.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, April 17, 2009

திமுக கூட்டணியிலிருந்து ம.ம.க. வெளியேறியது ஏன்?

திமுக கூட்டணியிலிருந்து ம.ம.க. வெளியேறியது ஏன்?

வெளிவராத உண்மைகள்

நமது செய்தியாளர்

பிப்ரவரி 7 அன்று யாரும் எதிர்பாராவண்ணம் மக்கள் அலை தாம்பரத்தை முற்றுகையிட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாட்டிற்கு திரண்ட லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாநாட்டில் ம.ம.க.வின் அரசியல் பிரகடனம் தெளிவுபடுத்தப்பட்டது.

முஸ்லிம்கள் இனி அடிமை அரசியலுக்கு பணியமாட்டோம் என்றும், பிற இன மக்களின் ஆதரவோடும் பங்கேற்போடும் அரசியல் அதிகாரத்தில் பங்கேற்க துணிச்சலான முடிவுகளை எடுப்போம் என்றும் சூளுரைக்கப்பட்டது. ஒரு சீட்டு கலாச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்றதோடு, முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நாடாளுமன்றத் தொகுதிகளும் அடையாளம் காட்டப்பட்டது.


புதிய நம்பிக்கையோடு முஸ்லிம்கள் எழுந்து நின்றார்கள். இதுதான் பலரது தூக்கத்தைக் கெடுத்தது. முஸ்லிம்கள் தனித்த அடையாளத்தோடு அரசியல் ரீதியாக அணிதிரள்வது தங்களது கடந்தகால சுகத்திற்கும், எதிர்கால நம்பிக்கைக்கும் பேராபத்தாக முடிந்துவிடுமோ என பதறிவிட்டனர்.


இதுதான் மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியிலிருந்து நயமாக கழற்றிவிடப்பட்டதற்கு அடிப்படைக் காரணமாகும்.


இறுக்கம்


மாநாடு முடிந்த பின்னால் மரியாதை நிமித்தமாகக்கூட திமுகவிடமிருந்து வாழ்த்துச் செய்தி வரவில்லை. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரபலங்கள் அனைவருக்கும் நமது மாநாட்டின் அழைப்பிதழை வழங்கினோம். அவர்களிடம் ஒருவகையான இறுக்கம் நிலவியதை தாமதமாகவே நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.


தொடர்ந்த கோரிக்கை


தொடர்ந்து ம.மக.வின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்களும், தேர்தல் நிலை விளக்கக் கூட்டங்களும் சென்னை, மேலப்பாளையம், பல்லாவரம், பொதக்குடி, சேலம் என தொடர்ச்சியாக நடந்த போதெல்லாம் திமுக கூட்டணியில் நாம் நீடிக்க விரும்பியதையும், ஆறு தொகுதிகளில் நமது செல்வாக்கு இருக்கிறது. அதிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகள் நமக்குத் தரவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தோம். தமுமுக சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கோபிச்செட்டிபாளையம், கிருஷ்ணகிரி பொதுக்கூட்டங்களிலும் இதே கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.


முதல் சுற்று


இந்தப் பின்னணியில் மார்ச் 16 அன்று மு.க.ஸ்டாலின், தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்களிடம் அலைபேசியில் பேசினார். ''அண்ணே... உங்கள் கூட்டணியில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!'' என சற்றே விளையாட்டாக ஸ்டாலின் பேசியிருக்கிறார். ''எங்களுக்கு எத்தனைத் தொகுதிகள் தருவீங்க?'' என்று ஹைதர் அலி அவர்களிடம் 'தமாஷாக' ஸ்டாலின் கேட்க... நாம் உட்கார்ந்து பேசுவோம் என அவர் பதிலளித்திருக்கிறார்.


மார்ச் 17 அன்று ம.ம.க. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் அறிவாலயம் சென்று முதல்கட்ட பேச்சுவார்த்தையை மு.க. ஸ்டாலினிடம் நடத்தியுள்ளனர். அப்போது பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்களும் அருகில் இருந்துள்ளனர்.


நாங்கள் அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளிலிருந்து ஏதாவது மூன்று தொகுதிகள் தேவை என ம.ம.க. சார்பில் கேட்கப் பட்டது.


ஆதரவு மட்டும்


அவர்களோ... ''இந்த தேர்தலில் முன்பு போல் வெறுமனே ஆதரவு மட்டும் தாருங்கள். சட்டசபை தேர்தலில் மற்றதை பார்த்துக் கொள்ளலாம்'' என அதிர்ச்சி குண்டுகளை வீசியுள்ளனர்.


''அதற்கு வாய்ப்பில்லை'' என ம.ம.க. தரப்பு கூற, பிறகு, மீண்டும் சந்திப்போம் என்ற அளவிலேயே முதல் சுற்று பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.


இரண்டாவது சுற்று


பிறகு மார்ச் 27 அன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் ம.ம.க. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ், ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் பேசும்போது, பூஜ்யத்திலிருந்து புறப்பட்டு ஒரு தொகுதி என்ற நிலையிலேயே திமுக தரப்பு நின்றது. ம.ம.க. குழுவினர், 'இரண்டு தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபாவும்' என்ற நிலைக்கு வந்தனர். கடைசியாக, 'இரண்டு தொகுதிகள் தந்தால் சரி' என்ற மனநிலைக்கு ம.ம.க. தரப்பு மனதளவில் தயாராக இருந்தது.


ஆனால், திமுக தரப்பும் விடாப்பிடியாக நீடித்ததால் பேச்சுவார்த்தை இழுபறியானது. ஒரு கட்டத்தில் ஆற்காடு வீராசாமி அவர்கள் தமுமுக தலைவரின் அருகில் வந்து, 'மே 16ஆம் தேதி உங்களை எம்.பி.யாகப் பார்க்க வேண்டும்' எனக் கூற, ஒரு தொகுதி என்பதை மறை முகமாக சொல்லப்படுகிறது என்பதை பேராசிரியர் புரிந்துகொண்டு, 'இரண்டு தொகுதிகள் தான்' என உறுதியாக நிற்க, இனி பிரச்சி னையை கலைஞரிடம் பேசித் தீர்ப்பது என முடிவாகியது.


இந்த பரபரப்பால் கோபிச்செட்டி பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான பயணத்தை ரத்து செய்த பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள், கலைஞர் சந்திப்புக்காக காத்திருப்பது என முடிவு செய்தார்.


கலைஞருடன் சந்திப்பு


அன்று மாலையே கோபாலபுர இல்லத்தில் அதே ம.ம.க. குழுவினர் கலைஞரை சந்தித்தனர். தயாநிதி மாறன், மு.க.ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோர் அப்போது இருக்க, கலைஞர், பேராசிரியர் ஜவாஹி ருல்லாஹ்வோடு வழக்கம்போல் உற்சாகமாக பேசியிருக்கிறார்.


கடைசியாக ஜவாஹிருல்லாஹ் அவர்கள், 'எங்களுக்கு இரண்டு தொகுதிகள் தேவை' என்பதைச் சுட்டிக்காட்ட, அருகிலிருந்த ஆற்காட்டார் குறுக்கிட்டு, ''கலைஞர் உடல்நிலையைப் பாருங்கள்'' என பொருத்தமற்ற சூழலில் ஒரு கருத்தைக் கூறி, குழப்பத்தை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் தமுமுக தலைவரின் கைகளை பிடித்துக் கொண்டு 'ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள்' என வலியுறுத்த... உஷாரான தமுமுக தலைவர், சமுதாயத்தின் மனநிலையைக் கூறி 'இரண்டு தொகுதிகளுக்கு குறைய முடியாது' என மறுத்துவிட்டார்.


இவையாவும் கலைஞர் முன்னிலையில் நடக்கிறது. பொதுவாக வேறு
முஸ்லிம் தலைவர்களாக இருந்திருந்தால், அப்படியே உருகி, இளகி, ஆனந்தக் கண்ணீர்விட்டு ஒரு தொகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டு திரும்பியிருப்பார்கள். அந்த 'மெஸ்மரிச' நாடகத்திற்கு பலியாகி இருப்பார்கள்.
ஆனால் ம.ம.க. குழுவின் உறுதியை கலைஞரும், மற்றவர்களும் துளியும் எதிர்பார்க்கவில்லை. அந்த சந்திப்பும் லி பேச்சுவார்த்தையும் எந்த முடிவையும் எடுக்காமலேயே நிறைவுற்றது.


கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்தில் கூடியிருந்த செய்தியாளர்கள் வெளியே வந்த ம.ம.க.வினரை சூழ்ந்து கொண்டனர். அப்போது பேரா. ஜவாஹிருல்லாஹ்வுக்கு அருகில் வந்த பொன்முடி, 'சாதகமாக சொல்லுங்கள்' எனக் கூற, அவர் மறுத்துவிட்டு 'பேச்சுவார்த்தை நீடிக்கிறது' என்பதை மட்டும் கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்.


இந்நிலையில் மார்ச் 28 அன்று மாலை திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு கள் அறிவிக்கப்படவிருக்கிறது என்ற செய்தி காற்றில் பரவியது.


அன்று காலை பேரா. ஜவாஹிருல்லாஹ், கிருஷ்ணகிரிக்கு, ஐந்து
ஆம்புலன்ஸ்கள் அர்ப்பணிக்கப்பட்டு பார்வையிடும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையிலிருந்து புறப்பட்டு போய்க் கொண்டிருந்தார்.


மீண்டும் அழைப்பு


அன்று மதியம் 12 மணிக்கு அவரை ஆற்காட்டார் அலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் பேரா. ஜவாஹிருல்லாஹ்வும் தனது நிலையிலேயே உறதி காட்டினார்.


அன்று மாலை மு.க.ஸ்டாலின், பேரா.ஜவாஹிருல்லாஹ்வை அலைபேசியில் தொடர்பு கொண்டு, ''டெல்லியிலிருந்து குலாம் நபி ஆசாத் வந்துவிட்டார். திருமாவளவனும், காதர் மொய்தீனும் வர உள்ளனர். நீங்களும் வாருங்கள். தொகுதிகளை அறிவித்து விடலாம்'' என கூறியுள்ளார்.


முடியவே முடியாது


''இரண்டு தொகுதிகள்தானே...'' என பேரா. ஜவாஹிருல்லாஹ் ஸ்டாலினிடம் திருப்பிக் கேட்டிருக்கிறார். ''இல்லை. ஒரு தொகுதிதான்'' என ஸ்டாலின் பதிலளித்துள்ளார். ''அப்படியென்றால் அதை எங்களால் ஏற்க முடியாது'' எனக்கூற, ''இதை கலைஞரிடம் கூறவா?'' என ஸ்டாலின் கேட்க, ''தாராளமாக எங்கள் நிலையைச் சொல்லுங்கள்'' என பேரா. ஜவாஹிருல்லாஹ் கூற, அதோடு உரையாடல் முடிந்து விட்டது.


எந்த நிலையிலும் சமுதாய மக்களின் எதிர்பார்ப்பையும், கட்சியினரின் உறுதி யையும் விட்டுக் கொடுப்பதில்லை என்ற உறுதியோடு பேரா. ஜவாஹிருல்லாஹ் இருந்திருக்கிறார்.


அந்த பரபரப்பான சூழ்நிலையில் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் கத்தார் நாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தார். தலைவர் ஜவாஹி ருல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் கிருஷ்ணகிரி பொதுக்கூட்ட மேடையில் இருந்தனர்.


அறிவாலய பரபரப்பு


அப்போது அண்ணா அறிவாலயத்தில் கூடிநின்ற பத்திரிக்கையாளர்கள், ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை தொடர்பு கொண்டு, ''கூட்டணிக் கட்சிகள் எல்லோரும் வந்து விட்டார்கள். நீங்கள் வரவில்லையா?'' எனக் கேட்க, அவரோ, ''அங்கு என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் தகவல் தாருங்கள்'' எனக் கூறினார்.


அப்போதுதான் காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட் டோருக்கான தொகுதிகள் எண்ணிக்கைகள் அறிவிக்கப்பட்டதையும், பத்திரிக்கையாளர்கள் ''மனிதநேய மக்கள் கட்சி என்னவாயிற்று?'' என கேட்டதையும் மேடையில் இருந்தவாறே தலைவர்கள் கேட்டறிந்தனர். எல்லோருக்கும் அதிர்ச்சி! உலகமெங்கும் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு அலைபேசிகள் முற்றுகை யிட்டன.


காரணம், கலைஞரின் முகபாவம், ம.ம.க. குறித்து அவர் பதிலளித்த விதம், ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தைகளை மறைத்துவிட்டு ''அவர்களின் தலைவர்களில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளார். அவர் வந்ததும் பேச்சுவார்தை நடை பெறும்'' எனக் கூறியது, இவையாவும் முஸ்லிம்களுக்கு மத்தியில் கோப அலையை பரப்பியது.


அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்ற, மீடியாக்களோ ம.ம.க.வின் அடுத்தக்கட்ட நிலைபாடு என்ன என்பது குறித்து விதவிதமாக செய்திகளைப் பரப்பின.


குலாம்நபி ஆசாத்


கிருஷ்ணகிரி பொதுக்கூட்டம் முடித்து விட்டு இரவு 10.30 மணியளவில் தலைவர்கள் விடுதியில் தீவிரமாக சூழ்நிலையை விவாதித்துக் கொண்டிருந்த போது, குலாம் நபி ஆசாத் பேரா. ஜவாஹிருல்லாஹ் வின் அலைபேசியில் தொடர்பு கொண்டார்.


''ஒரு தொகுதியை ஏற்க முடியாதா?'' என கேட்க அவரிடம் 'முடியாது' என பேராசிரியர் மறுத்துவிட்டார். அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் ம.ம.க. குறித்து செய்திகள் இடம்பிடித்தன.


29 அன்று காலை பிரசிடென்ட் ஹோட்டலில் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், தங்கபாலு, சுதர்சனம், இளங்கோவன், வாசன் ஆகியோருடன் மனிதநேய மக்கள் கட்சி குறித்து ஆலோசனை நடத்த, அதில் ப.சிதம்பரம் அவர்கள் ம.ம.க.வின் பலம்குறித்து எடுத்து ரைத்ததாகவும், அதற்கேற்ப உளவுத்துறை, ம.ம.க. அணி மாறினால் 17 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.


அன்று மதியம் காங்கிரஸ் எம்.பி. ஹாரூண் அவர்கள் ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை தொடர்பு கொண்டு பேசினார். ''பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை, சோனியாவுடன் சந்தித்துப் பேசவைக்க குலாம் நபி ஆசாத் முயற்சி செய்கிறார். இதை தலைவரிடம் கூறுங்கள்'' என தெரிவித்தார். யோசிப் போம் என நமது தரப்பில் கூறப்பட்டது.


வெளிநாட்டிலிருந்து தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் வருகைதர வேண்டியிருந்ததால், '30ஆம் தேதி ம.ம.க.வின் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறும்' என அறிவிக்கப் பட்டதால், மீடியாக்கள் தலைமையகத்தை முற்றுகையிட்டனர்.


காங்கிரஸின் முயற்சி


உயர்நிலைக்குழு கூடி ஆய்வு நடத்திக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் எம்.பி. ஹாரூணை குலாம் நபி ஆசாத் அனுப்பிவைக்க, அவர் தலைமையகத் திற்கு வருகை தந்தார்.


கலைஞரை சந்தித்துவிட்டு வந்ததாகக் கூறியவர், ''ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும், சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும்'' என குலாம் நபி ஆசாத் கூறியதை எடுத்துரைத்தார்.


நாடாளுமன்றத்தில் தேசிய அளவி லான பிரச்சினைகளை பேசுவதற்காகத் தான் இரண்டு எம்.பி. வாய்ப்புகளை கேட்கிறோமே தவிர, ஏதாவது ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்பதோ அல்லது பதவி மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதோ எமது நோக்கமல்ல என்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஹாரூணிடம் தெளிவுபடுத்தினார்.


பின்னர் ஹாரூண் அவர்கள், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட
தொகுதிகளிலிருந்து ஒரு தொகுதி கிடைக்க மேலிடம் முயற்சி செய்யும் என்று கூறிவிட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வரவேயில்லை. திமுக தரப்போ ஏதோ ஒரு மிதப்பில் திளைக்க... அடிமை அரசியலைவிட தன்மான அரசியலே முக்கியம் என்ற நிலையில் ம.ம.க.வும் உறுதி காட்டியது. ஏப்ரல் 5 வரை இதே நிலை நீடிக்க, பின்னர் புதிய நிலையை நோக்கி ம.ம.க. நகர்ந்தது.


திமுகவின் திடீர் போக்கு


காலம் காலமாக முஸ்லிம் அமைப்புகள் ஒரு தொகுதியையே பெரிய விஷயமாகக் கருதிவரும் நிலையில், உங்க ளுக்கு இரண்டு தொகுதிகள் வேண் டுமோ? என்ற திமிர் போக்குதான் திமுக தலைமையிடம் நிலைகொண்டி ருந்தது. கலைவாணர் அரங்கில் 1500 பேரை கூட்டிய கட்சிக்கு ஒரு தொகுதி... தாம்பரத் தில் லட்சக்கணக்கானோரை திரட்டிய கட்சிக்கும் அதே ஒரு தொகுதியா? இது என்ன நியாயம்? என அரசியல் பார்வை யாளர்கள் நியாயம் பேசினர். அதில் நூற்றுக்கு நூறு நியாயமிருந்தது.


பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் விட்டுச் சென்ற 14 உபரி தொகுதிகளில் தங்கள் பலத்திற்கேற்ப குறைந்தது 2 தொகுதிகளைத் தாருங்கள் என்றுதான் ம.ம.க. கேட்டது.


சூழ்ச்சி?


திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இடம்பெற்று இருந்திருந்தால் ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு ராஜ்ய சபாவும் தாருங்கள் என்று சமாதானம் ஆகியிருப் போம். வெற்றியைத் தரக்கூடிய எல்லோரும் ஓடிவிட்ட நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற உபரி தொகுதி களிலிருந்து கூட நமக்கு கொடுக்க மனம் வரவில்லையெனில், திமுகவின் சூழ்ச்சி என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


இப்போதே இவர்களுக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்து, அதில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் பின்னர் பா.ம.க. போல பெரும் எழுச்சிப் பெற்றுவிடு வார்கள். இவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற திட்டத்திலேயே அரைமனதோடு திமுக பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது.


கலைஞரின் எண்ணம்?


தங்கள் கட்சிதான் முஸ்லிம்களின் உற்ற நண்பன் என்ற நிலையை தமுமுக உடைத்தது. எஞ்சியிருக்கும் நம்பிக்கையை ம.ம.க. தகர்த்து வருகிறது. எனவே முஸ்லிம்களின் ஒன்றுபட்ட அரசியல் எழுச்சியை நாம் அங்கீகரிப்பது தங்களது குடும்ப நலனுக்கு ஆபத்து என கலைஞர் நினைத்திருக்கிறார். அதனால் தான் ம.ம.க.வை சரியான நேரத்தில் கூட்டணியிலிருந்து கலைஞர் கழற்றி விட்டிருக்கிறார்.


வெளிநாடு சென்றிருந்த தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் சென்னை வந்ததும் 30ஆம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என நாம் காத்திருந்தோம்.


அது நடைபெறக் கூடாது என்பதற் காகவே 28ஆம் தேதியே கருணாநிதி தங்களது 21 தொகுதிகளையும் அறிவித்து, ம.ம.க.வை அவமானப்படுத்தி இருக்கிறார்.


அவர் காயிதே மில்லத்தின் சமாதிக்கு பொன்னாடை போர்த்திவிட்டு, அருகில் ஒரு பச்சைக்கொடி கூட்டத்தை வைத்துக் கொண்டால் போதும். முன்பு போல முஸ்லிம் ஓட்டு கிடைத்துவிடும் என தப்புக்கணக்கு போட்டுவிட்டார்.


ம.ம.க.வுக்கு துரோகம் செய்ததற்கான பலனை குறைந்தது 17 தொகுதிகளில் திமுகலிகாங்கிரஸ் கூட்டணி சந்திக்கப் போகிறது என்பதை மே 13 தேர்தல் விரைவில் உணர்த்தும். கலைஞரை அந்த முடிவு திருத்தும்!

No comments: