.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, August 20, 2009

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்.

புகாரி 1894. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்)" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி 1895. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். "ஃபித்னா (சோதனை) பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் மனனம் செய்திருக்கிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்டார். 'நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்! 'ஒருவர் தம் குடும்பத்தினர். தம் செல்வம், மற்றும் அண்டை வீட்டார் விஷயத்தில் சோதனைக்கு ஆளாகும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்குப் பரிகாரமாக அமையும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்!" என்றேன். அதற்கு உமர்(ரலி), 'நான் (சோதனை என்னும் பொருளில் அமைந்த) இந்த ஃபித்னாவைப் பற்றிக் கேட்கவில்லை. கடலலை போல் தொடர்ந்து வரக்கூடிய (குழப்பம் என்னும் பொருளிலமைந்த) ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன்!" என்றார்கள். அதற்கு நான் 'உமக்கும் அதற்கும் இடையே மூடப்பட்ட வாசல் இருக்கிறது!" என்று கூறினேன். 'அது திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?' என்று உமர்(ரலி) கேட்டார்கள். நான் 'உடைக்கப்படும்!" என்று பதிலளித்தேன். 'அப்படியானால் மறுமை நாள் வரை அது மூடப்படாது!" என்று உமர்(ரலி) கூறினார். "அந்த வாசல் யார் என்று உமர்(ரலி) அறிந்திருந்தாரா என்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேளுங்கள்!" என்று மஸ்ரூக்(ரஹ்) அவர்களிடம் நாங்கள் கூறினோம்! அவ்வாறே அவர் கேட்டார்! அதற்கு ஹுதைஃபா(ரலி) 'ஆம்! நாளை (காலை) வருவதற்கு முன்பு இரவொன்று உள்ளது என்பதை அறிவதைப் போல் அதை அவர் அறிந்திருந்தார்!' என்று பதிலளித்தார்!" என அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) கூறினார்.

புகாரி1896. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!" என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

புகாரி1897. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். "ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!" என்றார்கள்.

புகாரி1898. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி1899.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி1900. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்." என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில் 'ரமலான் பிறை" என்று உள்ளது.

புகாரி1901. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி1902. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.

புகாரி1903. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி1904. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!" என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!" என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி1905. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

புகாரி1906. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

புகாரி1907. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

புகாரி1908. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள். மூன்றாம் முறை கட்டை விரலை மடக்கினார்கள்.

புகாரி1909. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

புகாரி1910. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாள்கள் முடிந்தும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் 'நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!" என்றார்கள்.

புகாரி1911. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியருடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்களின் கால்(நரம்பு) பிசகியிருந்தது. அவர்கள் ஒரு பரணில் இருபத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அப்போது அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஒரு மாதம் என்று சத்தியம் செய்யவில்லையா!' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!" என்றார்கள்.

புகாரி1912. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது." என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

புகாரி1913. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

No comments: