.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, August 16, 2007

தென்காசியில் தாக்குதல் நடந்தது ஏன் - எப்படி?

தென்காசியில் தாக்குதல் நடந்தது ஏன் - எப்படி?
தென்காசியில் கடந்த டிசம்பர் மாதம் இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குமார பாண்டியன் கொலைக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கும் பங்குண்டு சிலர் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டதால் இந்து முன்னணியினர் தமுமுகவின் நெல்லை மாவட்டத் தலைவர் தென்காசி மைதீன் சேட்கான் மீது கடந்த மார்ச் 2ம் தேதி கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் மயிரிழையில் மைதீன் சேட்கான் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் தொடர்புடையோர் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.

இச்சூழ்நிலையில் குமாரன் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் களும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். குமாரபாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் தென்காசியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீனில் வெளியே வந்த முஸ்லிம்களை அடிக்கடி இந்து முன்னணியினர் தாங்கள் அவர்களை கொலை செய்வது உறுதி என மிரட்டி வந்துள்ளனர். இக்கொலை மிரட்டல் குறித்து முஸ்லிம்கள் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரனிடமும், தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனத்திடமும் புகார் செய்தனர். இப்புகார் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சூழ்நிலையில் 14.8.2007 அன்று காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற 10 பேர் டாடா சுமோ காரில் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக சிலர் இரண்டு ஆட்டோக்களில் வந்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி இவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த இந்து முன்னணியைச் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் அதிகளவில் புழங்கும் கூலைக்கடை மார்க்கெட்டில் உள்ள கன்னிமாரன்கோவிலும், மார்க்கெட்டில் வேறு சில பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்தது.

காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு மார்க்கெட் வழியாக திரும்பிக் கொண்டிருந்தவர்களின் ஆட்டோவை ஏற்கனவே திட்டமிட்டபடி தயாராக இருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் இருசக்கர வாகனம் மூலம் மறித்தனர்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு தயாராக இருந்த மற்ற இந்து முன்னணியினர் முஸ்லிம்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது தாங்கள் நடத்த வைத்திருந்த அரிவாள்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் பஷீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே எதிர்தரப்பில் ஓரிருவர் தாங்கள் தற்காப்பிற்காக வைத்திருந்த ஆயுதங்கள் மூலம் பதிலடி தந்துள்ளனர். இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த சுரேந்திரன், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோருக்கு வெட்டுக்காயம் விழுந்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் நாகூர் மீரான் உயிரிழக்க, மருத்துவமனையில் ஹஸன் கனி (எ) ராஜன் உயிரிழந்துள்ளனர். இந்து முன்னணி தரப்பில் கபிலன், ரவி ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

பாளையங்கோட்டை மருத்துவமனையில் இந்து முன்னணியினரும், ஹை கிரவுண்டு மருத்துவமனையில் மற்றொரு தரப்பும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்த பஷீர், நாகூர் மீரான், ஹஸன் கனி ஆகியோரின் ஜனாஸாக்கள் நடுப்பேட்டை கபரஸ்தானில் செவ்வாய் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் தமுமுக மாநிலச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி தலைமையில் நெல்லை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் தென்காசியில் முகாமிட்டுள்ளனர். கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் தென்காசியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி கோஷ்டி மோதலை தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனனும், தென்காசி காவல் ஆய்வாளர் சந்திரசேகரனும் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அசட்டையாக இருந்ததன் காரணமாக இத்தாக்குதல் நடைபெறுவதற்கும், ஆறு பேர் உயிரிழப்பதற்கும் காரணமாக இருந்துள்ளனர். எனவே இவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் (கடித விவரம் தனியாக உள்ளது).

இச்சம்பவம் காரணமாக தென்காசியில் பதட்டம் நிலவுவதால் தென்காசி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. தென்காசிக்கு செல்லும் அனைத்தும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments: