.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, April 22, 2010

''அரசு கொடுத்த பரிசு...!'' குணங்குடி அனீபா குமுறல்

கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார் குணங்குடி அனீபா. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர், பா.ம.க-வின் முன்னாள் பொருளாளர், ஜிஹாத் கமிட்டி தலைவர் என்று பல பொறுப்புகளை வகித்தவர் குணங்குடி அனீபா. ரயில் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக பூந்தமல்லி கோர்ட்டில் கடந்த வாரம் ஆஜரான அனீபாவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

? ''13 வருட சிறை அனுபங்கள் எப்படி இருக்கு?''

''நீதிமன்றக் காவலில் எனக்கு இன்பமும் துன்பமும் சேர்ந்தே கிடைத்தன. நல்ல ஆரோக்கியமாக இருந்த நான், சிறைக்கு வந்த பிறகு கண்பார்வைக் குறைவு, ரத்தக்கொதிப்பு, இதய வலி, நீரிழிவு, முதுகுதண்டுத் தேய்மானம் என்று பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டேன். அதன் விளைவு... இப்போது ஊன்றுகோலுடன் நடமாடும் நிலை எனக்கு! சிறையில் நான் பராமரிக்கும் செடி கொடிகள்தான் எனக்கு நண்பர்கள். 33 வருடங்களுக்கு முன்பு என் திருமணம் நடந்தது. மூன்று மகன்கள், ஒரு மகள், இரண்டு பேத்திகள், ஒரு பேரனோடு எனது தாய் தந்தையரும் இருக்கிறார்கள். அவர்களோடு எனது கடைசி காலத்தை கழிக்கவேண்டும் என்பதுதான் இப்போதைய என் ஆசை!''

? ''உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் நிலை இப்போது என்ன...?''

''மறைந்த தமிழ்ப் புலவர் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் குடும்பத்தைச் சேர்ந் தவன் நான். த.மு.மு.க., பா.ம.க., ஜிஹாத் கமிட்டி என்று பொறுப்புகள்

வகித்தபோது மக்கள் பிரச்னைக்காகவும் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டும் போராட்டங்கள் நடத்தியிருக்கிறேன். எனது சமூகப் பணிகளை விரும்பாத சிலர் தவறான தகவல்களை அரசிடம் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து கோவை குண்டு வெடிப்பை காரணம் காட்டி, ஜிஹாத் கமிட்டியை தமிழக அரசு தடை செய்தது. தேவகோட்டை அனுமந்தக்குடியில் என் மகளின் திருமணம் நடந்துகொண்டிருந்த போது, என்னை போலீஸ் கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட பிறகு என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நான் இன்றைக்கு சிறையில் இருப்ப தற்கு காரணமானவர்கள், பணியில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்டனர். அவர்கள் நேர்வழி பெற இறைவனிடம் வேண்டுகிறேன். 6.12.97-ல் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்பு சதி வழக்கு தவிர, எல்லா வழக்குகளிலும் எனக்கு விடுதலை கிடைத்துள்ளது. இறைவன் சித்தம் இருந்தால் இதிலும் விடுதலை கிடைக்கும்!''

? ''நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறீர்களா..?''

''வன்முறையை இஸ்லாம் ஒருபோதும் போதிக்க வில்லை. யாருடைய உயிரையும் பறிக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. பல அமைப்புகளில் இருந்தபோதும், நான் துளிகூட தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை. நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. அதற்கு நானே ஓர் உதாரணம். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் நிரபராதி. எந்த மதத்துக்கும் நான் எதிரானவன் கிடையாது. 1987-ல் வட தமிழகத்தில் வன்னியர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் மோதல் ஏற்பட்டபோது, அந்தப் பகுதிக்கு சென்று அமைதி ஏற்பட பாடுபட்டேன். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியபோது, நானும் கலந்துகொண்டேன். 97-ம் ஆண்டு தென் தமிழகத்தில் சாதி மோதல் வெடித்தபோதும் அமைதிக்காகப் பாடுபட்டேன். அப்போது முதல்வர் கலைஞர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துகொண்டு ஒற்றுமைக்காகப் பாடுபட்டவன் நான்!''

?''தற்போதைய தி.மு.க. ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''1991 முதல் 1996 வரையில் கலைஞர் தலைமையில் ஏழு கட்சிகள் கூட்டணி இருந்தபோது, அந்த கூட்டணியில் ஆலோசனைக் கூட்டம் சுமார் 25 முறை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் நான் தொடர்ந்து கலந்துகொண்டு வந்தேன். கலைஞரே என்னுடைய பெயரை சொல்லி அழைக்கும் அளவுக்கு இருந்தேன். ஆனால், அதன்பிறகு நிலைமை மாறியது. கடந்த காலங்களில் தி.மு.க. அரசால்தான் நானும் என் குடும்பமும் இஸ்லாமிய மக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டோம். போராளி பழனிபாபா, கோவை முஸ்லிம்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோவையில் சொத்துகள் அழிக்கப்பட்டன. தி.மு.க-வின் வளர்ச்சிக்கும் ஆட்சியில் அது அமர்வதற்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வந்த முஸ்லிம் களுக்கு தி.மு.க. கொடுத்த பரிசுதான் அடக்குமுறை.

எங்களின் மனவேதனை தீரவேண்டுமென்றால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மத்திய அரசில் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகிதமும் மாநிலத்தில் ஐந்து சதவிகிமும் இடஒதுக்கீட்டை தி.மு.க. அரசு பெற்றுத் தரவேண்டும். முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கிய கலைஞரால்தான் இதையும் செய்ய முடியும்...'' என்றவர்,

''ஜூ.வி. மூலம் அரசுக்கு ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்...'' என்றபடி இதையும் சொன்னார்-

''மத்திய-மாநில காவல் துறை விசாரணை செய்து, அந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று பொதுமன்னிப்பு பொருந்தாமல் தமிழகச் சிறை களில் உள்ள கோவை பாட்ஷா உட்பட ஐம்பது முஸ்லிம்கள் மற்றும் நளினி, முருகன் உட்பட அனைத்து சமூகங்களையும் சேர்ந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையட்டி தமிழக முதல்வர் மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்ய உதவிட வேண்டும்!''

புதிய குற்றச்சாட்டுகள்...

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ம் தேதி திருச்சி, ஈரோடு, திருச்சூர் ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடித்தன. இது நடந்தது 1997-ம் ஆண்டு. இந்த வழக்கில் அனீபா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. 'விசாரணை முடிந்து கடந்த 31-ம் தேதி தீர்ப்பு கூறப்படும்' என்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அனீபாவின் வழக்கறிஞர் சிவபெருமாள், ''வழக்கின் நடைமுறைகள் எல்லாம் முடிந்து தீர்ப்பு தேதியும் குறிக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போடப்பட்ட 'பொதுச் சொத்துகள் சேதம் விளைவித்தல் சட்டம்' பிரிவு 4, இந்திய ரயில்வே சட்டம் 151 ஆகிய பிரிவுகளை நீதிமன்றம் நீக்கிவிட்டு, இந்திய தண்டனை சட்டம் 109 பிரிவை புதுசாக சேர்த்துக் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன. குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்து புதிதாக நீதிமன்றம் சேர்த்திருப்பது தவறு என்று நீதிமன்றத்திலும் வாதாடினோம். அரசு தரப்பு வழக்கறிஞர்கள்கூட எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை...'' என்றார்.


நன்றி: ஜூவி
- எம்.தமிழ்செழியன்
படங்கள்: எம்.உசேன்

1 comment:

Pebble said...

I feel like everybody used him. When time came they through him out, including Muslims too.

May allah help and make things comfert him.