.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, August 20, 2007

அமெரிக்கப் படையெடுப்பும் ஆயிரக்கணக்கான ஈராக் விதவைகளும்!

அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது. இச்செய்தியை நமக்கு அளித்த கட்டுரையாசிரியர் இதனை எழுதும் போது தன் கண்ணீரைப் பலமுறை அடக்க முயன்று தோற்று நெஞ்சடைக்க எழுதியதாகத் தெரிவித்திருந்தார். - சத்தியமார்க்கம்.காம்

கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத்தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.


நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தின் உயிர் பிழைக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின் நடைப்பிணங்கள் நடமாடும் சுடுகாடாய் காட்சியளிக்கும் ஈராக்கில் நிர்க்கதியான பெண்கள் அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்கள் பெருமளவு குறைந்து விட்டது.


பசியால் துடிக்கும் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தகைய கடுமையானதொரு வேலையையும் செய்ய, தான் தயாரான போதிலும் வேலை கிடைக்காத ஒரே காரணத்தினால் பிச்சை எடுக்கும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இவருக்குப் பிச்சையிட்டவர்கள் கூட இவரை நடத்திய விதம் மோசமானதாகவே இருந்தது. இவருக்கு வேலை தருவதாகவும் உதவி செய்வதாகவும், போலிவேஷம் போட்டு முன்வந்தவர்கள் மனதில் கீழ்த்தர எண்ணங்களே மிகைத்திருந்தன என்கிறார் இவர்.


சம்பாதித்துக் கொண்டிருந்த கணவர் இறந்த சில வாரங்களிலிலேயே இவரது குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு ஒரே காரணம் - பசியும் பட்டினியும் என்பதால் செய்வதறியாது மருத்துவர்கள் திருப்பியனுப்பி விட்டனர்.


நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் செய்வதறியாது விக்கித்து நின்ற நிலையில் தான் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து கண்களில் நீர் பனிக்க அவர் கூறுகிறார்: ஆரம்பத்தில் இவை என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தது. என்... என்... குழந்தைகள் பசியின் காரணத்தால் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் என்னால் இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை"


இறை விசுவாசத்தையும், துடிக்கும் தன்மான உணர்வுகளையும் மீறி மனதில் ஏற்படுத்திய இரணத்தின் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். அருகிலுள்ள சந்தைப் பகுதிக்கு சென்றேன். நான் இயற்கையாகவே அழகிய உருவம் கொண்டுள்ளதால் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை. என்னுடன் ஒப்புக்கொண்ட நபருடன் நான் தனியறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடும் என்று அடி மனதில் எழுந்த அச்சத்தினால் அலறி ஓட முயன்றேன். ஆனால், அந்த நபர் என்னை விடவில்லை. பலவந்தப்படுத்தி என் கற்பை சூறையாடிவிட்டார். அவர் வீசி எறிந்த காசைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நேராக கடைக்கு ஓடினேன்.
அவசரமாக உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன். என் கையில் உணவைப் பார்த்த போது என் குழந்தைகள் சந்தோஷத்தில் கத்திய குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பசிக்கொடுமையின் காரணத்தால் நான் கேட்டிருந்த என் குழந்தைகளின் மரண ஓலத்தை விட எனது மானம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை.


நம்பிக்கையிழந்த ஈராக்கிய விதவைகள்


ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தில் பொதுமக்கள் அழிந்து கொண்டு வருகின்றனர். கடைவீதியில், பொதுவிடங்களில், பொதுமக்கள் குழுமியிருக்கும் இடங்களில் குண்டு வெடித்துக் கொண்டு இருப்பதனால் தினசரி எழுபது, எண்பது பேர் இறந்தனர் என்ற செய்தி எல்லாம் இப்போது வெகு இயல்பாக, கேட்டுக்கேட்டுப் பழகிப்போன சர்வ சாதாரண செய்தியாய் மாறிவருவதை எவரும் மறுக்க இயலாது.


அமெரிக்கப்படை ஈராக்கினுள் கால் வைப்பதற்கு முன்னர் வரை ஈராக்கில் விதவைப் பெண்களுக்கு, குறிப்பாக ஈரான் - ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு அப்போதைய ஈராக்கிய அரசு வீடு, இலவசக் கல்வி, மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை முறையாகவும் கொடுத்து வந்திருந்தது.


அத்தகைய எவ்வித உதவியும் தற்போதைய பொம்மை அரசு வழங்குவதில்லை என்பதும் கொடுத்து வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஓரளவு வசதி வாய்ந்த விதவைகள் இதில் விதிவிலக்காக தப்பித்துக்கொள்கிறார்கள்.


பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான OWFI சமர்ப்பித்துள்ள புள்ளி விபரப்படி, அமெரிக்க அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய விதவைகளில் 15 % பெண்கள் தங்களின் குடும்பத்தினருக்காக வேலை தேடிப் போராடி வருவதாகவும், தற்காலிக திருமணமோ, விபச்சாரமோ செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.


OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் என்ற பெண்மணி அல்ஜஸீராவிற்கு அளித்த பேட்டியில், "ஈராக்கிய விதவைகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே இதற்கான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இப்பெண்களின் பரிதாப நிலைமையின் பயங்கரம் முகத்தில் அறைய ஆரம்பித்து விட்டது. எங்களால் விவரிக்க இயலாத அளவிற்கு இப்பிரச்னை பூதாகரமாக உருவாகியிருக்கிறது. ஈராக்கிய தெருக்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விதவைகள் வேலை தேடியும், பிச்சை கேட்டும் அலைகின்றனர்.


கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நுழைந்த பிறகு, அங்கே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அதில் 20% பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் என்றும், NGO நிறுவனம் இத்தகவலை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.


பெரும்பாலான பெண்கள் ஈராக்கிற்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்டும் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டும் இருக்கலாம் என்று OWFI நம்புவதாகக் கூறியுள்ளார்.


அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற தாக்குதலில் கணவர்களை இழந்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் (ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்) 350,000 விதவைப் பெண்கள் என்றும், நாட்டில் மொத்த விதவைகள் மட்டும் எட்டு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர் என்றும் ஈராக்கின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கிறது.


துயரமான வியாபாரம்


விதவைகளாக உள்ள இளம் வயது ஈராக்கிய பெண்கள் நிலை இப்படி எனில் அமெரிக்க அராஜகத்தில் உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் ஏதுமற்று தங்களது மகள்களையே விபச்சாரத்திற்காக சந்தையில் விற்கும் மிகக் கொடூரமான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கொடுமை எத்தனை பேர் அறிவர்?

ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அபூ அஹ்மத் என்பவர் குண்டுவீச்சில் தன் மனைவியை இழந்து தானும் ஊனமுடைந்தவர். தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்கத் திறனற்று, கடும் அவதியுற்று, வெளிநாடுகளிலிருந்து விபச்சாரத்திற்காக பெண்களை விலைக்கு வாங்க வந்திருந்த நபர்களிடம், லினா என்ற தன் சொந்த மகளையே விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.


என் மகள் லினாவிற்காக விபச்சார விடுதியினர் கொடுத்த தொகையைக் கொண்டு என் மற்ற மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஒரு வேளை உணவாவது சிரமமின்றி உண்ண வைக்க முடியும் என்று அல்ஜஸீரா நிரூபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.


அபூ அஹ்மத்தின் சூழலைக் கண்டு பரிதாபப்பட்டு(?) தாமே அவரை வற்புறுத்தி அணுகி உதவியதாக ஷாதா என்கின்ற விபச்சார விடுதியைச் சேர்ந்த தரகுப்பெண் அல்ஜஸீராவிற்கு பேட்டியளித்துள்ளார். இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களது ஏழ்மையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறும் இவர் இளம் பெண்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மிக அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படும் பெரும் வியாபாரம் பற்றி விளக்கினார்.
"ஒருவேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு குறைந்தது பத்து அமெரிக்க டாலர் பெற்றுத்தருகிறோம். அதற்காக அப்பெண் குறைந்த பட்சமாக ஒருநாளைக்கு இரண்டு வாடிக்கையாளர்களுடன் 'இருந்தால்' போதும்" என்கிறார் சர்வ சாதாரணமாக.


வெளிநாடுகளுக்கு பலவந்தமாகக் கடத்தபடும் ஈராக்கிய பெண்கள்


OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் மேலும் கூறுகையில் லினாவைப் போன்ற அபலைப் பெண்கள் வறுமையின் காரணமாக ஐநூறு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறார்கள்.


தந்தையை இழந்ததினால் தன் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிப் போன சுஹா எனும் 17 வயது இளம்பெண், தன்னுடைய பெற்ற தாயினாலேயே விபச்சார விடுதியில் விற்கப்பட்டார். சுஹாவிடம் பேட்டி கண்ட அல்ஜஸீராவிடம் அவர் கூறியது:


தான் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏமாற்றி விற்கப்பட்டதாகவும் சிரியா மற்றும் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள பெரும்புள்ளி விலங்குகளுக்கு தினசரி உணவாவதாகவும் கூறியது உருக்கமாக இருந்தது. விபச்சாரக் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு நாள் விடுதியிலிருந்து தப்பித்து ஓடி சிரியாவிலுள்ள ஈராக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். தற்போது தனது அத்தையின் வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருக்கும் சுஹா, சிரியாவின் விபச்சார விடுதியில் இருந்து தான் தப்பித்து ஈராக் திரும்பும் வரை தனக்கு உதவிய ஒரு ஈராக்கிய குடும்பத்திற்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நினைவுகூர்ந்தார். தன்னைப் போன்றே பலப்பல பெண்கள் இத்துயரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


பாக்தாத்தின் பெண்ணுரிமைச் சங்கத்தின் (WRA) செய்தித் தொடர்பாளரான மயாதா ஜூஹைர் என்ற பெண் பேசுகையில் ஈராக்கிய அரசு மற்றும் அரசு சாரா (NGO) அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இளம் பெண்களைக் கடத்துவதையும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையும் தடுக்க முயன்று வருகிறோம். அமெரிக்கப் படையெடுப்பினால் நாசமாகிப் போய் இருக்கும் ஈராக்கில், வறுமையில் நிர்க்கதியாய் நிற்கும் விதவைகளும், இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலான உதவியும் போதுமான அளவிற்கு நிதியுதவியும், மனித வளமும் இல்லாமல் இப்பிரச்னையை எளிதாக தீர்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.


தனது மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்து கொண்டிருப்பதை, தான் நன்கு உணர்வதாகக் கூறுகிறார், தன் கணவரை ஒரு வெடி விபத்தில் இழந்திருக்கும் நிர்மீன் லத்தீஃப் என்ற 27 வயதான விதவைப் பெண். தனது நிலையை எடுத்துக்கூறி பொருளாதார உதவி செய்யுமாறு தனது உறவினர்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் பலனின்றிப் போகவே, வேறு வழியே இன்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் கூறியவை:


"எனக்குத் தெரிவதெல்லாம் பசியினால் என் கண்முன்னே துடித்து இறந்து கொண்டிருக்கும் என் குழந்தைகள்; என் குழந்தைகள் மட்டுமே!" என்கிறார் வெறித்த பார்வையுடன்.


அகத்தில் இறைநம்பிக்கையின் விளிம்பில் நின்றுகொண்டு மனதோடு கடும் போர் நடத்திக்கொண்டும், புறத்தில் வாழ வழியின்றித் துடிக்கும் இவரைப் போன்ற இலட்சக்கணக்கான பெண்களின் இந்த இழிநிலைக்கு, சர்வதேச அளவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயம் என்ன பதில் வைத்திருக்கிறது?

- அபூ ஸாலிஹா

இந்தச் செய்திக்கட்டுரையை நாம் பதிக்கும் வேளையில் நேற்று (15-08-2007) நடந்த ஒரு குண்டுவெடிப்பில் 175 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி இறந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

Thursday, August 16, 2007

தென்காசி கொலை: இந்து முண்ணனி தலைவர் கைது.. தென்காசி கலவரத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை: த.மு.மு.க. வற்புறுத்தல்

தென்காசியில் 6 பேர் கொலை இந்து முன்னணி தலைவர் கைது: மேலும் 3 பேர் சிக்கினர்

  • கைது செய்யப்பட்ட சக்திபாண்டியன் தென்காசி நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார்.

  • தென்காசி கலவரத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை: த.மு.மு.க. வற்புறுத்தல்
தென்காசி சம்பவத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று த.மு.மு.க. வற்புறுத்தி உள்ளது.

த.மு.மு.க. மாநில செயலாளர் ஜெ.எஸ். ரிபாயி நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்காசியில் நடைபெற்ற படுகொலைகள் மத மோதல்கள் இல்லை. இதற்கு மத சாயம் பூசப்படுவதை த.மு.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருசாரர்களும் ஆயுதம் வைத்திருப்பதாக கூறும் காவல்துறை அவர்களை கடுமையான ஆயுதங்களோடு கையும் களவுமாக பிடித்து முன்எச்சரிக்கை கைது செய்யாமல் அவர்களை வெற்று காகிதத்தில் எழுதிதரகூறி மன்னித்து அனுப்பியதால்தான் இது போன்று பகிரங்கமாக பட்டப்பகலில் படுகொலை நடக்க ஊக்கமளித்து இருக்கிறது. காவல் துறையின் மெத்தனப் போக்கே கொலைகளுக்குக் காரணம்.

இருதரப்பும் பகிரங்கமாக மோதிக்கொள்ளும் சூழல் ஏற்படுவதற்கு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் ஒரே நேரத்தில் இரு தரப்பையும் கையெழுத்திட செய்தது நீதித்துறை சரியான கருத்தில் பார்க்கவில்லை என குற்றம் சாட்டுகிறோம்.

சம்பவம் நடைபெற்ற பின்னர் காவல்துறையின் நடவடிக்கை சிறப்பாக இருந் தாலும் கைது நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது பொய்வழக்கு போட்டுவிடக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு அப்பாவிகள் கைது செய்யப்பட்டால் த.மு.மு.க. போராட தயங்காது.
தென்காசி பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இயல்பு நிலை திரும்பியது: தென்காசியில் இன்று கடைகள் திறக்கப்பட்டன
6 பேர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து தென்காசியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. கடந்த 2 தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. பாதுகாப்புடன் குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன.

அசம்பாவிதத்தை தடுக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சோகமும், பீதியும் கவ்வியிருந்த தென்காசியில் இப்பொழுது சற்று இயல்பு நிலை திரும்பி உள்ளது. இன்று கடைகள் திறக்கப்பட்டன. பஜாரில் மக்கள் கூட்டம் மிதமாக காணப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் வழக்கம் போல் சென்றனர். வேன், ஆட்டோக்களும் இயங்க தொடங்கின.

எனினும் ஒருவித அச்ச உணர்வு தென்காசி பகுதி மக்களிடையே தொற்றியுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தென்காசியில் சகஜநிலை திரும்புவதற்கு அரசுடன் இணைந்து த.மு.மு.க வீரியமாக களப்பணியாற்றிவருகிறது.

தமிழக முதல்வருக்கு தமுமுக அவசரக் கடிதம்!

தமிழக முதல்வருக்கு தமுமுக அவசரக் கடிதம்

தென்காசி டி.எஸ்.பி. மற்றும் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்

தமிழக முதல்வருக்கு தமுமுக தலைவர் அவசரக் கடிதம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வருக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
''நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று காலையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ஆறு நபர்கள் உயிர் இழந்தது மிகுந்த வேதனையைத் தருகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் குமாரபாண்டியனைக் கொலை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களும், கடந்த மார்ச் மாதம் தமுமுக மாவட்டத் தலைவர் சேட் கானை கொலை செய்யும் நோக்கில் பயங்கரமாக தாக்கியவர்களும் சமீபத்தில் நிபந்தனை பிணையில் விடுதலையாகி வெüயே வந்துள்ளார்கள்.
சாதாரணமாக இதுபோல் நிபந்தனை பிணையில் வெüவருபவர்களுக்கு வெü மாவட்டங்கüல் தான் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்படும். தென்காசியில் தமுமுக மாவட்டத் தலைவர் தாக்கப்பட்ட பிறகு தென்காசியில் நடைபெற்ற சிறுசிறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கும் திருச்சியில்தான் நிபந்தனை பிணையில் கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் குமாரபாண்டியன் கொலை மற்றும் சேட்கான் கொலை முயற்சியில் கைதாகி நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப் பட்டவர்களுக்கு மட்டும் தென்காசியில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சேட்கானை தாக்கி பிணையில் வெüயில் வந்தவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை பல்வேறு வகையில் வீதிகளில் வைத்து மிரட்டி வந்தனர். மாலை நேரங்கüல் சில முஸ்லிம் வீடுகள் மீது கல்வீச்சிலும் இறங்கினர். இவ்வாறு அவர்கள் தென்காசியில் தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தி வருவது குறித்து நாங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது புகார் களை அüத்து வந்துள்ளோம்.
நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் சேட்கானை மீண்டும் தாக்கி கொலை செய்வோம் என்று அவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மிரட்டி வருவது குறித்தும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தோம், இருதரப்பிலும் கைதாகி விடுதலை ஆனவர்கள் தொடர்ந்து தென்காசியில் இருப்பது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் என்பதையும் நாம் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம், தென்காசி டி.,எஸ்,பி.யாக இருக்கும் மயில்வாகனனும், ஆய்வாளர் சந்திரசேகரனும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களது செயல்பாடுகüனால் பதட்டம் அதிகரிக்க காரணமாகவும் செயல்பட்டனர் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
தென்காசியில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தென்காசியில் தொடர்ந்து அமைதி நிலவ தன்னாலான அனைத்து ஒத்துழைப்பு களையும் அரசுக்கு தரும் என்று உறுதி அüக்கிறோம்.
இக்கோஷ்டி மோதலுக்கு வித்திட்ட தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனன் மற்றும் ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரத்தில் விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை தென்காசியில் பணியில் அமர்த்த வேண்டும். உயிரிழந்த முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.''

தென்காசியில் தாக்குதல் நடந்தது ஏன் - எப்படி?

தென்காசியில் தாக்குதல் நடந்தது ஏன் - எப்படி?
தென்காசியில் கடந்த டிசம்பர் மாதம் இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குமார பாண்டியன் கொலைக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கும் பங்குண்டு சிலர் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டதால் இந்து முன்னணியினர் தமுமுகவின் நெல்லை மாவட்டத் தலைவர் தென்காசி மைதீன் சேட்கான் மீது கடந்த மார்ச் 2ம் தேதி கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் மயிரிழையில் மைதீன் சேட்கான் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் தொடர்புடையோர் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.

இச்சூழ்நிலையில் குமாரன் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் களும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். குமாரபாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் தென்காசியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீனில் வெளியே வந்த முஸ்லிம்களை அடிக்கடி இந்து முன்னணியினர் தாங்கள் அவர்களை கொலை செய்வது உறுதி என மிரட்டி வந்துள்ளனர். இக்கொலை மிரட்டல் குறித்து முஸ்லிம்கள் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரனிடமும், தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனத்திடமும் புகார் செய்தனர். இப்புகார் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சூழ்நிலையில் 14.8.2007 அன்று காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற 10 பேர் டாடா சுமோ காரில் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக சிலர் இரண்டு ஆட்டோக்களில் வந்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி இவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த இந்து முன்னணியைச் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் அதிகளவில் புழங்கும் கூலைக்கடை மார்க்கெட்டில் உள்ள கன்னிமாரன்கோவிலும், மார்க்கெட்டில் வேறு சில பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்தது.

காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு மார்க்கெட் வழியாக திரும்பிக் கொண்டிருந்தவர்களின் ஆட்டோவை ஏற்கனவே திட்டமிட்டபடி தயாராக இருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் இருசக்கர வாகனம் மூலம் மறித்தனர்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு தயாராக இருந்த மற்ற இந்து முன்னணியினர் முஸ்லிம்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது தாங்கள் நடத்த வைத்திருந்த அரிவாள்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் பஷீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே எதிர்தரப்பில் ஓரிருவர் தாங்கள் தற்காப்பிற்காக வைத்திருந்த ஆயுதங்கள் மூலம் பதிலடி தந்துள்ளனர். இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த சுரேந்திரன், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோருக்கு வெட்டுக்காயம் விழுந்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் நாகூர் மீரான் உயிரிழக்க, மருத்துவமனையில் ஹஸன் கனி (எ) ராஜன் உயிரிழந்துள்ளனர். இந்து முன்னணி தரப்பில் கபிலன், ரவி ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

பாளையங்கோட்டை மருத்துவமனையில் இந்து முன்னணியினரும், ஹை கிரவுண்டு மருத்துவமனையில் மற்றொரு தரப்பும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்த பஷீர், நாகூர் மீரான், ஹஸன் கனி ஆகியோரின் ஜனாஸாக்கள் நடுப்பேட்டை கபரஸ்தானில் செவ்வாய் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் தமுமுக மாநிலச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி தலைமையில் நெல்லை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் தென்காசியில் முகாமிட்டுள்ளனர். கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் தென்காசியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி கோஷ்டி மோதலை தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனனும், தென்காசி காவல் ஆய்வாளர் சந்திரசேகரனும் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அசட்டையாக இருந்ததன் காரணமாக இத்தாக்குதல் நடைபெறுவதற்கும், ஆறு பேர் உயிரிழப்பதற்கும் காரணமாக இருந்துள்ளனர். எனவே இவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் (கடித விவரம் தனியாக உள்ளது).

இச்சம்பவம் காரணமாக தென்காசியில் பதட்டம் நிலவுவதால் தென்காசி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. தென்காசிக்கு செல்லும் அனைத்தும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.