கொலைநகரமாகும் தலைநகரம் சென்னை எஸ்.ஐ.மகன் விரட்டிக் கொலை
ஜூன் 11, 2007
பழிக்குப் பழி வாங்க சப் இன்ஸ்பெக்டரின் மகனை ஓட ஓட விரட்டிக் கொன்றது ஒரு கும்பல். சென்னை நகரில் ஒரிரு நாட்களில் மட்டும் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதால் கொலைநகரமா அல்லது தலைநகரமா என்ற பீதியில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக படுகொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஓரிரு நாட்களில் மட்டும் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் 24 மணி நேரத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டி.பி.சத்திரம் பகுதியில், நேற்று சப் இன்ஸ்பெக்டரின் மகனை பட்டப் பகலில் நடு ரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ளனர்.
டி.பி.சத்திரம் பரமேஸ்வரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். இவர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஆவார். தனது மகன் முருகன், 6 மகள்களுடன் அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டி அதில் வசித்து வருகிறார்.
முருகனின் மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு சந்தோஷ், ஆகாஷ் என இரு மகன்கள் உள்ளனர். முருகனுக்கு பல சமூக விரோதிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவரைப் பழி வாங்க பலரும் அப்பகுதியில் காத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் முன்பு நடந்த ஒரு ரவுடி கொலையில் முருகனுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் வெள்ளை ரவி என்பவர் கொல்லப்பட்டார். அவர், முருகனின் நண்பர் எனக் கூறப்படுகிறது. இதற்குப் பழி வாங்கும் விதமாக பிரேம்குமார் என்பவர் கடத்திச் சென்று கொல்லப்பட்டார்.
பிரேம்குமார் கொலைக்கு முருகன்தான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரைப் பழிவாங்க பிரேம்குமாரின் கூட்டாளிகள் முயற்சித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை தனது பைக்கில் வீட்டிலிருந்து கிளம்பினார் முருகன். அப்போது நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் முருகனை சுற்றி வளைத்தது. இதையடுத்து பைக்கை விட்டு இறங்கி ஓடினார் முருகன். ஆனால் அந்தக் கும்பல் விடாமல் துரத்திச் சென்றது.
மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் பட்டப் பகலில் ரவுடிக் கும்பல் முருகனைத் துரத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக அந்தக் கும்பல் வெட்டித் தள்ளியது. இதில் முருகன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
தனது தந்தை வெட்டிக் கொல்லப்பட்டதை முருகனின் மகன் ஆகாஷ் நேரில் பார்த்து விட்டு கூச்சல் போட்டுள்ளான். இதையடுத்து முருகனின் தாயார் பூபதி வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்தார்.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். முருகன் கொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. பரபரப்பு நிலவியது.
கொலையாளிகளில் நரேஷ், சரவணன் ஆகியோரது அடையாளங்கள் தெரிய வந்துள்ளன. இவர்களும் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். மற்ற இருவரும் யார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்களும் இதே பகுதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
முருகனைக் கொன்றவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2 நாள்களுக்கு முன்தான் ரவுடிகள் வேட்டையை சென்னை காவல்துறை தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாளிலேயே ஒரு படுகொலை நடந்துள்ளது சென்னை போலீஸாருக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.
தொடரும் படுகொலைகளால் சென்னை நகர மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment