.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, November 11, 2009

அட பாவிகளா.. !: கர்கரேவின் புல்லட் புரூப் உடை மாயம்!! Karkare's Bullet Proof Jacket goes missing.


மும்பை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகளில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே அந்த சம்பவத்தின்போது அணிந்திருந்த புல்லட் புரூப் உடை காணாமல் போய்விட்டது.

இந்த புல்லட் புரூப் உடை தரமற்றதாக இருந்ததாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் அது காணாமல் போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தை மகாராஷ்டிர மாநில அரசும், காவல்துறையும் மூடி மறைக்க முயன்றதையடுத்து இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தி்ன் கீழ் விளக்கம் கேட்டு மனு செய்துள்ளார் கர்கரேவின் மனைவி கவிதா.

மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே தான் மாலேகான் வெடிகுண்டு வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியவர்.

இந்த வழக்கில் அவர் நடத்திய ஆழமான விசாரணையால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான பெண் துறவி பிரஞ்யா சிங் தாக்கூர், சாமியார் பான்டே, ராணுவ அதிகாரி உள்பட பல இந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்காக அவரை பாஜக, விஎச்பி, சிவசேனா, ஆர்எஸ்எஸ் ஆகியவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் குண்டுக்கு இறையானார் ஹேமந்த் கர்கரே. தீவிரவாதிகள் மும்பைக்குள் தாக்குதல் நடத்த ஆரம்பித்த அடுத்த 15வது நிமிடத்தில் தானே துப்பாக்கியுடன் களமிறங்கியவர் கர்கரே.

தரக் குறைவான புல்லட் புரூப் உடையை முதலில் அணிய மறுத்தவர், பின்னர் ஜூனியர் அதிகாரிகள் நிர்பந்தித்தால் அதை அணிந்து கொண்டு காமா மருத்துவமனையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை நோக்கி முன்னேறினார். ஆனால், மூன்று குண்டுகள் அவரது புல்லட் புரூப் உடையைத் துளைத்ததில் அதே இடத்தில் பலியானார்.

ஆனால், அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது புல்லட் புரூப் இல்லை. அதை யார் கழற்றினார்கள் என்றும் தெரியவில்லை. அவர் அதை அணியவே இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறினர்.

ஆனாலும் அவர் அதை அணிந்திருந்த நிலையில் தான் அதை குண்டுகள் துளைத்ததாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த உடைகளை வாங்கிய அதிகாரிகள், இந்த உடைகள் கொள்முதலுக்குக் காரணமாக இருந்த அரசியல்வாதிகளும் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை உருவானது.

இந் நிலையில் தான் கர்கரே அணிந்திருந்த அந்த புல்லட் புரூப் உடையே காணாமல் போக செய்யப்பட்டுள்ளது.

அந்த உடை எங்கே என்று கேட்டு ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா காவல்துறை அலுவலகங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அலைந்தும் விவரம் கிடைக்கவில்லை. இதையடுத்தே ஆர்டிஐ சட்டப்படி (தகவல் அறியும் உரிமை சட்டம்) அந்த உடை எங்கே என்று கேட்டு 3 மாதங்களுக்கு முன் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு நேற்று முன் தினம் அவருக்கு காவல்துறை தலைமையகத்திடமிருந்து பதில் வந்துள்ளது. அதில், அந்த உடையைக் காணவில்லை என்று சர்வசாதாராணமாக பதில் தரப்பட்டுள்ளது.

இத் தகவலை நிருபர்களிடம் தெரிவித்த கவிதா, தொடர்ந்து கூறுகையில்,

மகாராஷ்டிர காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவிலிருந்து விலகிவிட என் கணவர் திட்டமிட்டிருந்தார். காவல் துறையை விட்டு விலகிவிட்டு அமைதியான வாழ்க்கை வாழ விரும்பினார்.

அவருடன் 28 ஆண்டுகள் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தவள் நான். திடீரென ஒருநாள் அவர் இல்லை என்றாகிவிட்டது. அவர் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டாலும் அவரது நினைவு ஒரு கணமும் என்னை விட்டு அகலவில்லை, அகலாது. அவரது மறைவை இன்னும் என்னால் ஏற்க முடியவில்லை.

கைது செய்யப்பட்ட தீவிரவாதி கசாபுக்கு இன்னும் தண்டனை தரப்படவில்லை. நீதிமன்றத்தில் நடக்கும் இழுத்தடிப்புகளைப் பார்த்தால் கோபமாக வருகிறது. சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இன்னும் விசாரணையா.. இந்நேரம தீர்ப்பு வந்திருக்க வேண்டாமா?.

தீவிரவாதிகள் மும்பைக்குள் தாக்குதல் நடத்துவதாக தகவல் வந்தவுடன சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் அப்படியே விட்டுவிட்டு கையில் தனது ஷூக்களை எடுத்துக் கொண்டு காரை நோக்கி ஓடினார்... நான் போன் செய்தபோது.. நன்றாக இருக்கிறேன் என்றார். அது தான் அவரிடம் நான் கேட்ட கடைசி வார்த்தை.

நள்ளிரவில் டிவியில் பார்த்துத் தான் அவர் காயமடைந்ததை அறிந்து அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு ஓடினேன். அங்கு அவரது ஜூனியர்கள் அழுந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடனேயே எனக்கு எல்லாம் புரிந்து போய்விட்டது. அவர் இல்லை என்ற உணர்வு என்னை ஆக்கிரமித்தபோது நான் சுயநினைவை இழந்தது இன்னும் எனக்குள் நிழலாடுகிறது.

அவர் ஒரு நல்ல கணவர், நல்ல தந்தை, ஜூனியர்களுக்கு ஒரு நல்ல ரோல் மாடல், சவால்களை விரும்பும் பர்சனாலிட்டி என்றார் கவிதா.

No comments: