.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, July 13, 2009

13 ஆண்டுகளாக தூக்கம் கலையாத அஞ்சல் துறை

மாவட்டங்களின் பெயர்களில் ஜாதி தலைவர்ககள், சுதந்திர போராட்டதியாகிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. இருந்தாலும் அஞ்சலக "சீல்'களில் மட்டும் இன்னும் பழைய மாவட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதை யாரும் இதுவரையிலும் கவனித்ததாக தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் கள் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களை கொண் டிருந்தது. செங்கை அண்ணா மாவட்டம், திண்டுக்கல் அண்ணா மாவட்டம், பசும்பொன் தேவர் மாவட்டம், காமராஜர் மாவட்டம் என்ற பெயர்களுடன் விளங்கியது. கடந்த 1996ம் ஆண்டு பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, ஜாதித்தலைவர்கள் பெயர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர்களை மாற்றியது. இதனால், காமராஜர் மாவட்டம், விருதுநகர் மாவட்டமாகவும், பசும் பொன் தேவர் மாவட்டம், சிவகங்கை மாவட்டமாகவும், திண்டுக்கல் அண்ணா மாவட்டம், திண்டுக்கல் மாவட்டமாகவும் பெயர் மாற்றம் பெற்றது. தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்களின் பெயர்களும் மாற்றப் பட்டன. இந்த பெயர் மாற்றம் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. பொதுவாக பெயர் மாற்றம் பெறும் போது மத்திய, மாநில அரசுகளின் ஆவணங்கள் அனைத்திலும் பெயர் மாற்றம் ஏற்பட்டுவிடும். அஞ்சல் துறை சார்பில், அஞ்சலகங்களில், கடிதங்கள் மீது பதிக்கப்படும் "சீல்'களிலும் ஊர் பெயர் மாற்றப்படும் வழக்கம் உள்ளது.


இதன் படி மாவட்டங்களின் பெயர்கள் மட்டுமே அனைத்து ஊர்களிலும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டமாக உள்ள பசும்பொன் தேவர் மாவட்டத்தில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் மட்டும் இன்னும்" பி.எம்.டி' மாவட்டம் என்றே அஞ்சலக சீலில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு திருமணத்திற்காக சிவகங்கையில் உள்ள ஒருவருக்கு திருமண அழைப்பிதழை அனுப்பியுள்ளார். தி.நகர் தபால் நிலையத்திலிருந்து அனுப்பப் பட்ட அந்த அழைப்பிதழில் கடந்த மாத 8ம் தேதிக்கான சீல் வைக்கப்பட்டுள்ளது. அது கடந்த மாதம் 12ம் தேதி சிவகங்கை மாவட்ட பள்ளத்தூர் அஞ்சலகத்திற்கு சென்று அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த சீலில் "பள்ளத்தூர்' என ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளது. அடுத்ததாக அந்த ஊருக்கான அஞ்சல் குறியீட்டு எண் 630107 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக "P.M.T.DIST' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் மாவட்டம், சிவகங்கை மாவட்டமாக மாற்றப் பட்டு, 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் துறையான அஞ்சல் துறையில் மாற்றம் செய்யப்படாதது அதிர்ச்சியாக உள்ளது. தமிழக அரசு இம்மாதிரியான பெயர்கள் இடம் பெறுவதன் மூலம் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் பெயர்களை நீக்கியது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரும், இந்நிலை தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""மாவட் டங்கள் பெயர் மாற்றம் பெற்றவுடன், அஞ்சலக சீல்கள் மாற்றப்பட்டுவிட்டன. அஞ்சல் துறையில் சீல்கள் மாற்ற வேண்டும் என்றால், அலிகாரில் உள்ள அஞ்சல்துறை ஸ்டோருக்கு " இண்டன்ட் ' போட்டு அனுப்ப வேண்டும். அவர்கள், இரண்டு மாதங்களில் தயாரித்து அனுப்புவர். பெரும்பாலும் சேதமடைந்துவிடும் இது போன்ற சீல்கள் இரண்டே மாதத்தில் கிடைக்கும். மாவட்டங்கள் பெயர்கள் மாற்றம் பெற்றதும், குறிப்பிட்ட அந்த அஞ்சலகத்தை சேர்ந்தவர்கள் இண்டன்ட் போட்டு அனுப்பி, அங்கிருந்து வராமல் இருக்கலாம்.

அல்லது அஞ்சலக அதிகாரிகளின் அலட்சியத்தால் இது நடந்திருக்கலாம்,'' என்றார். பள்ளத்தூர் அஞ்சலக அதிகாரியின் கவனக்குறைவோ அல்லது அலிகாரில் உள்ள அஞ்சல் துறை ஸ்டோரில் உள்ளவர்கள் கவனக்குறைவோ எது இருந்தாலும் 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஊரின் பெயர் மாற்றப்படாமல் இருப்பது அரசாங்கத்தின் உத்தரவை மதிக்காத தன்மையை காட்டுகின்றது. தற்போது, இந்த ஒரு மாவட்ட பெயர் தான் தெரிந்துள்ளது. இன்னும் எந்தெந்த மாவட்டங்களின் பெயர்கள் அஞ்சல் துறையின் "சீல்"களில் மாற்றப்படாமல் உள்ளன என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.
நன்றி: தினமலர்

No comments: