப்பாடு இருந்தாலும், கூட்டணி கட்சிகளை சரிப்படுத்த கூடுதல் வாகனங்களை வேட்பாளர்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மனு தாக்கல் துவங்கி, பிரசாரம் என அனைத்து பணிகளுக்கும் வாகனங்கள் தேவைப்படுகின்றன.

இந்த வகையில், ஒரு மக்களவை தொகுதி வேட்பாளர் 60 முதல் 70 வாகனங்களை வாடகைக்கு எடுக்க வேண்டியுள் ளது. ஒரு வாகனத்திற்கு குறைந்த பட்சமாக 1,500 ரூபாய் செலவாகிறது. இதன்படி, நாள் ஒன்றுக்கு 1,05,000 செலவாகிறது. தேர்தல் நடைபெறும் கால இடைவெளியான 60 நாட்களில், வாகனங்களுக்கு மட்டும் 63 லட்சம் ரூபாய் செலவாகிறது. இதை தவிர டீசல் செலவு தனி.தேர்தல் விளம்பரம், கொடிகள், பேனர், பூத் சிலிப் உள் ளிட்ட செலவினங்களுக்காக இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. முன்பெல்லாம், கட்சியினர் பிரதிபலன் எதிர்பார்க்காமல் கட்சிக்காக, வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கி, தேர்தல் பணியாற்றுவர்.ஆனால், தற்போது பணம் கொடுத்தால் மட்டுமே கட்சித் தொண்டர்கள் தேர்தல் பணிக்கு வருகின்றனர். தினசரி 100 ரூபாய், மூன்று வேளை உணவு என்பது கட்டாயமாகி விட்டது.

ஒரு வேட்பாளருக்காக 500 தொண்டர்கள் பணியாற்றுகின்றனர் என்றால், தினசரி 75,000 ரூபாய் செலவிட வேண்டும். இந்த வகையில், 60 நாட்களுக்கு 45 லட்சம் ரூபாய் செலவாகும்.தேர்தல் நாளன்று, ஒவ் வொரு பூத்திலும் வேட்பாளரின் சார்பில் பணியாற்றப் போகும் நபர்களுக்கு மொத்தம் 5,000 ரூபாய் தர வேண்டும். பூத் கமிட்டி கட்சி பொறுப்பாளருக்கு தனியாக 10,000 ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த வகையில் ஒரு பூத்திற்கு 15,000 ரூபாய் வீதம், ஒரு மக்களவை தொகுதியில் உள்ள 1,500 பூத்களுக்கு இரண்டு கோடியே 25 லட்ச ரூபாய் செலவாகும்.

இது தவிர, குறிப்பிட்ட சில பகுதிகளில், ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் என்று கொடுத்தால் மட்டுமே ஓட்டு விழும். ஒரு சட்டசபை தொகுதிக்கு 15,000 ஓட்டுகள் வீதம், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு 90,000 ஓட்டுகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்.ஒரு ஓட்டுக்கு 2,000 ரூபாய் என்று கணக்கிட்டால், 18 கோடி ரூபாய் அள்ளி விட வேண்டும். இவை தவிர, எண்ணற்ற செலவுகளை வேட்பாளர் எதிர் கொள்ள வேண்டிய நிலை தற் போது நிலவுகிறது. மொத்தத்தில், ஒருவர் 35 முதல் 40 கோடி செலவிடும் தகுதி இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.இதே நிலை நீடித்தால், எதிர்காலங்களில் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், அவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாகவே இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

கொடி கட்டி பறக்கும் 'ஹவாலா' : சமீபகாலமாக, வேட்பாளர்களின் செலவு மற்றும் பண பட்டுவாடாவை தேர்தல் கமிஷன் கண்கொத்திப் பாம்பாக கவனிக்கத் துவங்கியுள்ளது. ஒரு வேட்பாளருக்கு என உரிய வாகனங்களை மடக்கும் அதிகாரிகள், அவற்றில் பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா என்று சோதனை நடத்துகின்றனர். இதனால், தேர்தல் செலவிற்காகவும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காகவும் கோடிக்கணக்கில் பணத்தை கொண்டு செல்ல வேட்பாளர்களால் முடிவதில்லை. எனவே, 'ஹவாலா' முறையை இதற்கு பயன்படுத்துகின்றனர். பொதுவாக, வெளிநாடுகளில் பணம் சம்பாதிப்பவர்கள், அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் மறைத்து, பணம் எடுத்து வர 'ஹவாலா' முறை பயன்படுத்தப்படுகிறது. தற்போது, தேர்தலின் போதும் தேவைப்படும் இடங்களுக்கு பணத்தை கொண்டு போய் சேர்க்க 'ஹவாலா' பணப் பரிமாற்றம் கடைப்பிடிக்கப் படுகிறது. ஜுவல்லரி, அடகுக் கடை மூலமாக 'ஹவாலா' நடக்கிறது. முன்பு ஒரு லட்சம் ரூபாயை கொண்டு சென்று, குறிப்பிட்ட இடத்தில் கொடுக்க 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஒரு லட்சத்திற்கு 200 ரூபாய் கட்டணம் என்று உயர்த்தப்பட்டுவிட்டது. பல லட்சம் ரூபாயை ஒரே நேரத்தில், தொகுதியின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலையில், வேட்பாளர்கள் பெரும்பாலானோர் இந்த கூடுதல் கட்டணத்தை கொடுத்து கோடிகளை இடம் மாற்றி வருகின்றனர். இதனால், 'ஹவாலா' செய்யும் பார்ட்டிகள் காட்டில் பணமழை கொட்டுகிறது.

'அதிர்ஷ்டக்கார' சுயேச்சைகள் : எந்த அரசியல் கட்சியையும் சேராத, தன்னார்வம் கொண்ட பொதுமக்கள் தேர்தலில் போட்டியிட நினைத் தால், அவர்கள் சுயேச்சைகளாக போட்டியிடலாம் என்று உரிமை அளிக்கப்பட்டுள்ளது. சிலர் உண்மையாகவே, சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். இந்த உரிமையை, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒரு வேட்பாளர் பயன்படுத்த வேண்டிய வாகனங்கள், தேர்தல் செலவுகளுக்கு தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், பல கோடி ரூபாய்களை செலவிட தயாராக உள்ள அரசியல் கட்சி வேட்பாளர்கள், இதற்கு சுயேச்சைகளை பயன்படுத்துகின்றனர். மனு தாக்கலின் போதே தங்களுக்கு வேண்டப் பட்ட இரண்டு முதல் ஐந்து நபர்களை, சுயேச்சைகளாக போட்டியிட வைக்கின்றனர். பின், அவர்களுக்கு உள்ள சலுகைகளை, அரசியல் கட்சி வேட்பாளர்கள் லாவகமாக அபகரித்துக் கொள்கின்றனர். செலவுக் கணக்கு, வாகனங்கள் போன்ற சிக்கல்களில், தேர்தல் கமிஷனிடம் இருந்து கட்சி வேட்பாளர்கள் தப்பிக்க இப்படி ஒரு உபாயத்தை கையாண்டு வருகின்றனர். குறிப்பிட்ட வேட்பாளர், அரசியல் கட்சி வேட்பாளரின் ஆள் தான் என்று தெரிந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. பிரசார வாகனங்கள் முதல் ஓட்டுப்பதிவு மற்றும் எண்ணிக்கையின் போது பூத்களில் பணியாற்றுவது வரை அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு சுயேச்சைகள் கை கொடுக்கின்றனர். அவர்கள் இவ்வாறு செயல்படுவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுகிறது. இந்த தேர்தலில் பல சுயேச்சைகள் காட்டில் பணமழை கொட்டுகிறது.
நன்றி: தினமலர்

No comments: