.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, October 17, 2008

இந்து அமைப்புக்கும் - மக்கள் ஓசை தினசரிக்கும் மலேசியாவில் தடை

ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை பாதுகாப்பு அமைப்புக்கும், மக்கள் ஓசை தமிழ் தினசரிக்கும் மலேசியாவில் தடை

வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2008

கோலாலம்பூர்: இந்துக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கமான ஹிண்ட்ராப் அமைப்புக்கு (Hindraf) மலேசியா அரசு தடை விதித்துள்ளது. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என அந் நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான உத்தரவை உள்துறை அமைச்சர் சையத் ஹமீ்த் அல்பார் வெளியிட்டுள்ளார். மலேசியாவில் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதைக் கண்டித்தும், தங்களுக்கும் சம உரிமைகள் கோரியும் போராட்டங்கள் நடந்து வருகி்ன்றன.

இந்தப் போராட்டங்களை ஹிண்ட்ராப் அமைப்பு தான் முன்னின்று நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு இந்த அமைப்பினர் நடத்திய அமைதிப் பேரணி மீது மலேசிய போலீசார் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தினர்.ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவ்வப்போது இந்த அமைப்பின் நிர்வாகிகளை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து வருகின்றனர்.

இந் நிலையில் தான் ஹிண்ட்ராப் அமைப்புக்கே தடையை விதித்துள்ளது மலேசியா அரசு. இது ஒரு சட்ட விரோத அமைப்பு என்றும் அறிவித்துள்ளது.இனவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு மலாய் மக்களுக்கும் பிறருக்கும் இடையே இந்த அமைப்பு இன மோதலை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த அமைப்பை தடை செய்யாவிட்டால் அது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்குமே பெரும் ஆபத்தாகிவிடும் என்றும் உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.

ஹின்ட்ராப் தலைவர்களிடம் விசாரணை:முன்னதாக கைது செய்யப்பட்ட ஹிண்ட்ராப் தலைவர்களை விடுவிக்கக் கோரி பிரதமரை சந்திக்கச் சென்ற அந்த அமைப்பின் தலைவர்கள் ஜெயதாஸ், செல்வம் மற்றும் சாந்தி ஆகியோர் மீது நேற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அத்துமீறி பிரதமர் இல்லத்தில் நுழைந்ததாகவும், கூட்டம் நடத்தியதாகவும் அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மூன்று பேரும் டாங்வாங்கி மாவட்டத்தில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஹின்ட்ராப் அமைப்பினர் அங்கு குவிந்தனர். அவர்களிடம் ஏஎஸ்பி சிட்னி க்ளைடி ஜெரிமியா விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு ஜெயதாஸ் கூறுகையில், போலீஸார் மக்கள் சேவகர்களாக இல்லை. அரசியல்வாதிகளுக்கு சாதமாக செயல்படுகின்றனர். நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. அத்துமீறல் எதுவும் செய்யவில்லை. உரிமைகளை மட்டுமே அங்கு பயன்படுத்தி நியாயம் கேட்டோம் என்றார்.

விடுதலை மனு நிராகரி்ப்பு:‌இந் நிலையில் சிறையில் இருக்கும் 5 பேரும், விசாரணை‌யி‌ன்‌றி‌ பல மாத‌ங்களாக த‌ங்க‌ளை ‌சிறை‌யி‌ல் அடை‌த்து வைப்பது ச‌ட்ட ‌விரோதமானது எ‌ன்று கூறி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்த‌னர். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மக்கள் ஓசைக்கு தடை:இதற்கிடையே மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதளான மக்கள் ஓசைக்கு அந் நாட்டு அரசு தடை விதித்துள்ளது.அந்தப் பத்திரிக்கையின் ஆண்டு உரிமத்தை மலேசியா புதுப்பிக்க மறுத்துவிட்டது. இதனால் நாளை முதல் அந்தப் பத்திரிக்கையை வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து மக்கள் ஓசையின் பொது மேலாளர் பெரியசாமி கூறுகையில், உள்துறை அமைச்சகத்திடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், எங்களது பத்திரிக்கையின் உரிமத்தை இந்த ஆண்டு புதுப்பிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.இதனால் பத்திரிக்கை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. மீறி நாங்கள் பத்திரிக்கையை வெளியிட்டால் எங்களை கைது செய்வார்கள்.

இது குறித்து உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பாரிடம் முறையிடவுள்ளோம் என்றார்.இது பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் என பல்வேறு மலேசிய அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

1 comment:

Unknown said...

ஹிந்த்ராப் என்ற இந்த இந்து அமைப்பு இந்தியாவில் நடைபெரும் அனைத்து இந்து தீவிரவாத்திற்கும் ‍பெருமளவில் நிதி திரட்டி அனுப்பிய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்துள்ள மலேசிய அரசை பாராட்டுகிறோம்.