.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, July 28, 2010

One litre petrol price is just Rs 24.44 sans taxes | 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 26.44 தான்!!

டெல்லி: ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை ரூ. 26.44 தான் என்று பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் கூறினார்.

மாநிலங்களவையில் அவர் பேசுகையில்,

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 51.45க்கு விற்கப்படுகிறது. இதில் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை ரூ. 26.44 காசுகள் மட்டுமே. ஆனால், அதன் மீதான வரி ரூ.25.01 ஆகும்.

அதேபோல ஒரு லிட்டர் டீசல் ரூ. 37.62க்கு விற்கப்படுகிறது. டீசலின் அடக்க விலை ரூ. 26.63 மட்டுமே. இதற்கு விதிக்கப்படும் வரி ரூ. 10.99 ஆகும்.

இறக்குமதி வரி, உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றை மத்திய அரசும், மாநில அரசுகள் பிற வரிகளையும் விதிக்கின்றன என்றார்.

விலை உயர்வு நியாயமானதே-தியோரா:

இந் நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா,

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெயின் விலையை குறைந்த அளவே மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த விஷயத்தில் அரசு நியாயமாக நடந்து கொண்டுள்ளது.

மக்களின் நலனில் அரசுக்கு அக்கறையில்லாமல் இல்லை. கிரீத் பாரிக் கமிட்டி மண்ணெண்ணெயின் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு 100 ரூபாயும் உயர்த்த பரிந்துரைத்தது.

ஆனால் மண்ணெண்ணெயின் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு 35 ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளோம்.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு தொடர்ந்து மானியம் அளித்த போதும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுமை குறையவில்லை.

எண்ணெய் நிறுவனங்களின் இக்கட்டான நிலைமையை கருத்தில் கொண்டுதான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலையுயர்வை அடுத்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதிசுமை ஓரளவுக்கு குறைந்துள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி அதிகமாக உள்ளன. சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீது 33 சதவீதம் வரை விற்பனை வரி விதிக்கப்படுகிறது. இதைக் குறைக்க வேண்டும் என்றார்.

S Y Quraishi appointed Chief Election Commissioner | இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமனம்

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லா, நாளை (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தேர்தல் ஆணையராக உள்ள குரேஷி, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வெளியிட்டார்.

மத்திய தலைமை தேர்தல் ஆணையராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பதவியில் குரேஷி இரண்டு ஆண்டுகள் இருப்பார்.

1971ம் ஆண்டு ஐஏஎஸ் ஹரியாணா கேடர் அதிகாரியான குரேஷி மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய அரசில் தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல், தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர், மத்திய விளையாட்டுத்துறைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

2006ம் ஆண்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

Tuesday, July 27, 2010

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலன்ஸ்


இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூட ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என்பது சர்வதேச விதியாகும். ஆனால், கற்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழகத்தில் தங்களது இருப்பை வெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.

கடந்த ஜுலை 24 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதே கோரிக்கைக்காக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது தமுமுகவின் ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்திருக்கிறது. ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும், வேகமாக வருமாறு அதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர் தாஜுதீன் வேகமாக ஹனீபா மருத்துவமனையை நோக்கி திருப்பினார். வரும் வழியில், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியை மெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார். அப்போது காவல் துறையும் கூட்டத்தை விலக்கி, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது தொண்டர்களிடம் ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு அறிவித்திருக்கிறார்.

எந்த விதி மீறலும் யாருக்கும் எந்த இடையூறு இல்லாமலும் ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்பு லன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார் டிரைவர்.

மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்கடிரைவர் சென்று விட்டார். அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில், ஆம்புலன்ஸை கட்டைகளால் உடைத்து, டிரைவரை கொலை வெறியுடன் தேடி உள்ளனர்.

டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல் டேங்கை உடைத்து, வண்டியை துவம்சம் செய்ய, இதைப் பார்த்த பொதுமக்கள் சப்தம் போட, அதற்குள் ஓடிவந்த காவல் துறையினர் பாஜகவினர் மீது தடியடி நடத்தியதும், வன்முறை கும்பல் ஓடத் தொடங்கியது. அதற்குள் பாஜகவினர் தங்களின் அயோக்கியத்தனத்தை மறைக்க, ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும் விதமாக வந்தது என வதந்திகளை பரப்பினர்.

ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாமிட்டு இருந்ததால், அவர் தலைமையிலான போலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர். போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளை போட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.

தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்ட செய்தி அறிந்ததும் திருத்துறைப்பூண்டி நகர தமுமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மாவட்ட தலைவர் தாஜுதீன், ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ், யூசுப் உள்ளிட்டோர் தலைமையில் சாலை மறியலில் தமுமுகவினர் இறங்க, பிறகு வழக்கு தொடுத்து
விட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

செய்தியறிந்து திருவாரூர் மாவட்ட தமுமுகவினர் திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந்தனர். திருத்துறைப் பூண்டி நகரெங்கும் பாஜகவினரை பொதுமக்கள் காரிதுப்பாத குறையாக திட்டிக்கொண்டிருந்தனர்.

இதே, ஆம்புலன்ஸை பலமுறை பாஜகவினர் அவசரத்துக்கு பயன் படுத்தியது திருத்துறைப் பூண்டி மக்களுக்கு நன்கு தெரியும். அப்போது கூட ஒரு இந்து சமுதாய குடும்பத்துக்குத்தான் உதவ அந்த ஆம்புலன்ஸ் சென்றதும். திருத்து றைப்பூண்டி மக்களால் மூலைக்கு மூலை பேசப்பட்டது.

காவல்துறை பாஜகவினரை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பிலிருந்தே அழுத்தங்களும அதிகரிக்க, அனைத்துக்கட்சியினரும் இந்த அராஜகத்தை கண்டித்து, தமுமுகவினருக்கு ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

அடுத்த நாள் மமக துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்கு வந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார். குற்றவாளிகள் பிடிக்கப்படாததை கண்டித்து திருவாரூரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி கருப்புக்கொடி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. டி.ஐ.ஜி. அவர்களும் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும், மற்ற அதிகாரிகள் மமக துணைப் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்கு வரும் தினத்தில் கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும், ஜுலை 30க்குள் குற்றவாளிகளை பிடிக்கிறோம் என்று கூறியதால், ஜுலை 31 அன்று கருப்புக் கொடி ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது. ஈவு, இரக்கமற்ற பாஜக வன்முறை கும்பலின் செயல் பொதுமக்களையே கோபப்படுத்தியது எனில், தமுமுகவினரை
தமிழகமெங்கும் கொந்தளிக்க வைத்துள்ளது.

தமுமுகவினர் இதுவரை ஜனநாயகத்தை மீறவில்லை. காவல்துறை தனது கடமையை வாக்களித்தப்படி செய்யாவிடில், அதன் பின் விளைவுகளுக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்தம் வியர்வையினால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீது விழுந்த தாக்குதல், எங்களின் நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும்.

Monday, July 26, 2010

போர்க்குற்றவாளி இராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும்

இஸ்லாமிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காகவும், ஒடுக்குப்படும் மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வருபவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ். கீற்று இணையதளத்திற்காக, இந்தியாவில் மதச்சார்பின்மை, சிறுபான்மையினரது பிரச்சினைகள், மனிதநேய மக்கள் கட்சியின் செயல்பாடுகள், ஈழப்பிரச்சினை உள்ளிட்ட செய்திகள் தொடர்பாக நடத்திய நேர்காணலிலிருந்து...

நன்றி கீற்று

கீற்று: உங்களுடைய தொடக்க கால வாழ்க்கை, பின்புலம் ஆகியன பற்றிச் சொல்லுங்களேன்.

பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. முதலாவது வகுப்பு வரை அங்கேதான் படித்தேன். என்னுடைய அப்பாவுக்குச் சென்னை கொத்தவால்சாவடியில் வெல்லம், புளி மொத்த வியாபாரம் இருந்தது. அதன் காரணமாக சென்னை வந்தோம். கொத்தவால் சாவடி ‘செயின்ட் தாமஸ்’ பள்ளியில் மூன்றாவதுவகுப்பு வரையும், பின் அரண்மனைக்காரத் தெருவில் உள்ள ‘செயின்ட் மேரீஸ்’ ஆங்கிலோ இந்திய உயர்நிலைப்பள்ளியில் 11ஆவது வகுப்பு வரையும் படித்தேன். புதுமுக வகுப்பையும் வணிகவியல் இளங்கலையையும் புதுக்கல்லூரியில் முடித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறையில் சேர்ந்து வணிக மேலாண் முதுவர் (எம்.பி.ஏ) பட்டம் பெற்றேன். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் நிறுமச் செயலாண்மைத் துறை உதவிப் பேராசிரியராக 1985இல் சேர்ந்தேன். ஆனால் குடும்பம் சென்னையில் இருந்தது. குடும்பத்தைப் பார்க்கவும் அமைப்புச் சார்ந்த பணிகளுக்காகவும் வார விடுமுறைநாட்களில் சென்னை வந்துவிடுவேன்.

கீற்று: அரசியலில் ஈடுபாடு வந்தது எப்படி?

இளமைக்காலத்தில் இருந்தே சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டு. கல்லூரிப் பருவத்தில் இந்திய மாணவர் இஸ்லாமியர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி அதன் தமிழகத் தலைவராகச் செயல்பட்டேன்; பின் அவ்வமைப்பின் அனைத்திந்திய அறிவுரைக்குழுவின் ஒன்பது பேரில் ஒருவராகவும் இருந்தேன்.

இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் என்பது முப்பது வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஓர் அமைப்பு. இளைஞர்களையும் கல்லூரி மாணவர்களையும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் சமூக அக்கறையுள்ளவர்களாகவும் உருவாக்கக் கூடிய பணியில் அவ்வமைப்பு ஈடுபட்டு வந்தது. அதில் முப்பது வயது வரை தான் இருக்க முடியும் என்பதால் 1989இல் அவ்வமைப்பில் ஓய்வு பெற்று வேறு சமூகத் தளங்களில் பணியாற்றத் தொடங்கினோம். எண்பதாம் ஆண்டுகளை என்பது இந்திய முஸ்லீம்களின் வரலாற்றில் மிகவும் மோசமான காலம் என்று சொல்லலாம். 1980களின் தொடக்கத்தில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் வேண்டும் என்னும் ஒரே நோக்கத்திற்காக இஸ்லாத்தைத் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்கிறார்கள். தலித் சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது என்பது புதுமையான நிகழ்வு இல்லை. வாழையடி வாழையாகக் காலம் காலமாகவே நடக்கின்ற ஒன்றுதான் அது! இன்னும் சொல்லப்போனால் கன்னியாகுமரியில் இருந்து காசுமீர் வரை விவேகானந்தர் நடைப்பயணம் பற்றி எழுதும் போது, ‘பட்டால் பாவம்! தொட்டால் தீட்டு’ என்னும் தீண்டாமையை எதிர்த்துத் தமிழகத்திலும் கேரளத்திலும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது பற்றி அப்போதே எழுதியிருக்கிறார். ஆனால் மீனாட்சிபுர நிகழ்வு இந்திய அளவில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியன் எக்சுபிரசு நாளிதழின் திருநெல்வேலிச் செய்தியாளர் சுப்பிரமணியம் இந்நிகழ்வைப் பற்றிப் பெரிய செய்திக்கட்டுரை எழுதினார். அது இந்தியா முழுவதும் தலைப்புச் செய்தியானது. ‘A whole village embraces Islam’ என்பது அவர் கொடுத்த தலைப்பு.

இப்படியாக இது இந்திய அளவில் சிக்கலாக மாறி அதுவரை தமிழகத்திற்கு வராத வாஜ்பாய், அத்வானி ஆகியோரெல்லாம் ‘மதம் மாறியவர்களைத் திரும்ப இந்துமதத்திற்கு அழைக்கப் போகிறோம்’ என்று கூறிப் படையெடுத்து வந்தார்கள். அப்போது தென்னாப்பிரிக்கா வெள்ளைச் சிறுபான்மையினரால் ஆளப்பட்ட நாடாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நிறவெறி (Apateid) அங்குத் தலைவிரித்து ஆடியது. அப்போது ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் இனவெறிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். ‘காமன்வெல்த் நாடுகள் சேர்ந்து இனவெறிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்’ என்று மாநாட்டின் இறுதியில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் இந்திராகாந்தி கூறினார். ‘தென்னாப்பிரிக்காவில் இனவெறி பற்றிப் பேசுகிறீர்கள். உங்கள் நாட்டில் உள்ள இனவெறி பற்றி என்ன சொல்கிறீர்கள்? (‘You are talking about apateid in South Africa. What is about apartheid in your own country?’) என அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்டார். ‘என் நாட்டில் இனவெறி என்பதே கிடையாது. (‘There is no apartheid in my country’) என்று இந்திரா விடை கூறினார். ‘மீனாட்சிபுரம் பற்றி என்ன சொல்கிறீர்கள்? (‘What do you want to say about Meenatchipuram?’) என்று விடாமல் அச்செய்தியாளர் கேட்டார்.

தீண்டத்தகாத மக்கள், வஞ்சிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் இப்படியொரு தீர்வை நோக்கில் போனால் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும் எனக் கற்பனை செய்துகொண்டு, 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாளன்று பூட்டப்பட்ட பாபர் மசூதியின் பூட்டை உடைப்பதற்கு இரத யாத்திரம் நடத்துவோம் என்று விசுவ இந்து பரிசத் அறிவிக்கிறது. இது நடந்தது 1984இல். நேபாளத்தில் சீதை பிறந்ததாகச் சொல்லப்படும் சனக்பூரில் இருந்து அயோத்தி நோக்கி இரதயாத்திரை என விசுவ இந்து பரிசத்து அறிவித்தது. அதுவரைக்கும் பாபர் மசூதி என்றால் என்ன என்பது பற்றி முசிலீம் மக்களுக்கே தெரியாது.

வேண்டுமென்றால் அந்த உள்ளூர் மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடி இருக்கலாமே ஒழிய வேறு யாருக்குமே தெரியாத சூழல்தான்! அதே 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இந்திரா தம்முடைய மெய்க்காவலர்களால் கொல்லப்பட்டதால் இந்த யாத்திரை தடுத்து நிறுத்தப்படுகிறது. இதன் பிறகுதான் தமிழ்நாட்டில் மிக மோசமான பரப்புரைகள் (பிரச்சாரங்கள்) நடந்தன. இது பெரியார் பிறந்த மண் என்பது மட்டுமில்லாமல் உறவுமுறை சொல்லிப் பேசி மாமா, மச்சான், சாச்சா என்று பேசி இணைப்பாக இருக்கக்கூடிய அளவில் மத நல்லிணக்கம் இருக்கும் பகுதியாகத் தமிழ்நாடு இருந்தது. இராம. கோபாலன், திருக்கோவிலூர் சுந்தரம், எசு. வி. சிறீதரன் ஆகிய இந்து முன்னணி ஆட்கள் பல ஊர்களில் மேடை போட்டு, முஸ்லீம்கள் தங்கள் உயிருக்கும் மேலாக நேசித்துக் கூடிய நபிகள் நாயகத்தைப் பற்றி, அவருடைய குடும்பத்தைப் பற்றி எல்லாம் மிக அருவருக்கத்தக்க வகையில் மேடையில் பேசினார்கள். ‘காம நெறியில் மிஞ்சியவர் நபிகள் நாயகத்தின் மனைவி கதீசாவா? கன்னிமேரியா? மணியம்மையா?’ என்னும் தலைப்பில் பட்டிமண்டபம் நடத்துவதாக புதுப்பேட்டைப் பகுதியிலேயே சுவரொட்டி ஒட்டக்கூடிய அளவுக்கு நிகழ்வுகள் நடந்தன.

அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக இதையெல்லாம் ஆதரித்தார் என்றுதான் நான் குற்றம் சாட்டுவேன். அவருடைய அமைச்சரவையில் இருந்து இன்றைக்கு எம்.ஜி.ஆர். கழகத்தலைவராக இருக்கும் இராம.வீரப்பனும் அதற்கு இசைவாகச் செயல்பட்டார். இப்படியாகப் பரப்புரைகள் நடக்கும்போது அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத இளைஞர்கள் சிலர் எதிர்ப் பரப்புரையில் ஈடுபட, ஒரு கட்டத்தில் பரப்புரைகள் எல்லாம் வெறும் பரப்புரைகளாக மட்டும் இல்லாமல் இவர்கள் வெட்ட, அவர்கள் வெட்ட, இங்கேயும் கொலை, அங்கேயும் கொலை என்று அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மிகப்பெரிய அமளி ஏற்படும் சூழல் வந்தது.

இந்திரா இறந்ததால் இரத யாத்திரையைத் தள்ளிப் போட்டவர்கள் இந்திய அளவில் மீண்டும் செயல்படத் தொடங்குகிறார்கள். இதன் எதிரொலியாக 1986ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் நாள் பாபர் மசூதியின் பூட்டை உடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதை நன்றாகக் கவனிக்க வேண்டும். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு திசம்பர் 22ஆம் நாள் வரை தொடர்ச்சியாக முஸ்லீம்கள் வழிபாடு நடத்தக் கூடிய ஒரு தொழுகை இடமாக இருக்கிறது. வருவாய்த் துறை ஆவணங்களின்படி அது உத்தரப்பிரதேச சுன்ன சமாத்து வக்பு வாரியத்துக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் திசம்பர் 22ஆம் நாள் முஸ்லீம்கள் தொழுதுவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு நள்ளிரவில் சிலர் புகுந்து இராமன், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோரின் சிலைகளைப் பள்ளிவாசலின் தொழுகைத் தலைவர் (இமாம்) மக்களுக்கு அறிவுரை வழங்கக்கூடிய மேடையில் வைத்து விட்டு ‘இராமபெருமான் தம்முடைய ஜென்ம பூமியில் அவதாரம் எடுத்துவிட்டார்’ என்று சொன்னார்கள். அப்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.

இந்தச் சிலைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அன்றைய தலைமை அமைச்சர் ஜவகர்லால்நேரு உத்தரவிடுகிறார். ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. கே. நையர், ‘சிலைகளை அப்புறப்படுத்தினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்’ என்கிறார். இத்தனைக்கும் அயோத்தியின் காங்கிரசுக் கட்சித் தலைவர் அகசாய பிரம்மச்சாரி ‘இந்தச் சிலைகளை அப்புறப்படுத்தி இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று ஒரு தர்ணா போராட்டம் நடத்தினார். ஆனால் மாவட்ட ஆட்சியருடைய உத்தரவுக்கு ஏற்ப மசூதி பூட்டப்படுகிறது; பூட்டிய நிலையில் உள்ளே இருக்கக்கூடிய சிலைகளைப் பூஜிப்பதற்கு இரண்டு பூசாரிகள் உள்ளே செல்லலாம் என்பதும் முஸ்லீம்கள் அருகில் செல்லக்கூடாது என்பதும் நீதிமன்றத்தின் உத்தரவு.

இந்நிலையில் வழக்கு கீழ்நீதிமன்றத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் போய் அலகாபாத்து உயர்நீதிமன்றத்தின் இலக்னோ பிரிவுக்குப் போகிறது. அங்கே வழக்கு நிலுவையில் இருக்கும் நேரத்தில் உமேஸ்சந்திர பாண்டே என்னும் வழக்கறிஞர் முனிசிபு நீதிமன்றத்திற்குப் போய், தான் ஒரு இராம பக்தன் என்றும் வழிபாடு நடத்தத் தனக்கு ஒப்புதல் வேண்டும் என்றும் சொல்ல, வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கும்போது தீர்ப்பு வழங்க முடியாது என்று முனிசீபு நீதிமன்றம் புறம் தள்ளிவிடுகிறது. அதன் பிறகு அவர் மாவட்ட நீதிமன்றத்தை அணுகுகிறார். இராசீவ் காந்தியின் முழு ஆசியுடன்தான் இவை நடக்கின்றன. ஏனெனில் அதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் ஷாபானு வழக்கில் கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்புக்கு எதிராக முஸ்லீம்கள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பைத் தெரிவித்தபோது அதைச் சரிசெய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படுகிறது.

முஸ்லீம்களை நிறைவு செய்ய அதைச் செய்த பிறகு ‘சங் பரிவார்’ அமைப்புகளை நிறைவு செய்ய வேண்டி இது போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நேரத்தில் மாவட்ட நீதிபதி கொஞ்சநேரம் தான் விசாரிக்கிறார். எதிர்த் தரப்பு விசாரணைக்காக வருகிறார்கள். அவர்களுடைய வாதத்தைக் கேட்பதற்குக் கூட மறுத்துவிட்டு பள்ளிவாசல் பூட்டை உடைத்து, பக்தர்கள் உள்ளே செல்லலாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிடுகிறார். இலக்னோ தூர்தர்சனில் இருந்து அதைப் படம் எடுத்து இந்தியா முழுவதும் காட்டுகிறார்கள். அது அரசியலுக்காகச் செய்யப்பட்ட ஒரு வேலை.

இப்படிப்பட்ட சூழலில்தான் சோமநாதபுரத்தில் இருந்து அயோத்தி நோக்கிய அத்வானியின் இரத யாத்திரை பிகாருக்கு வரும்போது பிகாரின் அன்றைய முதல்வர் இலாலு பிரசாத்து அதைத் தடுத்து நிறுத்துகிறார். 1989இல் பாகல்பூரில் நடைபெற்ற மிகப்பெரிய படுகொலைகள் ஆகியன இந்தியாவை வகுப்புவாத அடிப்படையில் கொதிப்படைய வைத்த சூழ்நிலைகளாக அமைந்தன. மண்டல் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வி.பி.சிங் அவர்களின் சமூகநீதி அரசு கவிழ்க்கப்பட்ட நிகழ்வு முதலியன இந்தக் காலத்தில் தான் நடக்கிறது. இதனுடைய உச்சக் கட்டமாக 1992இல் பாபர் மசூதி இடிக்கப்படக் கூடிய சூழலைப் பார்க்கிறோம். இதைத் தொடர்ந்து 1992 திசம்பர், 1993 சனவரி ஆகிய காலங்களில் மும்பையில் கலவரங்கள் நடக்கின்றன. இது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஸ்ரீகிருஷ்னா தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அந்த விசாரணை ஆணையம், பால் தாக்கரே ஓர் இராணுவத் தளபதி போல இக்கலவரங்களுக்குத் தலைமையேற்று நடத்தினார் என்று சொன்ன பிறகும் கூட எந்த வித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படாத நிலை.

இந்நிலையில்தான் இவை போன்ற சமூகச் சிக்கல்களுக்கு என்ன தீர்வு, ஒரு சிறுபான்மைச் சமூகம் என்ன அடிப்படையில் எப்படி அணுக வேண்டும் என்னும் சிந்தனையின் பக்கம் நாங்கள் சென்றோம். அதன் காரணமாகத் தான் 1995இல் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்னும் பேரமைப்பை உருவாக்கினோம். அப்படி உருவாக்கும்போது அன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருந்த குணங்குடி அனீபா அவர்கள் தலைவராகவும் நான் துணைத் தலைவராகவும் இருந்தோம். எங்களுடைய மிக முதன்மையான நோக்கம் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அந்த அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து சட்டத்தின் அடிப்படையில் அதைக் களைவதற்கான வடிகாலை அமைக்க வேண்டும்; சனநாயக அடிப்படையில் மக்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டும் என்பதுதான்.

இதில் ஒரு செய்தி என்னவென்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட மறு ஆண்டு 1993 திசம்பர் 6ஆம் நாள் கோயமுத்தூரில் சில முஸ்லீம் சகோதரர்கள் இடிப்பை எதிர்த்துக் கருப்புக் கொடி கட்டுகிறார்கள். இப்படிக் கருப்புக்கொடி கட்டியவர்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடா என்னும் கொடிய சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார். இராசீவ் படுகொலையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பயன்படுத்துவதற்காகத் தடா சட்டத்தை முதன்முதலில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார்கள். அந்தக் கொடிய சட்டத்தைக் கருப்புக்கொடி கட்டியவர்கள், பேருந்துகள் மீது கல்வீசித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் ஆகியோர் மீதும் பாய்ச்சினார்கள். அப்போது த.மு.மு.க இல்லை. இந்தத் தடாவில் சிறைப்பட்டவர்களை வெளியே கொண்டுவருவதற்காக நானும் சில நண்பர்களும் சேர்ந்து சில பணிகளைச் செய்துகொண்டிருந்தோம். அந்நண்பர்களுள் ஒருவரான பாக்கரையும் 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் நாள் ஜெயலலிதா அரசு தடா சட்டத்தில் சிறையில் அடைக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான் 1995இல் த.மு.மு.க என்னும் அமைப்பைத் தொடங்கினோம். தொடங்கிய பின் தடாவுக்கு எதிரான பேரணி நடத்தினோம். ஒரு கண்டனச் சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட குலைநடுங்கிப் போயிருந்த ஒரு சமூகச் சூழலில் தடாவை எதிர்த்து சென்னைத் துறைமுக நுழைவாயிலில் உள்ள அம்பேத்கர் சிலையில் தொடங்கி கோட்டை நோக்கிப் பேரணி நடத்தினோம். இது போன்ற பணியைச் செய்வதற்கு ஒரு வெற்றிடம் அப்போது இருந்தது; மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சாரைசாரையாக மக்கள் அப்போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். அந்நேரத்தில் நாகூரில் காவல்துறை அத்துமீறல் நடைபெற்றது. ஒரு கலவரம், அதைத் தொடர்ந்து நாகூர் தர்காவுக்கு வந்தவர்கள் எல்லாரும் அவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் கூடச் சிறையில் அடைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. நாகூர் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த இந்திரஜித் மிக மோசமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார். அதற்கெல்லாம் சேர்த்துத்தான் இந்தப் பேரணியே நடத்தினோம். அதற்குப் பிறகு மக்களிடம் இதற்குக் கிடைத்த ஆதரவை வைத்துக் கொண்டுதான் த.மு.மு.க.வைத் தமிழகம் முழுவதும் கட்டியமைக்கக் கூடிய பணியைத் தொடர்ந்து செய்தோம்.

வெறுமனே உரிமைகளுக்கான போராட்டத் தளமாக மட்டும் இல்லாமல் எங்களுடைய பணிகளை விரிவுபடுத்தினோம். இப்போது தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் இரத்த தான முகாம்கள் நடத்துகிறார்கள். ஆனால் ஒரு மக்கள் திரள் அமைப்பாக இரத்த தான முகாம்களைத் தேவைகளுக்கு ஏற்பவோ குடியரசு நாள், விடுதலைத் திருநாள் ஆகியவற்றின்போதோ நாங்கள் தாம் முதன்முதலில் தமிழகத்தில் நடத்தினோம். இப்போதும் கூடத் தமிழகத்தில் மிக அதிகமாக இரத்தத்தான முகாம்கள் நடத்தக் கூடிய ஒரு அமைப்பாகத் த. மு.மு.க இருக்கிறது. எங்களுடைய தொண்டர்கள் கொடுக்கும் இரத்தம் பெரும்பகுதியாக முஸ்லீம் அல்லாத சமூக மக்களுக்குத்தான் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. இதே போல விபத்துகள் ஏற்படுகிறபோது உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்று உதவி செய்யும் பணியையும் த.மு.மு.க வில் எங்கள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதால்தான் 2004ஆம் ஆண்டு திசம்பர் கடைசி வாரம் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தமிழகக் கடற்கரையோரம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியபோது பட்டினப்பாக்கத்தில் தொடங்கிக் குளச்சல் வரை முதலில் களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்கின்ற பணியையும் த.மு.மு.க தொண்டர்கள் செய்தார்கள்.

இப்போது எண்பத்தைந்து விரைவுச் சிகிச்சை ஊர்திகள் த.மு.மு.க சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்துச் சமூகத்தினருக்கும் இயங்கக்கூடிய நிலை இருக்கிறது. இவ்வாறு பலவற்றைச் செய்து வருகிறோம். இதனுடைய அடுத்தகட்டமாக 2007இல் மனிதநேய மக்கள் கட்சி என்னும் ஓர் அரசியல் கட்சியையும் தொடங்கினோம். அரசியல் என்பது ஒரு தொழிலாக இன்று இருக்கிறது. அரசியல் என்பது சேவைக்கான ஒரு வழித்தடம் தான்! ஆனால் அது தொழிலாக மாறியிருக்கக் கூடிய சூழலில் ‘அரசியல் என்பது ஒரு சேவைதான்! மக்கள் சேவையே நமது முதன்மை!’ என்னும் அடிப்படையில் தகுந்த கொள்கைத் திட்டங்களை வகுத்து மனிதநேய மக்கள் கட்சியும் இயங்கி வருகிறது.

கீற்று: தமிழகத்தின் மதச்சார்பற்ற அரசியலில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். பெரியார் காலம் தொட்டு திராவிட இயக்கங்களோடு நெருக்கமான உறவு இஸ்லாமிய இயக்கங்களுக்கும் தலைவர்களுக்கும் இருந்திருக்கிறது. திராவிட இயக்கப் பாரம்பரியம் பலவீனப்பட்டு இருக்கும் இன்றைய சூழலில் இஸ்லாமியர்களின் நலன்களை முன்னெடுத்து வலுவான இயக்கமாக வளர்ந்திருக்கும் தமுமுக இந்த கடந்த காலத்தை எப்படிப் பார்க்கிறது?

தமிழகத்தில் திராவிடர் கழகம் முதலியன மூலமாக பெரியார் அவர்கள் தம்முடைய பணிகளைச் செய்து கொண்டிருந்த காலத்தில் திராவிடக் கழகத்திற்கு முஸ்லீம்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பது இயல்பான உண்மை. அதற்குப் பிறகு, திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணா தி. மு.க. வை உருவாக்கியபிறகும் கூட தி. மு. க. விற்குப் பல்வேறு தளங்களில் உதவியவர்கள், அனைத்து வகை சக்திகளையும் அளித்தவர்கள் முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான்.

கீற்று: அப்போது பொதுவுடைமைக் கட்சியும் இருந்தது. அப்படியிருக்கும்போது திராவிட இயக்கத்துடன் இஸ்லாமியர்கள் தங்களை அதிகமாகப் பிணைத்துக் கொண்டதன் காரணம் என்ன?

திராவிடக் கட்சிகள் பேசிய மொழி, வகுத்துக் கொண்ட கொள்கை, அவர்களுடைய செயல்திட்டம் ஆகியனவெல்லாம் இயல்பாகவே முஸ்லீம் சமூகத்தால் புரிந்துகொள்ளக்கூடிய, தங்களை அவற்றுடன் அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடிய நிலையில் இருந்தது. பொதுவுடைமைக் கட்சியை இந்தியாவில் தொடங்கும்போது அதில் ஏராளமான முஸ்லீம் முன்னோடித் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மேற்கு வங்காளத்தில் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இடதுசாரித் தோழர்கள் பயன்படுத்தக்கூடிய சொல்லாடல்கள், அவர்கள் எடுத்துக்கொண்ட பிரச்சினைகள் ஆகியவற்றை விட - அவற்றோடு தங்களை அடையாளப்படுத்துவதைவிட - திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் எடுத்துக்கொண்ட பிரச்சினைகள் – முஸ்லீம்களுக்கு அணுக்கமாக இருந்தன. அதனால் அவர்களது போராட்டங்களில் முஸ்லீம்கள் அதிகளவில் கலந்துகொண்டனர். 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முஸ்லீம் மாணவர்கள் பலர் முழுக்க முழுக்கத் தங்கள் ஈடுபாட்டைக் காட்டியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் 1967வரை காங்கிரசுக் கட்சியின் ஆட்சித் தமிழகத்தில் இருந்தபோது மிக முதன்மையான நிகழ்வு – இதை எல்லாம் மறந்து விடுகிறார்கள் என்பதற்காகப் பதிவு செய்கிறேன், ஆத்திகரான இராசகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சியும் நாத்திகரான அண்ணாத்துரையின் தி.மு. கழகமும் இரு துருவங்களாக இருக்கக்கூடிய சூழலில் இந்த இரு துருவங்களையும் இணைக்கக் கூடிய வினையூக்கியாகச் செயல்பட்டவர் காயிதே மில்லத்து முகம்மது இசுமாயில் சாகிபு. இரண்டு பேரையும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து அக்கூட்டணியின் காரணமாக 1967இல் இங்கே ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரசு ஆட்சியை இழந்தது. அன்று இழந்த ஆட்சியை இன்று வரை காங்கிரசு பிடிக்க முடியாத அளவு ஒரு மாற்றம் ஏற்பட்டதென்றால் அது உறுதியாக காயிதே மில்லத்து முகம்மது இசுமாயில் சாகிபுடைய முயற்சிதான்!

கீற்று: அந்தச் சமயத்தில் பெரியார், தி.மு.க. உடன் சேர்த்து முஸ்லீம் லீக்கையும் கண்டிக்கிறார் அல்லவா?

தி.க., தி.மு.க., ஆகியவற்றின் பிரிவால் அவர் கண்டித்திருக்கலாம். ஆனால் காயிதே மில்லத்துடன் பெரியாருக்கு நல்ல உறவு இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் காயிதே மில்லத்து அவர்கள் மறைந்த போது ‘தம்பி! என்னைவிட்டு முன்னாடியே போய்விட்டாயா?’ என்று உருக்கமாகவே பெரியார் பேசிய பதிவுகள் கூட இருக்கின்றன.

முஸ்லீம் லீக் என்பது மிகப்பெரிய நன்மை. ஆனால் அவர்களே சமூக அடிப்படையில் மிகப்பெரிய தவற்றைச் செய்திருக்கிறார்கள். தங்களுடைய தனி அடையாளத்தை - அதாவது கட்சி என்னும் அடிப்படையில் - கட்சியின் இரண்டாம் மட்டத் தொண்டர்கள், மூன்றாம் மட்டத் தொண்டர்கள் ஆகியோரை இழக்கக்கூடிய அளவுக்கு அவர்களுடைய உறவுகள் திமுகவுடன் அமைகின்றன. இதன் காரணமாக முஸ்லீம் லீகைச் சேர்ந்த பலர் திமுகவிலும் உறுப்பினர்களாகின்றனர். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் காயிதே மில்லத்திற்குப் பிறகு அப்துல் சயீது சாயிபு அவர்கள் முஸ்லீம் லீகின் தலைவராக இருந்தபோது - திமுகவுடனான உறவைப் பிரித்து அவர் வெளியே வரும் நேரத்தில் - தலைவர்கள் தாம் வந்தார்களே தவிர தொண்டர்கள் எல்லாம் திமுகவில் தங்கிவிட்டார்கள். சான்றாக நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த முபாரக்கு சென்ற சட்டப்பேரவையில் திமுகவின் கொறடாவாக இருந்தார். தொடக்கத்தில் அவர் முஸ்லீம் லீகின் இளைஞரணித் தலைவராக இருந்தவர். இப்படித் தனி அடையாளத்தை இழக்கும் அளவுக்கும் திமுகவின் சிறுபான்மை அணி என்னும் அளவுக்கும் கட்சியே முடங்கிப் போகும் ஒரு சூழல் இருந்தது. அது மட்டுமில்லாமல் சமூகத்திற்குத் தேவையான உருப்படியான கோரிக்கைகளை வலியுறுத்திப் பெறவும் தவறிவிட்டார்கள்.

2007இல் வந்த சிறுபான்மை முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை - அண்ணாவிடம் 1967இலேயே கேட்டிருந்தால் தந்திருப்பார்; 1969இல் கருணாநிதியிடம் கேட்டிருந்தால் கிடைத்திருக்கும். அதைச் செய்யவில்லை. நீண்ட நோக்கு இல்லாமல் தேர்தல் வரும்போது அவர்கள் கொடுக்கும் இடங்களில் போட்டியிடுவது என்ற அளவில்தான் இந்த உறவு இருந்தது. இது ஒரு காலத்தில் எந்த அளவுக்குப் போய்விட்டது என்றால் முஸ்லீம் லீக் தனிச் சின்னத்தில் ஏணி அல்லது தராசுச் சின்னத்தில் போட்டியிட்ட நிலை மாறி எந்தப் பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்களோ அந்தக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடக்கூடிய நிலை வந்துவிட்டது. அப்படிப் போட்டியிட்டால் கூட, தேர்தலுக்குப் பிறகு இவர்கள் தனிக்கட்சி என்று சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ அடையாளம் காட்டப்படும் நிலை இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அந்த விதியைத் திருத்திய பிறகு இவர்கள் அந்தக் கட்சி உறுப்பினராகச் சேர்ந்தால்தான் அச்சின்னத்தில் போட்டியிட முடியும் என்னும் நிலை ஏற்பட்டது.

இன்றைக்கு முஸ்லீம் லீகிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர அவர்கள் இருவரும் திமுகவின் உறுப்பினர்கள். வேலூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லீம் லீக் உறுப்பினர் என்று சொல்லிக்கொண்டாலும் கூட அவர் திமுக உறுப்பினர் என்னும் நிலைதான் இருக்கிறது. சட்டமன்றத்திலும் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்; நாடாளுமன்றத்திலும் இருக்கிறார்கள். ஆனால் இந்தச் சமூகச் சிக்கல்களை எல்லாம் அவர்கள் உரிய முறையில் எடுத்துக் கூறத் தவறிவிட்டார்கள்; சமூக மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளி பெரிய அளவில் ஏற்பட்டு விட்டது. ‘இது போலப் போராட்டம் நடத்தி சிறைப்படுவது முதலியவற்றை நாங்கள் நடத்தியதே இல்லை. இந்தச் சமூகத்தில் போராடும் மனப்பான்மையை நீங்கள் தாம் உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று அப்துல் சயீது சாயிபு அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் என்னிடம் நேரடியாகவே சொன்னார். இப்படிச் சொல்லக்கூடிய அளவில் தான் முஸ்லீம் லீகின் நிலை இருந்தது.

அதனால்தான் த.மு.மு.க வைத் தொண்ணூற்று ஐந்தில் தொடங்கியபோது அதற்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது. அதனால் சிறுபான்மை மக்கள் தொடர்புடைய உரிமைகளை இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் போதுமான அளவுக்கு நிறைவேற்றவில்லை. அவர்களுக்குத் தேவையான அழுத்தங்களை இருக்கக்கூடிய முஸ்லீம் கட்சிகள் கொடுக்காததின் காரணமாகத் தான் த.மு.மு.க அமைப்புத் தேவைப்பட்டு உருவாகும் நிலை ஏற்படுகிறது.

கீற்று: திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்தும் விடுதலை வாங்கிய காலத்தில் இருந்தே பல முஸ்லீம்கள் பலர் வறுமை நிலையில் உள்ளனர். அவர்களுக்கான சார்புநிற்றல் (representation) குறைவாக இருக்கிறது. இன்று வரை அவர்களுடைய ஏழ்மை நிலை பெருகிக்கொண்டே போகிறது. இப்படிப்பட்ட நிலைகள் இருந்தும் முஸ்லீம் லீக் ஏன் இட ஒதுக்கீட்டைப் பற்றிச் சிந்திக்கவில்லை?

பிரிவினைக்குப் பிறகு, விடுதலைக்குப் பிறகு உள்ள காலகட்டம் இந்திய முஸ்லீம்கள் வரலாற்றில் மிக வேதனையான ஒரு காலம். முஸ்லீம் லீக் தான் பிரிவினைக்குக் காரணம் என்ற பொதுவான குற்றச்சாட்டு இருந்தது. ஆகவே நாம் தப்புச் செய்துவிட்டோமோ என்னும் மனநிலையில் முஸ்லீம் லீக்கில் இருந்தவர்கள் பணியாற்றினார்கள். கிட்டத்தட்ட எழுபது வரை மிகப்பெரிய அளவில் பரந்துபட்ட பார்வையைப் பார்க்கமுடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு ஓரளவு இயல்பான நிலை வந்தபிறகு இதைப் பற்றியெல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் 2006இல் வந்த சச்சார் குழு அறிக்கையைப் போல இந்திராகாந்தி தலைமை அமைச்சராக இருக்கும்போது கோபால் சிங் குழுவின் அறிக்கை வந்தது. அது சச்சார் குழு சொன்னதை இருபது ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது. கோபால் அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையில் எங்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று குரல் கொடுக்கக்கூடிய நிலை இல்லாத சூழல்தான் இருந்தது. அதனால் முஸ்லீம் தலைமை தொலை நோக்குடன் இயங்குவதற்குத் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கீற்று: நீண்டகாலமாக திராவிட இயக்க அரசியலில்தான் இஸ்லாமியர்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். நாற்பதாண்டுகால திராவிட இயக்கம் இஸ்லாமிய சமூகங்களிடையே எவ்விதமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது?

முஸ்லீம் சமூகத்தின் நலனுக்காக பலவற்றைத் திராவிட இயக்கங்கள் செய்திருக்கிறார்கள் என்பது உண்மை. சமூக நல்லிணக்கம் இங்கே நிலவுகிறது என்றால் திராவிட இயக்கங்களின் தலைவர்களுடைய பேச்சுகள், எழுத்துக்கள் அதற்குக் காரணமாகும். ஒப்பீட்டு அளவில் அதிமுகவை விட திமுக அதிகமாகச் செய்திருக்கிறது என்று சொல்லலாம். அதே வேளையில் தி.மு.க ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. 1997இல் கோயமுத்தூரில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட பிறகு நடந்த நிகழ்வுகள் ‘தமிழகத்தில் ஓர் ஆட்சி இருக்கிறதா?’ என்று கேள்வி எழும் அளவுக்கு மிக மோசமாக இருந்தன. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நட்டம், பல உயிர்கள் படுகொலை ஆகியவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத ஓர் ஆட்சியாக அது இருந்தது. கடைகள் இழந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் வழங்கினார்கள். ஆனால் அங்குக் கொலைகளில் ஈடுபட்டவர்கள், கொலைகளுக்குக் காரணமான காவல்துறை அலுவலர்கள், சமூக எதிரிகள் ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதற்குப் பிறகு தான் கோயமுத்தூரில் தொண்ணூற்று எட்டில் குண்டுவெடிப்பு நடக்கிறது. அதனால் திராவிடக் கட்சிகள் சில தளங்களில் நன்மைகள் செய்திருக்கிறார்கள்; ஆனால் பிற்காலத்தில் பல தளங்களில் கோளாறுகள் செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும்.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பதினான்கு, முஸ்லீம்களால் நடத்தப்படுகின்றன. புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசு உதவிகள் வழங்குவதில்லை என 1991இல் ஜெயலலிதா முதல்வரான பிறகு கொள்கை முடிவை எடுத்தார். அதன் பிறகு வந்த தி.மு.க. அரசும் அதே முடிவில் தான் உள்ளது. இதனால் கல்வி வணிகமயமாவதற்கும் எட்டாக்கனியாவதற்கும் அரசே காரணம் என்பதும் அதனால் சிறுபான்மையினர் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுமே வருந்தத்தக்க நிலையாக உள்ளது.

கீற்று: இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற நிலை நிலவுகிறதா? தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளை மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்ல முடியுமா?

இரண்டு கட்சிகளையும் மதச்சார்பற்ற கட்சிகள் எனச் சொல்வது கடினம் தான்! ஏனெனில் இரண்டு பேருமே தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொண்டாலும் கடந்த காலங்களில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டவர்கள். தங்களுடைய கொள்கை, கோட்பாடு ஆகியவற்றைவிட ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தேர்தல் கூட்டணி வைத்து பா.ஜ.க.வின் தலைமையை ஏற்றுக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் இருந்திருக்கிறார்கள். தற்போது இரண்டு பேருமே அதற்குத் தயக்கம் காட்டக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். எனவே பொத்தாம் பொதுவாக இவர்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்ல முடியாது. அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் வைத்துத்தான் அதற்கான சாயத்தைப் பூச முடியும்.

கீற்று: இஸ்லாமிய சகோதரர்களுக்குக் குறிப்பாக ம. ம. கட்சிக்கு இணக்கமாக எந்தக் கட்சிகளைப் பார்க்கிறீர்கள்?

தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிச்டு பொதுவுடைமைக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் மதச்சார்பற்ற நிலையில் மிக உறுதியாக இருக்கிறார்கள். இந்த இரண்டைத் தவிர, பா.ம.க. வும் ம.தி.மு.க. வும் பாரதிய சனதாவுடன் இருந்திருக்கிறார்கள். தே.மு.தி.க. இதுவரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. எனவே எங்களைப் பொறுத்தவரையில் பொதுவுடைமைக் கட்சிகள் இரண்டும் தான் மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்வதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறார்கள்.

கீற்று: நீதிக்கட்சிக் காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் என்பது இருந்து வருகிறது. இன்றும் அதற்கான தேவைகள் உள்ளன. இவ்விடயத்தில் ம.ம.க. வின் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் தேவை என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. அதற்கான கருத்து உருவாக்கத்தையும் செய்து வருகிறது. சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் மிகவும் இன்றியமையாதது. அதை எதிர்க்கக்கூடிய ஆட்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான தளத்தில் தான் ம.ம.க. நிற்கிறது.

பொதுவான மனித நியதிகளுக்கு எதிராக இருப்போரை நாங்கள் எதிர்க்கிறோம். தீண்டாமைக்கு எதிராக யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்போம். தீண்டாமையை ஆதரித்து அந்தக் கோட்பாட்டைச் செயல்படுத்த வேண்டும்; அந்த நடைமுறை இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகத்தான் இருப்போம்.

கீற்று: தமுமுக - வின் அரசியல் அணியாக மனித நேய மக்கள் கட்சியை உருவாக்கியிருக்கிறீகள். மனித நேய மக்கள் கட்சி இஸ்லாமியர்களின் அரசியல் கோரிக்கைகளை மட்டும் முன்னெடுக்கும் கட்சியாக இருக்குமா அல்லது சமூகத்தின் பிற பிரிவினரின் நலன்களையும் உள்ளடக்கிய கோரிக்கைகளை முன்னெடுக்குமா? எவ்வாறாக இருப்பினும், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பாலான உங்கள் பார்வைகள் அணுகுமுறைகள் என்ன?

ஒன்றை மட்டும் இதற்கு விடையாகச் சொல்ல விரும்புகிறேன். த.மு.மு.க. முழுக்க முழுக்க முஸ்லீம்களுக்கான ஓர் அமைப்பாக இருந்த போதிலும்கூட, நாங்கள் தேர்தலில் போட்டியிடக்கூடிய ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்பாகவே, த.மு.மு.க. வின் பணிகளை நீங்கள் பார்த்தீர்களேயானால் அது இரத்தத் தான சேவையாக இருந்தாலும் சரி, விபத்து முதல் உதவி, இயற்கைப் பேரிடர் உதவி ஆகிய நிகழ்வுகளாக இருந்தாலும் சரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர், சாலை, மின்வசதி ஆகியவற்றில் குறைபாடாகவோ இருந்தாலும் சரி அனைத்துச் சமூக மக்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறோம்; போராடியிருக்கிறோம். ம. ம. க. வைப் பொருத்தவரை அது ஓர் அரசியல் கட்சி. இந்த அரசியல் கட்சியில் முஸ்லீம்கள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கிறார்கள். முஸ்லீம் அல்லாதோரும் நிர்வாகிகளாகப் பல்வேறு மட்டங்களில், அளவுகளில் செயல்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சமூக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவும் வலிமையாகக் குரல் கொடுக்கக் கூடிய கட்சியாகத்தான் ம. ம. க. விளங்கும். இம்மக்களுக்காகப் பல போராட்டங்களை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

முஸ்லீம் மக்கள் தொடர்பான விடயங்களுக்கு மட்டும் போராடாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவளி, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வை எதிர்ப்பது முதலிய பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் தீயவிளைவை எடுத்துரைத்து அங்குள்ள டாக்டர். புகழேந்தி ஆகியோரையெல்லாம் இணைத்துப் போராடியிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்; முழு மதுவிலக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று மதுக்கடை மறியல் போராட்டத்தை மாநில அளவில் நடத்தியிருக்கிறோம். ம. ம. க. ஒரு பொதுவான தளத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தூய்மையான அரசியல் நெறிமுறைகளை வகுப்பதற்காக இயங்கக்கூடிய ஒரு கட்சியாகும்.

கீற்று: பா.ம.க. தொடக்கத்தில் வன்னியர் சங்கமாக இருந்தபோது வன்னியர்களுக்கான அமைப்பாக மட்டும் அறியப்பட்டிருந்தது. பின்னர் அவர்களிடையே ஒரு மாற்றம் ஏற்பட்டு பா. ம. க. என்னும் அரசியல் கட்சி தொடங்கப்படுகிறது. அப்போது பெரியார், அம்பேத்கார் ஆகியோரின் கொள்கைகளை முன் வைத்து, தமிழ்த்தேசியம் பேசினார்கள்; தலித் எழில்மலை முதலிய தலித்தலைவர்களையும் மற்றவர்களையும் இணைத்தார்கள். ஆனால் படிப்படியாக மீண்டும் மாற்றம் பெற்று பா. ம. க. வன்னியர்களுக்கான கட்சியாக விளங்கி வருகிறது. இது போன்ற ஒரு வரலாற்றுப் பாடம் நம் கண் முன்னால் நடந்திருக்கிறது. இதை ம. ம. க. எப்படிப் பார்க்கிறது?

jawarulla_350 பா. ம. க. வைத் தொடங்கியபோது மருத்துவர் இராமதாஸ் சொன்னது போல ஒரு விடயத்தை நாங்கள் சொல்லவில்லை. த. மு. மு. க என்கிற சமூக அமைப்பு அரசியலில் ஈடுபட வேண்டும்; தேர்தல் ஆணையத்தில் பதியப்பட்ட ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்பதற்காக ஒரு பொதுவான பெயரில் ம. ம. கட்சியைத் தொடங்கியிருக்கிறோம். இது முதன்மையாக முஸ்லீம்களுக்கான ஒரு கட்சியாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் வாதாடுவோம்; போராடுவோம். இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, இது முஸ்லீம்கள் அதிகமாக இருக்கக்கூடிய கட்சி என்பதை அறிந்துகொண்டு முஸ்லீம் அல்லாதோர் ஏராளாமான பேர் எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். எனவே எங்களைப் பா. ம. க. உடன் ஒப்பிட வேண்டாம். அவர்கள் கூறியது போல நாங்கள் சொல்லவில்லை. காரல் மார்க்சுப் படத்தையும் பெரியாரின் படத்தையும் காயிதே மில்லத்தின் படத்தையும் போடக்கூடிய பா. ம. க. இதுவரை நடந்திருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தியதில்லை என்பது தான் கசப்பான உண்மை. நாங்கள் அவர்களைப் போலச் சொல்லவில்லை.

இது முஸ்லீம்கள் அதிகமாக உள்ள ஒரு கட்சி; முஸ்லீம்களுக்குச் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளாட்சி மன்றத்திலும் ஆக்கப் பங்களிப்பு இல்லாத ஒரு வெற்றிடம் நிலவுகிறது. அதை நிரப்புவதற்காகத் தான் இந்த அரசியல் கட்சியாகும். அதே நேரத்தில் எல்லாப் பிரிவு மக்களின் சிக்கல்களையும் நாங்கள் எடுத்துக்கொள்வோம். இதைப் புரிந்து, அறிந்து நிறையப் பேர் ம. ம. ம. வில் உறுப்பினர்களாகச் சேர்ந்து வருகின்றார்கள். அவர்கள் த. மு. மு. க. என்னும் பாரம்பரியத்தில் எங்களுடைய பணிகளைப் பார்த்திருக்கிறார்கள். அரசியல் கட்சியாக இல்லாத போதே தன்னலமற்ற வகையில் பணியாற்றியதைப் பார்த்திருக்கிறார்கள். அதை மனத்தில் வைத்துத் தான் இக்கட்சியில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.

கீற்று: இராசேந்திர சச்சார் குழு அறிக்கை, இரங்கநாத் மிஸ்ரா அறிக்கை தொடர்பான விவாதங்கள் மேலெழுந்து வரும் சூழலில் ஆக்கப்பூர்வமான செயலைக் காங்கிரசுக் கட்சி செய்யும் என எதிர்பார்க்கிறீர்களா? நடுவண் அரசுகள் சச்சார் அறிக்கை குறிப்பிடும் சிக்கலை எந்த அளவு தீர்க்க முன்வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இதில் இரண்டு விடயங்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முதலாவது முஸ்லீம்களின் கல்வி, பொருளியல் ஆகியன பற்றிய நீதியரசர் இராசேந்திர சச்சார் குழுவின் அறிக்கை என்பது நிலவரத்தை எடுத்துச் சொன்னது; இரண்டாவது நீதியரசர் இரங்கநாத மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை என்பது அந்நிலவரத்திற்குரிய தீர்வைச் சொன்னது. சச்சார் அறிக்கை முஸ்லீம்களின் சமூகம், பொருளியல், கல்வி ஆகியவற்றின் நிலை பல தளங்களில் இந்தியாவில் வாழும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களைவிட மிக மோசமாக இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. நடுவண் அரசு அமைத்த குழுவின் அறிக்கை என்பதால் அது முதன்மை பெறுகிறது. அடுத்தது 2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரசு, தி. மு. க. ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளில் முஸ்லீம்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இந்திய அளவில் இட ஒதுக்கீடு தருவோம் என உறுதிமொழி அளித்தார்கள். ஆட்சிக்கு வந்தபின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த அளவுச் செயல்திட்டத்தில் ஆறு மாதங்களுக்குள் ஓர் ஆணையத்தை அமைத்து அவ்வாணையத்தின் பரிந்துரையைப் பெற்று கல்வி, வேலை ஆகியவற்றில் இட ஒதுக்கீடு தருவோம் எனச் சொன்னார்கள். மிஸ்ரா ஆணையம் அதற்காகத் தான் அமைக்கப்பட்டது.

மருத்துவ ஆய்வு என்பது ஒரு மனிதனின் நோய்களை சொல்லும்; மருத்துவர் அதற்கேற்ப மருந்துகளைக் கொடுக்க வேண்டும். சச்சார் மருத்துவ ஆய்வு செய்பவர் போலச் செய்திருக்கிறார்; மிஸ்ரா மருத்துவராகச் செயல்பட்டிருக்கிறார். சச்சார் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுத்திருக்கிறது. பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அப்படி வந்ததுதான்! இந்தியாவில் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் தொண்ணூறு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகள் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இவ்வளர்ச்சிப் பணிகள் முஸ்லீம்கள் அல்லாதோருக்கும் பயனுள்ளதாக அமையும். ஆனால் இதற்கு மேல் வேறெதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

மிஸ்ரா அறிக்கையை வெளியிடக் கோரி நாங்கள் 2007ஆம் ஆண்டு மார்ச்சு ஏழாம் நாள் நாடாளுமன்றத்திற்கு எதிரே பேரணி நடத்தினோம். அதன்பின் தான் 2007 ஆம் ஆண்டு மே மாதம் அந்த அறிக்கையைத் தலைமை அமைச்சரிடம் கொடுத்தார்கள். அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டி முதல்வர் கருணாநிதியிடமும் தலைமையமைச்சரிடமும் பலமுறை வலியுறுத்தியிருக்கிறோம். அந்த அறிக்கையை 2009 ஆம் ஆண்டு திசம்பரில்தான் நாடாளூமன்றத்தில் வைத்தார்கள்; ஆனால் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் எந்தவித நடவடிக்கையையும் நடுவண் அரசு எடுக்கவில்லை. சச்சார் அறிக்கையையும் மிஸ்ரா அறிக்கையையும் மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துகிறார்களோ என்னும் ஐயம் இதனால்தான் ஏற்படுகிறது. உருப்படியாகப் பல செயல்களை அரசு செய்ய வேண்டியிருக்கிறது. அவற்றுள் இட ஒதுக்கீடு என்பது முதன்மையான ஒன்று. ஒரு சமூகம் பொருளியலில் முன்னேறக் கல்வி இன்றியமையாத ஒன்று. அக்கல்வியை ஊக்குவிக்க மாணவர் உதவித்தொகை(‘Scholarship’) வழங்குவது என்பதெல்லாம் சிறியதுதான்! அதற்கு மாற்றாகச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்கள், உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றிற்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு நடத்த வேண்டிய கல்வி நிலையங்களைத் தனியார் நடத்துகிறார்கள்; தனியார் நடத்த வேண்டிய மது விற்பனையை அரசு நடத்துகிறது என்னும் இழிநிலை இங்கு இருக்கிறது. இந்நிலை மாறி எல்லோருக்கும் கல்வி கிடைக்கும் நிலை வரவேண்டும். குறிப்பாகச் சிறுபான்மையினருக்கு அத்தகு வாய்ப்பைக் கொடுத்தால்தான் இச்சமூகம் முன்னேறும்.

கீற்று: முதலில் தேர்தலைப் புறக்கணிப்பது, பின்னர் சிறிய அமைப்பாக உருவாகி ஒரு சில இடங்களில் நின்று வென்று இருப்பை உனர்த்துவது, பின் ஆட்சியை நோக்கி நகர்வது என்பதைத்தான் தி.மு.க., பா. ம. க. ஆகிய கட்சிகள் செயல்படுத்தி வந்திருக்கின்றன. அண்ணா, கருணாநிதி ஆகிய அறிவுசார் கூட்டத்தைக் கொண்டு மக்களைக் கவர்வது, தலித்துகளின் கோரிக்கைகளைப் பேசுவது, பெண்களின் கோரிக்கைகளைப் பேசுவது எனப் பொதுவான கோரிக்கைகளைப் பேசித் தான் தி.மு. க. மக்கள் இயக்கமாக மாறியது என்பதையும் பார்க்கிறோம். இவற்றில் இருந்து ம.ம. கட்சியின் படிப்பினை என்ன? உங்களுடைய செயல்திட்டம் என்ன? அறிவுசார் கூட்டத்தின் மூலம் மக்களைக் கவர்வது பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? குறிப்பாகத் தலித்துகள் முன்னேற்றத்திற்கு நீங்கள் முன் வைக்கும் திட்டம் என்ன?

ம. ம. கட்சியைத் தி.மு.க. உடனோ அ.தி.மு.க உடனோ ஒப்பிட முடியாது. நான் முன்னரே சொன்னது போல இது சிறுபான்மை மக்களை முன்னிலைப்படுத்தும் ஒரு கட்சியாகும். அதில் மற்றவர்களையும் நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் ம. ம. கட்சியில் நிர்வாகிகளாக இப்போது இருப்பவர்கள் திடீரென ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை; திரைத்துறை முதலிய வேறு பின்புலத்தில் இருந்தும் அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை. நான் மனித உரிமைகளின் பல தளங்களில் பணியாற்றியிருக்கிறேன். ‘பியுசில்’ (‘P.U.C.L’) அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பணியாற்றியதன் வெளிப்பாடுதான் த. மு. மு. க. அமைப்பைத் தொடங்க வேண்டும் என்னும் நினைப்பு வரக் காரணம் என்று கூடச் சொல்லலாம்.

முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அல்லாத அறிவுசார் கூட்டம் எனப் பலர் எங்களுடைய பின்புலமாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்களை அடையாளம் காட்டலாம்; பலர் அடையாளம் காட்டாமல் இருக்கலாம். 2009ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் தொடாத பல விடயங்களையும் கருத்துகளையும் நாங்கள் சொன்னோம். சான்றாகக் ‘கடலோர மேலாண்மைத் திட்டம் என்னும் பெயரில் நடுவண் அரசு கொண்டு வரும் திட்டம் எப்படிக் கடலோர மக்களைப் பாதிக்கும்? அதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும்?’ என்பதைச் சொன்னதைச் சொல்லலாம். இது ஒரே ஒரு சான்றுதான்! இதே போலத் தலித்து மக்கள் எங்கள் தொப்புள் கொடி உறவு என்னும் அடிப்படையில் ஏராளமான செயல்திட்டங்கள் மட்டுமல்லாமல் களத்தில் இறங்கியும் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். எனவே ஒரு தொலைநோக்குப் பார்வை, அதற்கான அறிவுசார் பின்புலம் ஆகிய அனைத்தையும் கொண்டுதான் ம. ம. க. இயங்கிக் கொண்டிருக்கிறது.

கீற்று: சிங்கள பெருந்தேசிய இன வன்முறையையும், இலங்கை அரசையும் வெறுமனே தமிழ் மக்களுக்கு எதிரானது என்று மட்டும் பார்க்கிறீர்களா? அல்லது ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது என்று பார்க்கிறீர்களா?

ஆமாம். ஒட்டுமொத்தமாகச் சிறுபான்மையினருக்கு எதிராகத் தான் ஈழச்சூழல் உள்ளது.

கீற்று: கடந்த ஆண்டு ஈழப்போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தது. இது அமைதிக்கு வழிவகுக்கும் என்று கருதுகிறீர்களா?

இவற்றையெல்லாம் பற்றி நாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். போர் முடிந்து விட்டது; அமைதி திரும்பி விட்டது என்னும் நிலையில் மக்கள் இருந்தாலும் கூட சர்வாதிகாரத்திற்குத் தான் இந்தப் போர் வழிவகுத்திருக்கிறது. பன்னாட்டு அவையின் பார்வையாளர் குழுவே வரக்கூடாது எனப் பன்னாட்டு அவையின் அலுவலகத்திற்கு முன் நின்று கொக்கரிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது; பன்னாட்டு அவையின் பொதுச் செயலர் தம்முடைய அலுவலர்களை எல்லாம் திரும்பப் பெறும் சூழல் அமைந்திருக்கிறது. இப்படி சர்வாதிகாரத்திற்கு உரிய ஒரு முன்னோட்டமாகத் தான் சூழல் இருக்கிறது. சிங்களவர்கள், தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று மூன்று இனங்கள் இருந்தாலும் இந்த இரண்டு சிறுபான்மை இன மக்களின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் அளவில் சூழல் மாற வேண்டும் என்கிற அழுத்தத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொடுக்க வேண்டும். தமிழர்களின் தலைமை எப்படிச் சிதைக்கப்பட்டிருக்கிறதோ அதே போல எம். எச். அஸ்ரப் அவர்களின் மரணத்திற்குப் பிறகு முஸ்லீம்களின் தலைமையும் கூடப் பல கூறுகளாகச் சிதைக்கப்பட்டிருக்கிறது என்னும் வருத்தமான நிலைதான் இருக்கிறது. மீள்குடியேற்றம் எதுவும் இல்லாத சூழல்தான் நிலவுகிறது. இலங்கை அரசு முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் தன்னாட்சி தர வேண்டும். இந்தியாவில் நாம் பேசும் மாநிலத்தன்னாட்சியையாவது குறைந்தது அவர்களுக்குத் தரவேண்டும் என்பது தான் இச்சிக்கலுக்குத் தீர்வாக அமையும்.

கீற்று: தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குறுங்குழுவாதப் பிரிவினர் 1986-ல் விடுதலைப் புலிகள் யாழ்பாண முஸ்லீம்களை வெளியேற்றதையும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களையும் குறிப்பிட்டு புலிகள் இயக்கத்தை விமர்சித்து வருகிறார்கள். அத்தகைய சம்பவங்களைக் குறிப்பிட்டு ஈழ விடுதலைக்கான நியாயத்தையே மறுத்தும் வருகிறார்கள். இலங்கை அரசின் பக்கம் சாய்கிற போக்குகள் வளர்ந்திருக்கிறது. ஆனால், ஈழத்தில் இஸ்லாமியர்கள் மீது மோசமான தாக்குதல்கள் நிகழத் தூண்டுதலாகவும் காரணமாகவும் இருந்த கிழக்குப் மாகாண முதல்வராக இப்போதிருக்கும் கருணா மீது விசாரணை நடத்தக் கோருவதில்லை. இது குறித்த உங்கள் பார்வைகள் என்ன? பொதுவில் ஈழ விடுதலைக்கு நியாயம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

ஈழவிடுதலை என்பது ஒரு தனி விடயம். நான் இந்தத் தலைப்புக்குள் போக விரும்பவில்லை. ஆனால் அம்மக்களின் உரிமைகள் – அவர்கள் ஈழத்தமிழர்களானாலும் சரி, முஸ்லீம்களானாலும் சரி, மலையகத் தமிழர்களானாலும் சரி, அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் இலங்கை அரசு நடந்து கொண்டிருக்கிறது. அது கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும். அதே நேரத்தில் ஈழத்தின் வடகிழக்கு மாகாணத்தில் வாழக் கூடிய முஸ்லீம்கள் பல நிகழ்வுகளில் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி (‘Caught in cross fire’) என்பது போல இரண்டு மோதல்களுக்கு இடையில் சிக்கித் தவித்துத் தங்கள் வாழ்வை, நிலத்தை இழந்து ஆழமாகக் காயப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கருணாவுக்கு ஆதரவாகவெல்லாம் இல்லை. அவர்களுடன் நான் தொடர்பில்தான் இருக்கிறேன். கருணாவை அவர்கள் நம்பவில்லை. இந்தக் காயங்களுக்கு மருந்து போடும் வகையில் நல்லிணக்கம் மலர்வதுதான் சிறுபான்மைச் சமூகங்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு வழியை அமைக்கும்.

கீற்று: நல்லிணக்கம் ஏற்படுத்தும் அதே நேரம் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அல்லவா?

தவறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். 2009ஆம் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் என்னுடைய தேர்தல் பரப்புரைகளையும் ம. ம. கட்சியின் தேர்தல் அறிக்கைகளையும் பார்த்தீர்கள் என்றால் ஈழப்படுகொலையை நாங்கள் கடுமையாகக் கண்டித்திருக்கிறோம் என்பது தெரியும். இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் மனித உரிமைத் தளத்தில் பணியாற்றுபவன் என்னும் அடிப்படையில் ‘பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒரு போர்க்குற்றவாளி இராசபக்சே’ என்று நான் தான் மயிலாடுதுறை செய்தியாளர் கூட்டத்தில் முதன் முதலில் சொன்னேன். அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டின் பிற தலைவர்கள் அதைச் சொல்லத் தொடங்கினார்கள். எப்படிப் போபால் படுகொலைக்குக் காரணமான வாரன் ஆண்டர்சனைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ‘திராணி’யற்று இருக்கிறதோ அதே போல ஒரு ‘கிரிமினல்’ குற்றாவாளியான டக்ளஸ் தேவானந்தாவிற்குத் தலைமையமைச்சரே விருந்துபச்சாரம் செய்கிறார். அதைப் பற்றிய செய்திகள் வெளிவந்த பிறகும் அவர் திரும்பவும் அதையே தொடர்கிறார் என்பதெல்லாம் ஒரு வெட்கக்கேடான செயல் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு ஆகும்.

கீற்று: இங்குள்ள தி. மு. க., போன்ற கட்சிகள் மாநிலம் சார்ந்த அரசியலில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு வெளியுறவுக்கொள்கையில் எவ்வித நிலைப்பாடும் இல்லை. அதனால் ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்கும் வலுவற்றவர்களாக இருக்கிறார்கள். வெளியுறவுக் கொள்கை பற்றிய தேவையும் தி. மு. க போன்ற கட்சிகளுக்குப் பெரிதாக இல்லை. ஆனால் ம. ம. க. விற்கு வெளியுறவுக் கொள்கையில் ஒரு நிலைப்பாடு, ஒரு பார்வை இருக்க வேண்டிய தேவை இருப்பது போலத் தெரிகிறது. இந்திய அரசின் முஸ்லீம் நாடுகளுடனான உறவு, இஸ்ரேலுடனான உறவு ஆகியவற்றில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க அரசை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. வெளியுறவுக்கொள்கையில் தொடர்ந்து பல்வேறு தவறுகள் நடந்து வருகின்றன. இப்போது பங்களாதேஸ் உடன் மோசமான அணுகுமுறை, பாகிஸ்தானுடன் மோசமான இந்துத்துவ நிலைப்பாடு என வெளியுறவுக்கொள்கை இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன விடை சொல்கிறீர்கள்?

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்! வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கும் தொடர்புடையது என்பதை எல்லாம் புறந்தள்ளிய வண்ணம்தான் தமிழக அரசியல் கட்சிகள் இருக்கின்றன. பல அமைச்சகங்களை நடுவண் அரசிடம் கேட்பவர்கள், வெளியுறவுத் துறை அமைச்சகத்தைக் கேட்க மாட்டார்கள், இத்தனைக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் தெற்காசிய நாடுகளிலும் இன்னும் பல்வேறு நாடுகளிலும் தொழிலுக்காகச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். இப்போது நீண்ட காலமாக நாங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் தமிழக அரசு வெளிநாட்டில் வாழக்கூடிய தமிழர்களுக்கு ஓர் அமைச்சகத்தை உருவாக்கவிருக்கிறார்கள். இதை நீண்ட நாட்களுக்கு முன்பே கேரளம் செய்துவிட்டது வெளியுறவுக்கொள்கை என்பது மிக மிக இன்றியமையாத ஒன்று என்னும் அடிப்படையில் . ம. ம. க. வைப் பொருத்தவரை பல கருத்துகளைப் பல அழுத்தங்களை மிகத் தெளிவாகவே அவ்வப்போது நாங்கள் கொடுத்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அண்மையில் பல்வேறு தளங்களால் இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கக்கூடிய காசாவிற்குப் புலோட்டிலா என்னும் படகுக்குழுமம் சென்றபோது அதை இஸ்ரேல் மிக மோசமாகத் தாக்கியதை எதிர்த்து இந்திய அரசு ஒரு கண்டனத்தைக் கூடப் பதிவு செய்யாத ஒரு சூழ்நிலை இருந்தது. அதைக் கண்டித்து நாங்கள் ஓர் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் கண்டனத்தை மட்டுமாவது இந்திய அரசு தெரிவித்தது.

இப்போது அணு ஆயுதம் தொடர்பான ஒரு முன்வரைவைக் (‘Nuclear Civil Liabilities Bill’) கொண்டு வரப் போகிறார்கள். அது முழுக்க முழுக்க நம்முடைய நலன்களுக்கு எதிரானதாகவும் அமெரிக்காவின் நலனை மட்டும் பாதுகாக்கக்கூடியதாக ஒன்றாகவும் தான் இருக்கிறது. அதைப் பற்றி அ. தி. மு. க. வோ தி. மு. க. வோ சுற்றுச்சூழலுக்கும் எங்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்லிப் பசுமைத் தாயகம் நடத்தக்கூடிய பா. ம. க. வோ கூட எந்த எதிர்ப்புக்குரலையும் எழுப்பாத நிலையைப் பார்க்கிறோம். ஆனால் ம. ம. க. கட்டாயமாக அந்தச் சிக்கல்களை எடுத்துரைக்கும். அவ்வப்போது இவை தொடர்பான அறிக்கைகளை வெளியிடுகிறோம். அவை பற்றிய ஒரு தெளிவான பார்வையும் எங்களுக்கு உண்டு.

கீற்று: கீற்றில் நாங்கள் சில கட்டுரைகளை வெளியிடும்போது இஸ்லாமிய நண்பர்கள் சிலர், ‘நாங்கள் மரைக்காயர்கள்; நாங்கள் தாம் உயர்ந்தவர்கள்; பிற இஸ்லாமியர்கள் தலித்துகளாக இருந்து மாறியவர்கள்; அவர்களுடன் நாங்கள் அக மண உறவு வைத்துக்கொள்வதில்லை’ என்றெல்லாம் பின்னூட்டங்கள் கொடுத்திருந்தார்கள். அக்கருத்து உண்மைதானா? அது எந்த அளவுக்கு இஸ்லாத்திற்குள் சாத்தியம்? இவை போன்ற வேறுபாடுகள் இஸ்லாத்தில் இருக்கின்றனவா?

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் சாதிக்கும் சாதிய வேறுபாடுகளுக்கும் மனிதர்களுக்கிடையிலான பாகுபாடுகளுக்கும் இடமில்லை. ‘ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணில் இருந்தும் தான் உங்களைப் படைத்திருக்கிறோம். நீங்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே வெவ்வேறு நிறத்தினராக, கோத்திரத்தினராக, மொழியினராக நீங்கள் இருக்கிறீர்கள்’ என்பது தன் இஸ்லாத்தின் மிகத் தெளிவான கோட்பாடு. அதனால்தான் முதன்முதலாகத் தொழுகைக்கு அழைக்கக்கூடிய ஓர் உயர்ந்த பணி கருப்பு நிறம் உடைய மிலால் என்னும் நபித்தோழருக்கு நபிகள் நாயகத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. ஓர் அரபிக்கும் அரபி இல்லாதவனுக்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை என்று மிகத் தெளிவாகக் கூறி இனப்பாகுபாடுகளை ஒழித்த ஒரு முழக்கம் தான் இஸ்லாம்! அந்த அடிப்படையில் எந்தச் சாதியப் பாகுபாடுகளுக்கும் இஸ்லாத்தில் இடம் இல்லை என்பதுதான் இயல்பான உண்மை.

தமிழகத்தில் வாழக் கூடிய தொண்ணூற்று எட்டு விழுக்காட்டு முஸ்லீம்கள் – நீங்கள் குறிப்பிட்ட மரைக்காயராக இருக்கட்டும் இராவுத்தராக இருக்கட்டும், தக்கினியாக இருக்கட்டும், இலெப்பையாக இருக்கட்டும், எல்லோரும் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் என்றுதான் வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சாதிய வேறுபாடு என்பது ஒரு சிலர் அறியாமையின் காரணமாகச் சொல்லக் கூடிய ஒரு கருத்தாகும். அப்படிப்பட்ட ஒரு பாகுபாடு இருக்குமேயானால், தமிழகத்தில் ஏராளமான பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அங்கு யாரும் எப்போது வேண்டுமானாலும் சென்று சமநிலையில் நின்று இறைவனை வணங்கலாம். நீ உள்ளே வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை. அகமணத்திருமணங்களும் நடைபெற்று வருகின்றன என்பது தான் உண்மையான நிலை. சிலர் இதை மாற்றி அறியாமையின் காரணமாகவும் சாதிய அடிப்படையிலான சமூக அமைப்பில் வாழ்ந்துகொண்டிருப்பதாலும் பேசலாம். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கீற்று: கருத்தடை, கட்டாயத் திருமணப் பதிவு ஆகிய சமகால மாறுதல்களை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்னும் கருத்தைப் பலர் முன்வைக்கிறார்கள் என்பது பற்றிய உங்கள் கருத்து என்ன?

இது தேவையில்லாமல் எழுப்பப்படும் சிக்கலாகும். முஸ்லீம் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு திருமணமும் எழுத்தளவில் பதியப்படுகிறது. மணமகன் யார், மணமகள் யார், குடும்பத்தினர் யார் யார்? மணமகன் மணமகளுக்குத் திருமணப் பரிசாக என்ன கொடுக்கிறார், அதற்கு இரண்டுப் பேர் சான்றுகள், திருமணம் நடந்த இடம் என எல்லாவற்றையும் பதிவு செய்கிறார்கள். இப்படிப் பதிவு செய்தவர்களை மறுபடியும் ஏன் பதிவு செய்யச் சொல்கிறீர்கள் என்பது தான் தமிழக அரசிடம் கட்டாயத் திருமணப் பதிவை எதிர்த்துக் கேட்கும் வினாவாகும். நாங்கள் பதிவு செய்திருப்பதை ஏற்றுக்கொண்டு சான்றிதழ் கொடுங்கள் என்பது தான் முஸ்லீம் சமூகத்தின் கோரிக்கையாக இருக்கிறது.

சமகால மாற்றம் என்னும் பெயரில் அரைகுறை ஆடைகளுடன் உடல் உறுப்புகளைக் காட்டிக் கொண்டு இருப்பதை இஸ்லாமியச் சமூகம் மட்டுமல்லாது எந்தச் சமூகமும் செய்யக்கூடாது. குற்றங்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கூடிக்கொண்டே வருகிறது. குடும்பங்களில் கணவன் மனைவி உறவு சிதைந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் உள்ள புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட இப்போது குற்றங்கள் கூடியிருப்பதற்கு என்ன காரணம்? செய்தி ஊடகங்களில் குறிப்பாகக் காட்சி ஊடகங்களில் எந்தவிதச் சமூக அக்கறையும் இல்லாமல் வெளிவரும் நெடுந்தொடர்கள் முதலியனதான் முதன்மைக் காரணம்! தமிழ் நெடுந்தொடர்களை விட இந்தி நெடுந்தொடர்கள் இன்னும் மோசமாக இருக்கின்றன. அந்த அளவுக்குத் தமிழும் போய்விடக்கூடாது என்னும் அக்கறை நமக்குத் தேவை.

இஸ்லாம் என்பது கட்டுப்பாடானதும் ஒழுக்க மாண்புமிகுந்ததுமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்னும் நிலைப்பாடு உடையது. தமிழ் இணையத்தளங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு விழுக்காடு அவர்களுடைய மக்கள்தொகை விழுக்காட்டை விட அதிகம்! யுனிகோடு முறையில் இலவசமாகத் தமிழ் எழுத்துருவைக் கொடுத்தவர் தமிழ்நாட்டு முஸ்லீம் உமர்தம்பி என்பவர் தாம்! மாற்றங்கள் ஆக்கத்தின் அடிப்படையில் இருக்கும்போது அதற்கு இஸ்லாமியர்கள் ஆதரவு தருவார்கள். சமூக அசிங்கங்களுக்கும் பிளவுகளுக்கும் காரணமாக அம்மாற்றங்கள் இருக்கும் என்றால் கட்டாயம் இஸ்லாம் அதை ஏற்றுக்கொள்ளாது.

கீற்று: ஜமாத் என்பது ஒரு மேலாண்மை அமைப்பே தவிர, மதம் தொடர்பான அமைப்பு இல்லை. அதில் முஸ்லீம்கள் மட்டுமே இருப்பதால் முஸ்லீம்கள் அல்லாதோர் அதை ஒரு மத அமைப்பாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சல்மான் ருஷ்டி ஒரு கவிதை எழுதினார் என்பதற்காக அவர் மீது தடை விதிப்பது என்பதையெல்லாம் ஜமாத்தான் செய்கிறதே தவிர அது மதத்தடை இல்லை. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஜமாத்து என்பது அந்தந்தப் பகுதி முஸ்லீம்கள் உருவாக்குகின்ற ஒரு நிர்வாக அமைப்பு ஆகும். அது அந்தந்தப் பகுதிப் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வது, அடக்கத்தளங்களைப் பார்த்துக் கொள்வது, திருமணங்களை நடத்தி வைப்பது, திருமணங்களுக்குப் பின் சில இணையருக்கு (தம்பதியருக்கு) நடுவில் ஏற்படும் உரசல்களைத் தீர்த்து வைப்பது ஆகிய செயல்களைச் செய்து வருகிறது. சில இடங்களில் விதிவிலக்காகச் சிலர் தவறான முடிவுகளை எடுக்கலாம். அதற்காகச் ஜமாத் அமைப்பே தவறு என்று சொல்ல முடியாது. தங்கள் பகுதியில் வாழும் முஸ்லீம் மக்களின் நலன்களைப் பேணுவதுதான் ஜமாத்தின் தலையாய கடமையாகும். பல ஜமாத்துகள் பள்ளிகள் தொடங்குவது, கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்துவது என ஆக்க வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேர்காணல்: கீற்று நந்தன்

தட்டச்சு: முத்துக்குட்டி

Sunday, July 25, 2010

Abbass Shajahan, passed away இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய பொருளாளரும், Microsoft நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவருமான சகோதரர் அப்பாஸ் ஷாஜஹான் அவர்கள் 22-07-10 மாலை 7 மணி அளவில் மருத்துவமனையில் காலமானார்.

சகோதரரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு வல்ல ரஹ்மான் பொறுமையை தந்தருள்வானாக!
சகோதரரின் பாவங்களை மன்னித்து அவரது நல்லறங்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயந்த சுவனத்திற்கு உடமைதாரராக்கி அருள் புரிய வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறோம்.

கடந்த ஜூன் மாதம் ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது...சன் டிவி ''அசத்தப் போவது யாரு" புகழ் இயக்குனர் ராஜ்குமாருக்கு திருக்குர்ஆன் பிரதி வழங்கும் போது...

சகோதரர் அப்பாஸ் ஷாஜஹான், Low Sugar வியாதிக்காரர், தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர், Low Sugar வரும்பொழுது இனிப்புகள் உட்கொண்டு 15 நிமிடத்தில் சமநிலைக்கு வருவார். அன்றையதினமும் அதுபோல் நடந்தது அவரது துனைவியார் இனிப்புகள் கொடுத்து 15 நிமிடத்திற்கு மேல் ஆகியும் மாற்றங்கள் இல்லாததால் உடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பல மருத்துவ உதவிகள் செய்தும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இறைவனின் நாட்டப்படி நடந்து முடிந்தது.

சகோதரர். அப்பாஸ் ஷாஜஹான் அவர்கள் 18 வருடங்களுக்கும் மேலாக சவூதி அரேபியாவில் Microsoft நிறுவனத்தில் பனியாற்றி வருகிறார், அவருக்கு நிஷா, பாத்திமா என்ற இரண்டு மகள்கள் உள்ளன, இருவரும் தன் பள்ளிப்படிப்பை ரியாத் இந்தியப் பள்ளியில் முடித்து நிசா தற்சமயம் மருத்துவம் இறுதியாண்டும், பாத்திமா பொறியியலும் பயின்றுகொண்டுள்ளார், நிஷாவிற்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.

அவரின் தகப்பனார் DR. அப்பாஸ் இப்றாஹிம் அவர்கள் நன்கு அறியப்பட்ட ஒரு பொதுநல சமூகசேவகர், இந்தியப்பள்ளியில் முதல் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு Honorary Adviser ஆகவும் இருந்துள்ளார். அவரது தாயார் மகனுடன் பலதடவைகள் உம்ராவிற்கு வந்து சென்றுள்ளார்.

நேற்று வெள்ளிக் கிழமை அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால் இன்று 24-07-2010 அஸர் தொழுகைக்குப் பின் நஷிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது நல்லடக்கப் பணிகள் ரியாத் இந்தியப் பள்ளியின் சேர்மன் சகோதரர் இம்தியாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது த.மு.மு.க மண்டலப் பொதுச் செயலாளர் சகோதரர் ஹூஸைன் கனி உட்பட ரியாத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், தஃப்ரஜ் குழும நிர்வாகிகள் மற்றும் திரளான தமிழ் சகோதரர்கள் கலந்து கொண்டு நல்லடக்கம் செய்து அவரது மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்தித்தார்கள்.

Friday, July 23, 2010

மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம். மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை!

வை வெறுமனே உள்ள செய்திகள் அல்ல;

மனதின் ஆன்மாவைத் தொட்டு நியாயம் கேட்கும் நீதியின் குரல்!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம். அன்று திங்கள்கிழமை. மனுநீதி நாள் முகாம். மக்கள் பரபரப்புடன் தங்கள் மனுக்களை அளித்துக்கொண்டு இருந்தனர். அந்த வரிசையில் ஒரு சிறுவன் கையில் மனுவுடன் தன்னந்தனியாக நின்றுகொண்டு இருக்கிறான். கலெக்டர் சகாயத்தின் கவனம் முழுக்க அந்தச் சிறுவன் மீதே இருந்தது.

"நான் அந்தப் பையனையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அவன் முறை வந்ததும் மனுவை என் கையில் தந்தான். கிறுக்கலான கையெழுத்து அதுல. அதை வாங்கி வெச்சுக்கிட்டு, 'என்னப்பா பிரச்னை'ன்னு கேட்டதும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான். 'என் பேர் நவீன். நான் கபிலர் மலையில இருந்து வர்றேன். ஆறாங்கிளாஸ் படிக்கிறேன். எங்க வீட்டுல நான், அம்மா, அப்பா, ரெண்டு தங்கச்சி. வீட்டுல எங்க அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சண்டை போட்டுக்குவாங்க. 10 நாளைக்கு முன்னாடி எங்க அம்மா பக்கத்து வீட்டு ஆள்கூட ஓடிப்போயிடுச்சு. அதுல இருந்து எங்க அப்பா என்னைப் பள்ளிக்கூடம் போக வேண்டாம்னு சொல்லி, தங்கச்சிகளுக்கு சமைச்சுப் போடச் சொல்லிட்டாரு. எனக்குப் படிச்சுப் பெரிய போலீஸ் ஆகணும்னு ஆசை. எப்படியாச்சும் எங்க அம்மாவைக் கண்டுபிடிச்சு எங்க அப்பாகூடச் சேர்த்துவெச்சுடுங்க சார்'னு அழுதான்.

ஒரு சின்னப் பையன்கிட்ட இருந்து அப்படி ஒரு புகாரை எதிர்பார்க்கவே இல்லை. அவனைச் சமாதானப்படுத்தி மதிய சாப்பாட்டுக்கு என்கூட வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போனேன். 'கவலைப் படாதே, உங்க அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டியது என் பொறுப்பு. நீ நிச்சயம் போலீஸ் ஆகலாம்'னு நானும் என் மனைவியும் அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவெச்சோம். உடனே, சமூக நலத் துறையில சொல்லி நவீனின் அம்மாவைத் தேடுற முயற்சிகளை முடுக்கிவிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு செய்தித்தாளைப் பார்த்தா... அதிர்ச்சி! 'மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம். மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை'ன்னு செய்தி. கீழே தங்கச்சிகளோடு நவீன் இருக்குற போட்டோ! 10 வயசுப் பையனுக்குப் பிரச்னையைத் தீர்க்க கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுக்கணும்னு தெரிஞ்சிருக்கு. ஆனா, அவனோட அப்பாவுக்கு? நாலஞ்சு நாள் எனக்குத் தூக்கமே புடிக்கலை. அந்தக் குழந்தைங்க முகத்தைப் பார்த்தா யாருக்காச்சும் கொல்ல மனசு வருமா? அதுவும் விஷம் கொடுத்துக் கொன்னுட்டு, தூக்குல வேற தொங்கவிட்டு இருக்கான். 'நான் போலீஸ் ஆகணும் சார்'னு சொன்ன நவீனோட வார்த்தைகள் இப்பவும் எனக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு!"

நன்றி:விகடன்

Thursday, July 22, 2010

கொலைக் களங்களாக மாறிவரும் பள்ளிக்கூடங்கள்!

அபினாவுக்கு 10 வயது. அப்பாவி கிராமத்துப் பிள்ளை. கூலி வேலை பார்க்கும் அடிமட்டத் தொழிலாளிக் குடும்பத்தில் இருந்து முதல் தலை முறையாகப் பள்ளிக்கூடம் போகும் சிறுமி. கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் அருகே தோட்டம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவியான அபினா, வழக்கம்போல அன்றைக்கும் பள்ளிக்குப் போனாள்.

தமிழ்ப் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியை, 'ஊஞ்சல்' என்ற வார்த்தையைக் கரும்பலகையில் எழுதிப்போட்டு, அதை ஒவ்வொருவராக வாசிக்கச் சொன்னார். எல்லோரும் வாசித்தனர். இப்போது அபினாவின் முறை. அவளால் ஊஞ்சல் என்று சொல்ல முடியவில்லை. குரல் குழறியது. 'ஊஞ்ச்சல்' எனத் தவறாக உச்சரித்தாள். கோபம் அடைந்த ஆசிரியை திரும்பத் திரும்ப 'ஊஞ்சல்' என்று உச்சரிக்கச் சொன்னார். ஏனோ, அபினாவால் முடியவே இல்லை. தவறாகவே உச்சரித்தாள்.

இதனால் கோபம் அடைந்த ஆசிரியை, "ஊஞ்சல்னு எழுதிப் போட்டதைக்கூட வாசிக்கத் தெரியலை. உனக்கு எல்லாம் எதுக்கு அஞ்சாங்கிளாஸ்? போய் ஒண்ணாங்கிளாஸ்ல படி!"என்றிருக்கிறார் கடுப்பாக.

சக மாணவ, மாணவிகள் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். தமிழ் வகுப்பு முற்றுப் பெற்றது. ஆனால், அபினாவின் மன வேதனைக்கு முற்றுப்புள்ளி விழ வில்லை. அன்று முழுவதும் வகுப்பறையில் யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள். வீட்டுக்குப் போனபிறகும் வகுப்பறையில் நிகழ்ந்த அவமானம் அவள் மனதைப் பாரமாக அழுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நொடியில் திடீரென முடிவு எடுத்து கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டாள்.

உடம்பை தீ சுட்டுப் பொசுக்க, அவள் பெருங்குரலில் அலறினாள். ஆனால், அபினாவின் உயிரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. 10 வயது பிஞ்சுப் பெண்ணின் தேகம் முழுக்கக் கரிக்கட்டையாகத் தீய்ந்து எரிந்து சரிந்தது.

இந்தக் கொடூரமான கல்வி முறை அபினாவின் உயிரைப் பலியெடுத்தது. விஷயம் அறிந்து அபினாவின் ஊராகிய நத்தம் பட்டு காலனி மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். பள்ளிக்கூடம் சென்று நியாயம் கேட்டார்கள். காவலர்களும் ஓடிவந்து விசாரணை நடத்தினார்கள். முதலில் 'அந்த டீச்சர் சொன்னதுதான் காரணம்' என்றது போலீஸ். ஆனால், வழக்குப் பதிவு மட்டும் வழக்கமான பதிவாகவே இருந்தது... 'தீராத வயிற்று வலி'யின் காரணமாக அபினா தீ வைத்துத் தற்கொலை செய்துகொண்டதாக!

பள்ளிக்கூடம் 'கொள்ளி'க்கூடமாகும் கொடுமை புதிது இல்லை. அண்மையில் வேலூர், போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூரில், கீர்த்தனா என்ற மாணவி இறந்துபோனாள். ஸ்பெஷல் கிளாஸுக் குச் செல்லவில்லை என்று பல மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துக் கொடுமைப்படுத்தப் பட்டதால்தான் அவள் செத்தாள் என்று புகார் எழுந்தது. மணப்பாறை புனித மரியன்னை துவக்கப் பள்ளியில் ஸ்ரீரோகிணி என்ற மாணவி இறந்ததற்குக் காரணம் ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்ததுதான் என்றும், அதை மறைக்க ஸ்ரீரோகிணியின் உடலை தண்ணீர்த் தொட்டியில் வீசிவிட்டனர் என்றும் கடும் புகார்கள் கிளம்பின.

இப்படி படிக்கச் செல்லும் பிஞ்சுகளைச் சித்ரவதை செய்து கொலை செய்யும் கொலைக் களங்களாக பள்ளிக்கூடங்கள் இருந்தால் எந்த நம்பிக்கையில் பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது?

மிதித்து ஆசிர்வதிக்கும் சாமியார்!


சர்ச்சைகளுக்கும் சாமியார் களுக்கும் அப்படி என்னதான் பொருத்தமோ..... பீர் குடித்து மப்பில் அருள்வாக்கு சொல்வது, கெட்ட வார்த்தைகளாலேயே பக்தர்களுக்குக் குறி சொல்வது என்ற விநோத சாமியார்களின் வரிசையில், கடந்த வாரம் நமது ஆக்ஷன் செல்லில் (044---42890005) பதிவாகி இருந்த ஒரு சாமியார் சமாசாரம் இது!

''ஹலோ... சார், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் 'சாக்லேட் சாமி'னு ஒருத்தர் அருள்வாக்கு சொல்றார். 'அம்மன் அவதாரமே நான்தான்'னு சொல்லிட்டு இவர் பண்ற சேட்டைகள் தாங்கலை. பெண் பக்தைகளுக்கு தன் கையாலேயே தலையில் பூ, நெத்தியில் குங்குமம் வெச்சுவிடுறதோட... வாயிலே சாக்லெட்டையும் திணிச்சு அனுப்புறார். எல்லாத்துக்கும் உச்ச கட்டமா பக்தர்கள் முதுகில் தன் கால்களால் ஒரு மிதி மிதிச்சு ஸ்பெஷல் ஆசீர்வாதமும்(!) பண்ணித் தொலைக்கிறார்!'' என்று அதிரவைத்தது ஒரு பெண் குரல்!


வீடியோ நன்றி ஜூவி.

'அடடே... இப்படியும் ஓர் பக்தியானந்தாவா?!' என்று 'சாக்லேட் சாமி'க்கு தரிசனம் கொடுக்க (என்னவொரு மெதப்பு!) கிளம்பினோம். கபாலீஸ்வரர் கோயிலுக்கும் சித்திரக் குளத்துக்கும் இடைப்பட்ட வீதி ஒன்றின் மாடி வீடுதான் (ஆ)சாமியின் ஆசிரமம். இரவு 8.30 மணிக்குமேல்தான் பக்தர்கள் சந்திப்பு. வாசலில் பூ விற்கும் பாட்டி, ''சாமி கால் நம்ம உடம்பில் படுறதுக்குக் கொடுத்துவெச்சிருக்கணும்... இந்தா பூ வாங்கிட்டுப்போய் சாமிய பாருய்யா...'' என்று கூவிக்கொண்டு இருந்தார்!

வரிசையாக ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் ஒட்டப்பட்டு (அதாவது, இங்கே வந்து போனாலே ஐஸ்வர்யம் கொட்டுமாம்!) இருந்த மாடிப்படிகளைக் கடந்து சந்நிதானம்(!) சென்றோம். ஆங்காங்கே ஐந்து தலை நாகம், அசுரர் முகங்கள்கொண்ட பயமுறுத் தும் சிலைகளைத் தாண்டிச் சென்றால்... 'பளிச்' மூக்குத்தியோடு கருவறைக்குள் அம்மன் சிலை! சுவர் எங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் ஆன்மிகத் தத்துவ நோட்டீஸ்களுக்கு மத்தியில்... 'சாக்லெட் பெருமை' பேசும் பிட் நோட்டீஸ்களும் அடக்கம். மல்லிகைப் பூ, கலர் கலர் சாக்லெட் பாக்கெட்டுகளோடு சாமியின் தரிசனத்துக்கு காத்துக்கிடந்த பக்தர் ஒருவரிடம் மெள்ளப் பேச்சுக் கொடுத்தோம்.

''நானும் என் பொஞ்சாதியும் ரெண்டு மாசமாத்தான் சாமியைக் கும்புட வர்றோம். சாமி பேர் வெங்கட்ரமணா. பாரீஸில் (அட, பாரீஸ் கார்னர்!) இருக்குற ஒரு தேசிய வங்கியிலதான் வேலை பார்க்கிறார். பகலில் பேங்க் வேலை; ராத்திரியில் மட்டும் பூஜை. வெள்ளி, செவ்வாய் மாதிரி விசேஷ நாட்களில் ராத்திரி ரெண்டு மணி வரைக்கும்கூட பூஜை நடக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் 'சாமியோட காலால் ஒரே ஒரு மிதி வாங்கிட மாட்டோமா'ன்னு ஏக்கத்தோடதான் வர்றோம் (எல்லாம் இந்த நாட்டைப் புடிச்ச கெரகம்!). இந்த முறை நிச்சயம் எனக்கு சாமி கருணை காட்டும்...'' என்று காத்துக்கிடந்தார் அந்த அப்புராணி பக்தர்.

சிறிது நேரத்திலேயே 'ஜல்ஜல்'லென்ற கொலுசு ஒலியோடு கம்பீரமாக அறைக்குள் நடந்து வந்தார் 'சாக்லெட் சாமி' என்ற 'அம்மன் சாமி!' காதில் வளையக் கம்மல், காலில் கொலுசு, கால் விரலில் மெட்டி.... என்று விநோத வில்லனுக்குத் தேவையான கெட்-அப்பில் ஆஜரானவர், அம்மன் சிலை அருகில் உள்ள சொகுசு நாற்காலிக்குள் உடம்பைப் புதைத்துக்கொண்டார்.

தளும்பி நிற்கும் தீர்த்தம் (தப்பா யோசிக்கப்படாது!), குவித்துவைக்கப்பட்ட குங்குமம், விதம்விதமான சாக்லெட் குவியல்களுக்கு மத்தியில் அமர்ந்து எதையோ மென்றுகொண்டே ஜரூராக அருள் வாக்குக்கு சைகை காட்டினார்.

அவ்வளவுதான்... 'ஆசீர்வாத மிதி' வாங்கக் கூட்டம் அலைமோதியது. நெடுஞ்சாண் கிடையாகத் தொப்பென்று சாமியின் பாதத்தில் விழுந்து வணங்கு கிறது கூட்டம். பக்தியின் உச்சத்தில், சிலர் சாமியின் பாதங்களைத் தொட்டு... முத்தமிட்டு உருகுவதோடு, 'சாமியின் காலால் மிதி வாங்காமல் எழும்பவே மாட் டேன்!' என்ற பிடிவாதத்துடன் படுத்த நிலையிலேயே நேரம் கடத்துகின்றனர். இன்னும் சிலர், கீழே கிடக்கும் பூச்சிதறல்களை சுத்தம் செய்யும் சாக்கில் 'மிதி' வாங்க 'விடா முயற்சி' செய்கின்றனர்!

பெண் பக்தைகளும்கூட சாஷ்டாங்கமாக சாமியின் காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எந்தவிதத் தயக்கமும் இன்றி பாந்த மாக மல்லிகைப் பூவைச் சூடி அழகு பார்க்கிறார் சாக்லெட் சாமி. உச்சி குளிர்ந்து நிற்கும் அந்தப் பெண் பக்தைகளின் நெற்றியில் அடுத்த கட்டமாக உரிமையோடு குங்குமத் திலகமும் இடுகிறார். கூடவே, மறக்காமல் அவர்களது தாலியை தன் கைகளுக்குள் பொத்தி அழுத்தியவாறு சில நொடிகள் முணு முணுக்கிறார் சாமி! இது தவிர, சொந்த வாழ்க்கைக் குறையைச் சொல்லி அழும் சில பெண் பக்தைகளின் வாய்க்குள் சட்டென்று ஓர் ஒற்றைச் சாக்லெட்டைப் பிரித்துத் திணிக்கிறார். கசப்புகள் கரைந்து இனிப்பாகிவிடுமாம்! அத்தனையையும் பக்கத்தில் இருந்து பார்த்து பூரிப்போடு பரவசமாகிறார்கள் அவரவர் கணவன்மார்கள்!

பக்தர்கள் எல்லோருக்கும் 'கால் மிதி' பாக்கியம் கிடைத்துவிடாது. அதற்கும் ஒரு முதுகு யோகம் வேண்டும். தம்பதி சகிதமாக வந்து விழுந்து வணங்கிக்கொண்டு இருந்தவர்களில், ஓர் ஆண் பக்தரின் முதுகில் திடீரென தனது இரு கால்களையும் படாரென்று தூக்கி மிதித்து சாமி 'ஆசீர்வாதம்' செய்ததில், பதறிபோனோம். மிதி வாங்கிய வலி நமக்குப் புரியவில்லை. அடுத்தடுத்து மிதி வாங்கும் ஆவலோடு கூட்டமும் முண்டியடித்துத் திணறியது.

'கடவுள்களின் உணவான சாக்லெட்டை(?) சாப்பிட்டால் முதுமையைத் தடுக்கலாம்!' என்ற 'பிராண்ட் நியூ' தத்துவத்தை விளக்கிச் சொல்கிறது பிட் நோட்டீஸ் ஒன்று. ஊருக்கே சாக்லெட் கொடுக்கும் சாமியோ தனது முதுமையை மறைக்க தலைமுடி, தாடிக்கு பளிச்சென்று 'டை' பூசி இளமையைக் காப்பாற்றுகிறார். நமது முறை வந்ததும் சாமியை நெருங்கி நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச எத்தனித்தோம். சட்டென்று டென்ஷனாகி, ''ஆன்மிகத்தைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? ஜூ.வி-யில் என்ன பக்தியைப் பற்றியா எழுதறீங்க...?'' என்று திடீர் 'அருள்' வந்து ஆட ஆரம்பித்தார். ரொம்ப நேரம் கழித்து சமாதானமாகிப் பேச ஆரம்பித்தார்.

''இந்த அம்மன் வழிபாட்டை 26 வருஷமா செய்துட்டு வர்றேன். இதுவரையிலும் எந்தக் கெட்ட பெயரும் எனக்குக் கிடையாது. ஒரு மனுஷாளைப் பாத்த மாத்திரத்திலேயே இவர் டாக்டர், இன்ஜீனீயர்னு யாராலும் சொல்லிட முடியுமா? உடம்பு சரியில்லைன்னு டாக்டர்கிட்டே போறோம். அவர் ஆம்பளை டாக்டரா... பொம்பளை டாக்டரான்னு பார்த்துக்கிட்டாப் போறோம்? யாராயிருந்தா என்ன... நமக்கு உடம்பு சரியானாப் போதும்னு நினைச்சு சிகிச்சை எடுக்குறோம்! அதே மாதிரிதான் என்னை நம்பி நிறைய பேர் பிரச்னைகளோட வர்றாங்க. அம்மன் கருணையால் அவங்களுக்கு பூ, பொட்டு வெச்சு ஆசீர்வாதம் கொடுக்குறேன். எல்லாம் சுபமாகிடுது. இதெல்லாமே ஒரு ஹீலிங் தெரபிதான்!'' என்று ஒரே போடாகப் போட்டு முடித்தார்.

நன்றி: ஜூவி.

- த.கதிரவன்
படம்: என்.விவேக்

அருவியில் குளிக்கச் செல்லும் பெண்களை சிதைக்கும் மனித மிருகங்கள்

அருவியில் குளிக்கச் செல்லும் பெண்களுக்கு நேரும் கும்பாவுருட்டி குரூரம்

ஆடையை அவிழ்த்து... அம்மணமாக நிற்கவைத்து...

''துணியை அவிழ்த்துப் போடு... ம்ம்... கழட்டு!''

''ஐயோ வேணாம் சாமீ...''

''ஏய், விடுடி... துணியை விடுடி...''

''வேணாங்க... கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா... இனிமே இங்கே குளிக்க வரலீங்க... விட்ருங்க...''

''டேய்! இவளை மட்டுமில்ல... இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி...''

இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளா வில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய 'வன சம்ரக்ஷண சமிதி' எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்! மகளின் மானம் காப்பதற்காக தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர் வாணமாக தாய் ஓடிக் காட்டியதை கைகொட்டிச் சிரித்து ரசிக்கும் கொடூர மனம் கொண்ட அந்தக் கொடியவர்களின் பிடியில் இருந்து கடைசியில் மகளும் தப்பமுடிவில்லை. அந்தக் குடும்பத் தலைவரின் கண்ணெதிரிலேயே நிகழ்ந்திருக்கிறது அத்தனை கொடுமையும்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கும்பாவுருட்டி அருவி, கேரள வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எப்போதும் இங்கே ஆர்ப்பரித்து விழும் அருவியில் குளிக்க, சுற்றுப்பட்டுத் தமிழக கிராம மக்கள் செல்வது வழக்கம். மேக்கரையில் அமைந்துள்ள வனத் துறை செக் போஸ்ட்டில் ஐந்து ரூபாய் நுழைவுச் சீட்டு பெற்று, அரை கிலோமீட்டர் அடர்ந்த காட்டுக்குள் நடந்தால், அருவி வருகிறது. ஆள் அரவமற்ற அருவியில் குளிக்கச் செல்லும் தமிழகப் பெண்களிடம் வனத் துறையினர் சில்மிஷச் சேட்டைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.

அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட பெண்களை யும் நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள். வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது... அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராள மாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது. இந்தக் காட்சிகளில் ஒன்றை மலையாளத்தில் வெளியாகும் 'அன்வேஷணம்' (விசாரணை) என்ற வெப்சைட் வெளியிட... விவகாரம் இப்போது கேரள சட்டமன்றம் வரை புயல் கிளப்பி, எல்லோரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.

சட்டசபையில் இதுபற்றி மனிதாபிமானத்தோடு குரல் கொடுத்துள்ளார், கேரள காங்கிரஸ் எம்.ஏல்.ஏ-வான சதீஷன். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்களால் அந்தப் பெண்கள் அனுபவித்த சித்ரவதையைப் பார்த்து ஆடிப்போனேன். என்ன குரூரம்! அப்பாவிப் பெண் களிடம் அவர்கள் நடந்துகொண்டதைப் பார்த்ததும் கோபமாகித்தான் சட்டமன்றத்தில் இந்த விஷயத் தைப் பேசினேன். இப்படிப்பட்ட அரக்க மனம் கொண்டவர்களை எப்படி அரசாங்க வேலையில் வைத்திருக்கிறார்களோ? கம்யூனிஸ்ட் அரசால் இந்த மாநில நிலை எப்படி சீரழிந்துபோய் இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது எங்கள் கடமை! இன்னும் பலர் இதேபோல கொடூரமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. அதுபற்றி எல்லாம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றால், போராட்டத்தில் இறங்குவோம்...'' என கொதித்தார்.

அந்த வக்கிர கும்பலின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட செங்கோட்டைவாசி ஒருவர், ''ரெண்டு மாசம் முந்தி என் மனைவியுடன் கும்பாவுருட்டி அருவிக்குப் போனேன். அப்ப 'வன சம்ரக்ஷண சமிதி' உறுப்பினர்கள் எங்களைப் பார்த்த பார்வையே சரியில்லை. அங்கிருந்து நாங்கள் காட்டுக்குள் நடந்து போகும்போது பின்னாலேயே வந்த வர்கள் என்னை மிரட்டி, 'இவ யாரு? தமிழ்நாட்டில் இருந்து தள்ளிட்டு வந்துருக்கியா?'ன்னு அசிங்கமா கேட்டாங்க. 'இவ என் மனைவி'ன்னு சொன்னதும், ஒருத்தன் என் கன்னத்தில் 'பளார்'னு அடிச்சான். இன்னொருத்தன் என் மனைவியின் சேலையைப் பிடிச்சு இழுக்க... நாங்க ரெண்டு பேரும் கதறினோம். நல்லவேளையா, அந்த சமயத்தில் நாலஞ்சு தமிழ் ஆட்கள் அருவியில் குளிக்கறதுக்காக, தூரத்தில் வந்ததால், எங்களை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. தப்பிச்சோம், பொழைச்சோம்னு உடனே கிளம்பிட்டோம். இது பத்தி தென்மலை போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனா, அவங்க அதை வாங்கலை. கோர்ட், கேஸ்னு அலையணுமேன்னு அந்தப் பிரச்னையை அப்படியே விட்டுவிட்டோம்...'' என்றார், இன்னும்கூட அதிர்ச்சி விலகாமல்.

அருவிக்கு நம்முடன் வந்திருந்த மலையாளப் பத்திரிகை நண்பர் ஒருவர், ''வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்கள், தமிழ்ப் பெண்களை தொடர்ந்து மோசமாத்தான் நடந்துறாங்க. ஒரு மாசத்துக்கு முன்னே தென்காசிப் பெண் ஒருத்தரின் புருஷனைக் கட்டிவெச்சு, அவரின் கண்முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செஞ்சிருக்கு இந்த கும்பல். 10 நாளு முன்னே, ஒரு பெண்னை ஓட ஓட விரட்டி இருக்காங்க. புகார் கொடுத்தால் அசிங்கம்னு எல்லாரும் போயிடறதால, இவங்களோட அட்டூழியம் தொடர்ந்துகிட்டிருக்கு. மரத்தில் ஏறி உட்கார்ந்துகிட்டு, பெண்கள் துணி மாத்தறதை எல்லாம் மறைஞ்சிருந்து செல்போனில் படம் பிடிக்கும் அக்கிரமமும் நடக்குது. கும்பாவுருட்டி மட்டுமில்லாமல் பாலருவியிலும் இதே நிலைமைதான். நாங்க பல தடவை போலீஸாரிடமும் வனத் துறை அதிகாரிகளிடமும் இதுபத்தி புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை...'' என்று ஆதங்கப்பட்டார்.

கேரள வனத் துறை அமைச்சர் பினாய் விஷ்வத்தி டம் பேசியபோது, ''கும்பாவுருட்டி சம்பவம் பற்றிய தகவல் கிடைச்சதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கேன். இதுவரை எங்களுக்கு ஒரு புகார்கூட வரலை. ஆனாலும் காத்திருக்காமல், இதுபத்தி போலீஸாரும் வனத் துறை அதிகாரிகளும் இணைஞ்சு விசாரணை நடத்தறாங்க. தற்போது வன சம்ரக்ஷண சமிதியைச் சேர்ந்த ரெண்டு பேரைப் பிடிச்சு விசாரிக்குது போலீஸ். யார் தவறு செஞ்சி ருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கும். நாங்க இதை அரசியல் பிரச்னையா பார்க்காம, சமூக அவலமாகவே நினைச்சு நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது என்பதில் கவனமாக இருப்போம்!'' என்று உறுதி கொடுத்தார்.

'வனத் துறை ஊழியர்கள்...' என்ற போர்வையில் காட்டில் உலவும் இந்த மிருகங்களை உடனே வேட்டையாடியாக வேண்டும் கேரள அரசு!

நன்றி: ஜூவி.

- ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

Saturday, July 3, 2010

சவுதி அல்ஹஸா மாநகர தமுமுக பொதுக்குழு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சவுதி அரேபியா அல்ஹஸா மாநகர பொதுக்குழு கூட்டம் மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை மார்க்க அரங்கம், சமுதாய அரங்கம் - அரசியல் அரங்கம் என பிரிவுகளாக நடைப்பெற்றது தலைமையுரையாற்றி பேசிய தமுமுக மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக விளங்கும் தமுமுக பணிகள் இன்னும் சிறப்பாக நடைப்பெற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து வரவேற்புரையாற்றிய சகோ. லால்பேட்டை அமானுல்லாஹ் தனது உரையில், வெளிநாட்டு வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது மட்டுமே ஒரே குறிக்கோள் என்றில்லாமல், சமுதாயத்திற்கான தேவைகளில் ஒவ்வொருவர்களின் பங்களிப்பினையும் தனது உதவும் கரங்களை கொண்டு அழுத்தமாக நல்கி வரும் இயக்கம் தமுமுக தான் என்று குறிப்பிட்டார்.

மார்க்க அரங்கத்தில் முதல் நிகழ்ச்சியாக, “தியாகம் – ஓர் இஸ்லாமிய பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றிய மவ்லவி. அப்துல் ஹக் ஜமாலி, மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான், தியாகம் என்பதே இங்கே சுயநலன் சார்ந்து தான் இருக்கிறது, இந்த உலகில் செய்யப்படும் தியாகங்கள் என்ற பெயரில் செய்யப்படும் தியாகங்கள் எல்லாமே தியாகம் அல்ல. தியாகம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகவே வாழ்ந்தவர்கள் ஸஹாபாக்கள் தான் என்றார்.

தொடர்ந்து, இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவம் – சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றிய தமுமுக அப்கேக் நகர பொருளாளர் சகோ. அப்கேக் அப்துல் மூமின், “இஸ்லாமியர்களிடையே தொழுகையில் இருக்கும் சமத்துவம், மற்ற விஷயங்களில் இல்லாமல் போனது ஏன்?” என்று வினா எழுப்பி அனைவர்களின் சிந்தனையும் தூண்டினார். மேலும் இஸ்லாம் வலியுறுத்தும் கொள்கைகள் எல்லாம் பின்பற்றுவதற்காக தான், புறக்கணிப்பதற்காக அல்ல என்றும் வலியுறுத்தினார்.

மார்க்க அரங்கின் நிறைவுப் பகுதியாக ஒளுச் செய்வது எப்படி என்று செயல் விளக்கப் பயிற்சியினை தமுமுக அல்ஹஸா மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ செய்து காட்டினார். தொடர்ந்து உறுப்பினர்களும் ஒளுச் செய்வது குறித்து சிறப்பாக செய்து காட்டினர்.

ஜும்ஆ பேருரை நிகழ்த்திய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி, மறுமையில் சுவனத்தில் நுழைவது மட்டுமே வெற்றி, சுவனத்தில் நுழைபவர்களே வெற்றியாளர்கள் என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவுச் செய்தார்.

உணவு இடைவேளைக்கு பிறகு கூடிய இரண்டாம் அமர்வில் சிறப்புரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் சகோ.அப்கேக் அப்துல் அலீம், தனது உரையில், “ இந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அடிப்படையே குர்ஆன் – ஹதீஸ் தான். இன்று தமிழகத்தில் சமுதாய மக்களிடையே இருக்கும், பாதுகாப்பு உணர்வு, தமுமுக துவங்கப்படுவதற்கு முன் இல்லை என்றார்.

நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக ஆட்சியாளர்களின் கவனத்தினை ஈர்ப்பதற்காக போராட்டம், மறியல், தர்ணா போன்ற அறவழி போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை, ஒருவர் தவறாக கைது செய்யப்பட்டால் நீதிமன்றங்களை அணுகுவது எப்படி, காவல்துறை - அரசு அதிகாரிகளை அணுகுவது எப்படி போன்ற அடிப்படை விஷயங்களை கூட மக்கள் தெரிந்திராமல் இருந்தனர். அல்ஹம்துலில்லாஹ், தமுமுக-வின் வருகைக்கு பிறகே மக்கள் இதுப்போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டனர்.

வாழ்வில் தன்னுடைய வறுமையை எதிர்த்து போராடும் அதேவேளையில் சமுதாயத்திற்காக தமிழ்நாட்டில் களத்தில் நின்று போராடி இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கும் போராளிகளின் உழைப்பினை வெளிநாடு வாழ் தமிழர்களாகிய நாம் பெரிதும் மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

நம் சமுதாய அக்கறை இல்லாமல் சுயநலவாதிகளால் கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் எல்லாம் நம் சொந்தம் தான். அவர்களுக்கு உதவுவது நமது கடமை என்றார். வருங்கால தலைமுறை நிம்மதியாக இருக்க தமுமுக-வின் செயல்பாடுகளே காரணம் என்று குறிப்பிட்டு , அனைவர்களின் சிந்தனையையும் தூண்டி உரையினை நிறைவுச் செய்தார்.

“அரசியல் அரங்கில் நிறைவுரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி,. ம.ம.க-வின் ஒவ்வொரு அசைவும் மற்ற கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

கல்வி கற்பதற்கு இஸ்லாமியர்கள் லாயக்கு இல்லை என்று ஆதிக்க சக்திகளால் செய்யப்பட்டிருந்த தப்பான கற்பிதம் நெல்லை மாணவியின் ஜாஸ்மின் செய்த சாதனை மூலம் நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி, அதிகாரம் எல்லாம் நம்மிடையே வருவதற்கு நிறைய ஆட்சிப் பணி அதிகாரிகள் உருவாக வேண்டும், அதற்காக தமுமுக கடுமையாக உழைக்கிறது.

தமுமுக-வின் செய்தித்தாளான மக்கள் உரிமை விற்பனையில் தொய்வு ஏற்பட அனுமதிக்க கூடாது, விற்பனையை அதிகரிக்கும் பொறுப்பு ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் உண்டு.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான இயக்கம் என்று இல்லாமல் சமூகம் தாண்டிய சேவைகளை புரிவதில் ம.ம.க. முன்ணணியில் இருக்கிறது என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவு செய்தார்.

இறுதியாக சுபஹான் நன்றியுரையாற்றினார். பொதுக்குழு கூட்ட அரங்க ஏற்பாடுகளை குன்னம் ராஜ் முஹம்மது, ஆயங்குடி அப்துஸ் ஸலாம் ஆகியோரும், உணவு ஏற்பாடுகளை கொள்ளிடம் அப்துல் ரஹ்மான், கந்தகுமாரன் அமானுல்லாஹ், இராஜகெம்பீரம் சிக்கந்தர், பாட்சா பின்னத்துர் முஹம்மது ரஃபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.