.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, November 23, 2008

முஸ்லிம்கள் அரசியலில் ஒன்றுபட்டால் மத்திய அரசை நிர்ணயிக்கலாம்!

உ.பி முஸ்லிம்கள் அரசியலில் ஒன்றுபட்டால் மத்திய அரசை நிர்ணயிக்கலாம்!

தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்திய தமுமுக தலைவரின் லக்னோ மாநாட்டு உரை!!


உ.பி. மாநிலம் லக்னோவில் முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வு பேரவையின் சார்பாக அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடந்த ஞாயிறு (நவம்பர் 9) அன்று நடைபெற்றது.


தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்கள், அறிஞர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வழக்குரைஞர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் பங்குக் கொண்டார்கள்.


இந்த மாநாட்டில் தமுமுக தலைவர் ஆற்றிய தலைமை உரை.


முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வு பேரவையின் சார்பாக நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில் பங்குக் கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதசேத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.6 சதவிகிதம் மட்டுமே என்று 2001ல் எடுக்கப்பட்ட அரசு மக்கள்தொகை புள்ளிவிவரம் கூறுகின்றது.


இதே போல் உ.பி.யில் வாழும் முஸ்லிம்களின் மக்கள் தொகை 18.5 சதவிகிதமென அதே புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இந்தப் புள்ளிவிவரங்கள் அதிகாரபூர்வமானவை ஆனால் ஆதாரப்பூர்வமானவை என்று நான் கருதவில்லை. இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் தமிழகத்திலும், உ.பி.யிலும் வாழ்ந்து வருவது தான் உண்மை நிலை. இருப்பினும் தமிழகத்தை விடப் பன்மடங்கு அதிகமாக நீங்கள் உ.பி.யில் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகின்றீர்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும்.


இந்தியாவில் எண்ணிக்கை அடிப்படையில் உ.பி.யில் தான் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.


சதவிகித அடிப்படையில் பார்த்தால் அசாமிற்கு அடுத்த நிலையில் முஸ்லிம்கள் உ.பி.யில் தான் வாழ்ந்து வருகின்றார்கள். உ.பி.யின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு உத்தராஞ்சல் என்ற மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, உ.பி.யில் தலித்களுக்கு அடுத்த இடத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் தான் உள்ளார்கள்.


இந்த உண்மைகளை அறிந்த நாங்கள் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம். உ.பி.யில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள். இதே போல் உ.பி.யில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 130 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தகுதியில் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.


உண்மை நிலை இப்படியிருப்பினும் மிகப் பெரும் கைசேதமாக முஸ்லிம்களை விட மிகக் குறைவாக வெறும் 7 அல்லது 8 சதவிகிதம் உள்ள யாதவர்கள் அல்லது அதனை விடக் குறைவான சதவிகிதத்தில் உள்ள உயர்சாதியினரால் நமது ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிகின்றது நம்மால் வேடிக்கை தான் பார்க்க முடிகின்றது.


இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் உங்கள் மாநிலத்தில் 19 முதலமைச்சர்கள் இது வரை இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை என்பது தமிழகத்தில் வாழும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.


இதற்குக் காரணம் நமக்கு மத்தியில் ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு இல்லாதது தான். இங்கு உ.பி.யில் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் 15க்கும் மேற்பட்டவை இருப்பதாகக் கேள்வி பட்டேன். ஆனால் நாடாளுமன்றத்தில் தற்போது உ..பி.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை.


இதே போல் தற்சமயம் உ.பி. சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 56 உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த முஸ்லிம் அரசியல் கட்சியின் பிரதிநிதியாக அமரவில்லை. இது எங்கள் உள்ளத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது.


இன்று முஸ்லிம்களின் பலத்த ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் செல்வி மாயவதியின் ஆட்சியில் பிரமாணர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் இன்று அவர்களது ஆதிக்கம் தான் உ.பி.யில் மிதமிஞ்சி நிற்கிறது.


மாயாவதியின் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்த்தில் உள்ள 21 அமைச்சர்களில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் தான் இருக்கிறார். இந்த அவல நிலையை மாற்றி அமைக்க நீங்கள் திட்டமிட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமாகும்.


இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் எங்களது அனுபவத்தைப்பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.


1992 டிசம்பர் 6ல் உங்கள் மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஏற்பட்ட ரணங்கள் எங்கள் மாநிலத்தையும் பாதித்தன. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு எதிர்ப்புக்காட்டுவதற்காகக் கோவையில் வீதிக்கு வந்து கருப்புக் கொடி கட்டியவர்கள் மீது தடா சட்டம் பாய்ந்தது.


அநீதிக்கு எதிராக ஒரு சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட நாதியற்ற நிலையில் முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வந்தது.


முஸ்லிம் அரசியல் கட்சித் தமிழகத்தில் இருந்தன. ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளக்குமுறல்களைக் கண்டுக்கொள்ளாமல் அவை பாராமுகமாகச் செயல்பட்டன.


இந்தச் சந்தர்ப்பத்தில் தான் 1995 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இழந்த உரிமைகளை மீட்பதற்கும், இருக்கும் உரிமையைக் காப்பதற்கும் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினோம்.


அனைத்து முஸ்லிம்களுக்காகவும் தமுமுக அப்போது முதல் செயல்பட்டு வருகின்றது.


தமுமுகவின் தொடர் போராட்டத்தின் விளைவாகத் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3,5 சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டைத் தற்போதைய திமுக அரசு வழங்கியுள்ளது. இதன் காரணமாகப் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் சென்ற ஆண்டை விடக் கூடுதல் மடங்கு முஸ்லிம் மாணவர்கள் இந்தத் தொழில் படிப்பில் சேருவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.


தமிழக பிரச்னையில் மட்டுமில்லாமல் அனைத்திந்திய அளவிலும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடி வருகிறோம். 2004 டிசம்பர் 6 அன்று நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினோம்.


இந்தப் போராட்டத்தின் விளைவாகத் தான் வாஜ்பேயி ஆட்சியின் போது தள்ளுபடி செய்யப்பட்ட பாபரி மஸ்ஜிதை இடித்தற்கான அத்வானி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட வழக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.


இதே போல் அனைத்திந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கோரி மார்ச் 7, 2007ல் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தி அனைத்துச்சமுதாயத் தலைவர்களையும் ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்தினோம்.


அரசியல் நடவடிக்கைகள் மட்டுமின்றி சமூகங்களுக்கு இடையே பாலங்களை அமைப்பதற்காகப் பல்வேறு வகையான சமூகச் சேவைகளை தமுமுக செய்து வருகின்றது. இதன் முத்தாய்ப்பாக 50 அவசர ஊர்தி சேவை தமிழகம் சார்பாக அனைத்துச் சமுதாய மக்களுக்காகவும் நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையான தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் பதவியை எங்கள் அமைப்பிற்குத் தந்துள்ளது. எங்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக இருக்கின்றார்.


எத்தனை அரசியல் கட்சிகள் சமுதாயத்தின் பெயரால் இருந்த போதினும் தூய்மையான நோக்கத்துடன் மக்கள் சேவை செய்தால் சமுதாய மக்களை ஒருங்கிணைத்துச் சமுதாயத்திற்கான தேவைகளைப் பெறலாம் என்பதற்கு தமுமுகவின் அனுபவம் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பதைப் பணிவுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


திமுகவுடன் நாங்கள் நட்புடன் இருந்த போதினும் மத்தியில் ஆட்சி செய்யும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நாங்கள் விமர்சிக்காமல் மவுனமாக இருந்ததில்லை.


தற்போதைய மன்மோகன் சிங் அரசு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு காற்றில் பறக்கவிட்டுள்ளது என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி வருகிறோம். மன்மோகன் சிங் அரசின் குறைந்த பட்சச் செயல் திட்டத்தில் சிறுபான்மையினருக்கு அனைத்திந்திய அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட மிஸ்ரா ஆணையம் தனது அறிக்கையை 2007 மே 22 அன்று சமர்பித்து விட்டது. ஆனால் மன்மோகன் சிங் அரசு இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் முஸ்லிம்களை ஏமாற்றி உள்ளது.


இதே போல் குறைந்த பட்சச் செயல் திட்டத்தில் பாலஸ்தீன மக்களுக்குச் சொந்த நாடு உருவாகப் பாடுபடுவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலஸ்தீன மக்களை அன்றாடம் கொன்று குவிக்கும் இஸ்ரேல் நாட்டின் உளவு செயற்கைக் கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்றது. பா.ஜ.க. இனி ராமர் கோவில் பெயரைச் சொல்லி மக்களிடம் செல்ல இயலாது. முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று அவர்களால் நாட்டு மக்களுக்கு ஆபத்து என்று கூறி வோட்டு வேட்டையாடப் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.


அந்தத் திட்டத்திற்கு உதவிடும் வகையில் தான் மன்மோகன் சிங் அரசின் செயற்பாடும் அமைந்துள்ளது.


தமிழகத்தில் தென்காசியில் குண்டு வெடித்தது. குண்டுகளை வைத்த இந்து முன்னணி தீவிரவாதிகள் தமிழகக் காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டார்கள்.


ஹைதராபாத் மக்கா பள்ளிவாசலில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட ரகக் குண்டுகள் தான் தென்காசியிலும் பயன்படுத்தப்பட்டன என்று தமிழகக் காவல்துறை தெரிவித்தது.


நாம் தமுமுக சார்பாகத் தென்காசி குண்டுவெடிப்பில் இருந்து பாடம் படித்து நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்குகளை மறுவிசாரணை செய்யக் கோரிக்கை வைத்தோம்.


மத்திய அரசு மவுனமாக இருந்தது. நான்டெட், மாலேகவ்ன் (2006), மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன.


ஆனால் அது மன்மோகன் சிங் அரசைப் போல் தூங்கிக் கொண்டிருந்தது. தற்போது மராட்டிய ஏடிஎஸ் காவல்துறை பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதே பாணியில் முன்பே சிபிஐ விசாரணை செய்திருந்தால் டெல்லி, பெங்களூரு, அஹ்மதாபாத், ஜெய்பூர் குண்டு வெடிப்புகளை நூற்றுக்கணக்கான உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம். இதனைச்செய்யத் தவறிய மன்மோகன் சிங் அரசை நாங்கள் கண்டித்து வருகிறோம்.


ஆனால் நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் 35 எம்.பி.க்கள் இருந்தும் அவர்கள் மவுனமாக அமர்ந்துள்ளார்கள். இன்று சங்பரிவார் பயங்கரவாதிகள் கைதுச் செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் கைதுச் செய்யப்படுபவர்கள் அம்புகள் தான். அம்புகளை எய்தவர்களையும் கைதுச் செய்ய மன்மோகன் சிங் அரசு முன்வர வேண்டும்.


முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சிக்கும் இந்தப்போக்குச் சரி செய்யப்பட வேண்டுமெனில் உ,பி,யில் வாழும் நீங்கள் அரசியல் விழிப்புணர்வு மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும்.


தீமைகளைத் தடுப்பது முஸ்லிம்களின் கடமையாகும். தீமைகள் என்பது வெறுமனே மது, விபச்சாரம், சூதாட்டம் மட்டுமில்லை. ஆட்சி அதிகாரத்தைத்தவறாகப் பயன்படுத்துவதும் தீமையாகும். எனவே அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி அதனை வேடிக்கை பார்ப்பது ஒரு முஸ்லிமிற்கு அழகு அல்ல.


இது கூட்டணி ஆட்சி காலம். உ.பி, யில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாம் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அடுத்த ஆட்சி உங்கள் தயவில் தான் அமையும். இந்த நிலை ஏற்பட நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


இன்று இந்தியாவில் அரசியல் கட்சிகளை அமைப்பது எளிதானது. எனவே எத்தனை முஸ்லிம் அரசியல் கட்சிகள் சுயநலனுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள், ஆனால் தூய்மையான எண்ணத்துடன் ஆலிம்கள், அறிஞர்கள் நிரம்பிய உ.பி.யில் நீங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உத்தரபிரதேச ஆட்சியை மட்டுமில்லை, இந்தியாவின் ஆட்சியையும் நிர்ணயிக்கக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள்..


எங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக முஸ்லிம்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்து விடைபெறுகிறேன்.

No comments: